மின்கம்பத்தை இடித்து தள்ளிய கனிமவள லாரி
குழித்துறை, அக்.21- கனிமவள லாரிகளால் குமரி மாவட்டத்தில் தினசரி விபத்துக்கள் ஏற்பட்டு பலர் மரணமடைவதோடு ,ஏராளமானவர்கள் கை கால்கள் உடைந்து ஊனம்அடைந்தும் வருகின்றனர். எனவே இந்த கனிம வள லாரிகளை கட்டுப்படுத்த வேண்டுமென பொதுமக்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதை அடுத்து மாவட்ட ஆட்சியர் அழகு மீனா,மாவட்ட எஸ்.பி ஸ்டாலின் ஆகியோர் நேர கட்டுப்பாடு உட்பட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர் .. இந்நிலையில் செவ்வாய்க்கிழமை அதிகாலையில் கேரளாவிற்கு கனரக லாரியில் கனிம வளத்தை ஏற்றி கொண்டு சென்றபோது, குழித்துறையை அடுத்த கல்லுக்கட்டி பகுதியில் திடீரென லாரி நிலைதடுமாறி இடது பக்கம் நின்ற மின்கம்பத்தை பயங்கர சத்தத்துடன் இடித்து தள்ளிவிட்டு வீட்டின் காம்பவுண்ட் சுவரை இடித்து தள்ளியபடி நின்றது. அதிகாலை என்பதால் அப்பகுதியில் ஆள் நடமாட்டம் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. இது குறித்து களியக்காவிளை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
