tamilnadu

img

14 ஆண்டுகளுக்கு பிறகு தீப்பெட்டி விலை உயர்வு

சென்னை, டிச. 1 - தமிழகத்தில் 14 ஆண்டுகளுக்கு பிறகு தீப்பெட்டி விலை உயர்வு புதன்கி ழமை முதல் அமலுக்கு வந்தது. தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில், திருவேங்கடம், விருதுநகர் மாவட்டம் விருதுநகர், சிவகாசி, வேலூர் மாவட்டம் குடியாத்தம், கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் பகுதியில் தீப்பெட்டி உற்பத்தி செய்யப்படுகிறது. 50 முழு இயந்திர தீப்பெட்டி ஆலை, 300 பகுதி நேர இயந்திர தீப்பெட்டி ஆலை மற்றும் அவற்றை சார்ந்துள்ள 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தீப்பெட்டி உற்பத்தி ஆலைகள் தமிழகத்தில் செயல்பட்டு வருகின்றன. மேலும் தீப்பெட்டி தொழிலில் நேரடி யாகவும், மறைமுகமாகவும் சுமார் 6 லட்சம் தொழிலாளர்கள் பயன்பெற்று வருகின்றனர். இதில் 90 விழுக்காடு பெண்கள் பணிபுரிகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் தீப்பெட்டி இந்தி யாவில் உள்ள பல்வேறு மாநிலங்கள் மட்டுமின்றி பல்வேறு வெளிநாடுக ளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

கடந்த சில மாதங்களாக தீப்பெட்டி உற்பத்திக்கு தேவையான முக்கிய  மூலப்பொருட்களான பாஸ்பரஸ், குளோரேட், மெழுகு, அட்டை, பேப்பர் என அனைத்து பொருட்களின் விலையும் பல மடங்கு உயர்ந்துள்ளது. கடந்த மாதம் வரை 410 ரூபாய்க்கு ஒரு கிலோ பாஸ்பரஸ் 850 ரூபாயாக  உயர்ந்துள்ளது. அதேபோல் மெழுகு ஒரு கிலொ 62 ரூபாயில் இருந்து 85 ரூபாயாகவும், குளோரைடு 70 ரூபாயி லிருந்து 82 ரூபாயாகவும், அட்டை 42  ரூபாயில் இருந்து ரூபாய் 55 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது. இது தவிர பெட்ரோல், டீசல் விலை  உயர்ந்து கொண்டே வருகிறது. இதனால் வாகனங்களின் வாடகைக் கட்டணம் உயர்ந்து வருவதால் தீப்பெட்டி உற்பத்தி செலவு அதிகரித்துள்ளதாக தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். ஆகையால் தீப்பெட்டி விலை 1 ரூபாயில் இருந்து 2 ரூபாயாக உயர்த்துவது என உற்பத்தியாளர்கள் முடிவு செய்து டிசம்பர் 1ஆம் தேதி முதல் விலை உயர்வு அமலுக்கு வரும் என்று ஏற்கனவே அறிவித்திருந்தனர். அதன்படி புதன்கிழமை (டிச. 1) முதல்  தீப்பெட்டி விலை உயர்வு அமலுக்கு வந்துள்ளது. இந்த விலை உயர்வு நியாயமானது என சமூக ஆர்வலர்கள் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

;