உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்
பாபநாசம், அக். 18- உங்களைத் தேடி உங்கள் ஊரில் வேளாண்மைத் துறை சார்ந்த அனைத்து துறை அலுவலர்கள் பங்கேற்ற திட்ட விளக்கக் கூட்டம் அம்மாப்பேட்டை அருகே கீழ கொருக்கப்பட்டுவில் நடந்தது. இதில் அம்மாப் பேட்டை வேளாண்மை உதவி இயக்குநர் மோகன், உதவி அலுவலர் ஹேமாவதி, தோட்டக் கலைத் துறை உதவி அலுவலர் பிரதீப், வேளாண்மை பொறியியல் துறை உதவிப் பொறியாளர் கண்ணபிரான், கால்நடை உதவி மருத்துவர் சாலியமங்கலம் உள்ளிட்டோர் பங்கேற்று துறை சார்ந்த விளக்கமளித்தனர்.
புகழூர் நகராட்சி மன்ற சாதாரண கூட்டம்
கரூர், அக். 18- கரூர் மாவட்டம் புகழூர் நகராட்சி மன்ற சாதாரண கூட்டம், அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது, கூட்டத்திற்கு நகர்மன்ற துணை தலைவர் பிரதாபன் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 22 ஆவது வார்டு நகர மன்ற உறுப்பினர் இந்துமதி அரவிந்த், “நகராட்சிக்குச் சொந்தமான காந்தி திருமண மண்டபத்தின் வாடகையை 25 ஆயிரம் ரூபாயாக உயர்த்துவது ஏற்புடையதல்ல. ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் குறைந்த வாடகையே நிர்ணயிக்கப்பட வேண்டும். மண்டபத்தின் பராமரிப்பினை தனியாருக்குக் கொடுக்கும் நடவடிக்கையை கைவிட்டு நகராட்சி நிர்வாகமே நடத்திட வேண்டும். நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு, நகராட்சி நிர்வாகம் ஒப்பந்ததாரர்களின் மூலமாக தீபாவளி போனஸ் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மாதந்தோறும் நகராட்சி கூட்டம் நடத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார். மேலும், தனது வார்டுக்கு உட்பட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கூட்டத்தில் பேசினார்.
கொலை வழக்கில் 3 பேருக்கு ஆயுள் தண்டனை
தஞ்சாவூர், அக். 18-  தஞ்சாவூர் கரந்தை ராஜாராமன் மடத்துத் தெருவைச் சேர்ந்தவர் பிரதீப்(23). அப்பள வியாபாரியான இவரிடம் கஞ்சா வாங்குவதற்காக கரந்தை குளத்துமேட்டுத் தெருவைச் சேர்ந்த விக்னேஷ்(28), கொண்டிராஜபாளையம் ஜமாலியா சந்தைச் சேர்ந்த சிவகுமார்(27), வடக்கு வாசல் சுண்ணாம்பு கால்வாய் தெருவைச் சேர்ந்த சூர்யா (23) ஆகியோர் 2023, மார்ச் 25 ஆம் தேதி அவரது வீட்டுக்குச் சென்றனர்.  அப்போது, பிரதீப் தன்னிடம் கஞ்சா இல்லை எனக் கூறியதால், ஆத்திரமடைந்த விக்னேஷ், சிவகுமார், சூர்யா ஆகியோர் அவரை அரிவாளால் வெட்டினர். இதனால், பலத்த காயமடைந்த பிரதீப் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து, கிழக்கு காவல் நிலையத்தினர் வழக்குப் பதிந்து விக்னேஷ், சிவகுமார், சூர்யா ஆகியோரை கைது செய்து, தஞ்சாவூர் கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர்.  இந்த வழக்கை நீதிபதி ஜி. சுந்தரராஜன் விசாரித்து விக்னேஷ், சிவகுமார், சூர்யா ஆகியோருக்கு தலா ஆயுள் சிறை தண்டனையும், தலா ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தார்.
 
