tamilnadu

இந்தியா - நியூஸிலாந்து இன்று பலப்பரீட்சை

இந்தியா - நியூஸிலாந்து இன்று பலப்பரீட்சை

ரிக்கெட் உலகில் மினி உலகக்கோப்பை என அழைக்கப்படும் சாம்பியன்ஸ் டிராபி தொடரின் 9ஆவது சீசன் பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கியது. பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் (இந்திய அணியின் ஆட்டங்கள் மட்டும்) நடைபெற்று வரும் இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூஸிலாந்து, தென் ஆப்பிரிக்கா, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட 8 நாடுகள் பங்கேற்றன. லீக் ஆட்டங்களின் முடிவில் இந்தியா, ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின.

வரலாறு படைக்குமா இந்தியா?

அரையிறுதி ஆட்டத்தின் முடிவில் பலமான ஆஸ்திரேலிய அணியை இந்தியாவும், தென் ஆப்பிரிக்காவை நியூஸிலாந்தும் வீழ்த்தி இறுதிக்கு முன்னேறின. இத்தகைய சூழ்நிலை யில், விடுமுறை நாளான ஞாயிறன்று நடைபெறும் இறுதி ஆட்டத்தில் இந்தியா - நியூஸிலாந்து அணிகள் மினி உலகக்கோப்பைக்காக பலப்பரீட்சை நடத்துகின்றன. 3ஆவது முறையாக கோப்பையை கைப்பற்றும் முனைப்பில் இந்திய அணியும் (ஏற்கெனவே 2002, 2013), 2ஆவது முறையாக கோப்பையை கைப்பற்றும் முனைப்பில் நியூஸிலாந்து அணியும் (2000) என இரு அணிகளும் கோப்பை மீது குறியாக களமிறங்குவதால் இந்த ஆட்டம் பரபரப்பாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அணி கோப்பையை கைப்பற்றினால் அதிக முறை மினி உலகக்கோப்பையை வென்ற நாடு என்ற பெருமையை பெறும் என்பது குறிப்பிடத்தக்கது. யாருக்கு சாதகம்? நியூஸிலாந்து அணியை விட இந்திய அணி பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங் என 3 பிரிவுகளிலும் மிக பலமாக உள்ளது. மினி உலகக்கோப்பை யில் மற்ற அணிகள் பாகிஸ்தான், துபாய் என 2 மைதானங்களிலும் விளையாடின. ஆனால் இந்திய அணி துபாய் மைதானத்தில் மட்டுமே விளையாடி வருகிறது. ஒரே மைதானத்தில் தொடர்ந்து விளையாடி வருவதால் இந்திய அணிக்கு மினி உலகக்கோப்பையை கைப்பற்ற கூடுதல் சாதகத்தை ஏற்படுத்தும். ஆனாலும் ரச்சின், வில்லியம்சன், கான்வே, பிலிப்ஸ், டாம் லதாம், சான்ட்னர் உள்ளிட்ட நியூஸிலாந்து வீரர்களை இந்தியா கவனமாக கையாண்டால் எளிதாக கோப்பையை வெல்லும். சற்று சொதப்பினால் சிக்கல் தான் என்பது குறிப்பிடத்தக்கது.  

பரிசுத்தொகை

சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு  - ரூ.19.52 கோடி இரண்டாம் இடம் பிடிக்கும் அணிக்கு - ரூ. 9.76 கோடி அரையிறுதியில் வெளியேறிய அணிகள் - ரூ. 4.88 கோடி (2 அணிகளுக்கு) 5 மற்றும் 6ஆம் இடம் - ரூ. 3.05 கோடி (2 அணிகளுக்கு) 7 மற்றும் 8ஆம் இடம்- ரூ.1 கோடி (2 அணிகளுக்கு) ஒவ்வொரு போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகளுக்கு - ரூ. 29.63 லட்சம்