tamilnadu

4 சுங்கச்சாவடிகளில் அரசுப் பேருந்துகள் செல்வதற்கான தடை நிறுத்திவைப்பு

4 சுங்கச்சாவடிகளில் அரசுப் பேருந்துகள் செல்வதற்கான தடை நிறுத்திவைப்பு

சென்னை, ஜூலை 10 - தென்மாவட்ட நெடுஞ்சாலை களில் உள்ள 4 சுங்கச்சாவடிகளில் ஜூலை 10 ஆம் தேதி முதல் அரசுப் பேருந்துகளை அனுமதிக்கக் கூடாது  என்ற உத்தரவை ஜூலை 31 வரை நிறுத்தி வைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தென்மாவட்ட நெடுஞ்சாலைகளில் உள்ள கப்பலூர், எட்டூர்வட்டம், சாலைப்புதூர், நாங்கு நேரி ஆகிய சுங்கச்சாவடிகளை நிர்வகிக்கும் தனியார் நிறுவனங்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் சுங்கச்சாவடி களுக்கு செலுத்த வேண்டிய ரூ. 276 கோடியை நிலுவை வைத்துள்ளதாகக் குறிப்பிட்டு, இந்த நிலுவைத் தொகையை விரைந்து விடு விக்குமாறு அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு உத்தரவிட வேண்டும் என கோரப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், அரசுப் போக்குவரத்துக் கழகம் நிலுவைத் தொகையைச் செலுத்தாமல் பிரச்சனையை நீட்டித்துக் கொண்டே போனால் நிலுவைத் தொகை ரூ. 300 கோடி முதல் ரூ. 400 கோடிக்கு மேல் உயர்ந்து விடும் என்று குறிப்பிட்டு, சுங்கச்சாவடியில் அரசுப் பேருந்து போக்குவரத்தை நிறுத்தி தீவிர நடவடிக்கை மேற்கொள்ளாவிட்டால் நிலுவைத் தொகையை வசூலிக்க முடியாது என தெரிவித்தார். தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கு ரைஞர் ஜெ. ரவீந்திரன், இந்தப் பிரச்சனை தொடர்பாக நல்ல தீர்வுடன் வருவதாகவும், எனவே, வழக்கை வியாழக்கிழமை விசாரிக்க கோரியும் முறையிட்டார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி விசாரணையை ஒத்திவைத்தார். இந்த நிலையில், தமிழக அரசு செய்த முறையீட்டு மனுவை விசாரித்த நீதிமன்றம், அரசுப் பேருந்துகளுக்குத் தடை பிறப்பித்த உத்தரவை ஜூலை 31 வரை நிறுத்திவைக்க உத்தரவிட்டுள்ளது.