tamilnadu

img

தீக்கதிரைப் பரப்புவோம்! மக்களைத் திரட்டுவோம்! - என்.சங்கரய்யா

முதுபெரும் விடுதலைப் போராட்ட வீரரும், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியை உருவாக்கிய மகத்தான தலைவர்களில் ஒருவரும், கட்சியின் அதிகாரப்பூர்வ ஏடாக தீக்கதிர் வெளி வரத் துவங்கிய போது, முதல் ஆசிரியராகவும் பணியாற்றிய தோழர் என்.சங்கரய்யா தீக்கதிரின் நெல்லைப் பதிப்பை வாழ்த்தி அனுப்பி யுள்ள செய்தி: தீக்கதிர் நாளேட்டின் ஐந்தாவது பதிப்பாக நெல்லைப் பதிப்பினை செப்டம்பர் 22 ஆம் தேதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் தோழர் பிரகாஷ் காரத் துவக்கி வைக்க இருப்பதை அறிந்து, மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்கள் விடுதலைப் போராட்டத்தில் மிக முக்கியப் பங்கினை வகித்த பகுதிகளாகும். தொழிலாளி வர்க்க இயக்கத்திலும், விவ சாயிகள் இயக்கத்திலும், புரட்சிகர இயக்கத்தை வளர்ப்பதிலும் இந்த  மாவட்டங்கள் முக்கியமான பங்கு வகித்து வந்துள்ளன. இப்போது, இந்த மாவட்டங்களை உள்ளடக்கிய தீக்கதிர் நெல்லைப் பதிப்பு  வெளியிடப்படுவது

அந்த வட்டாரங்களில் மக்கள் இயக்கத்தையும், தொழிலாளர்-விவசாயிகள் இயக்கத்தையும் கம்யூனிஸ்ட் இயக்கத்தை யும் வளர்க்கப் பெரிதும் பயன்படும் என்று நான் நம்புகிறேன். தொழிலாளர் இயக்கத்தை தமிழ்நாட்டில் வளர்த்தெடுப்பதில் பெரும்  பங்கு வகித்த தீக்கதிர் நாளேட்டை விரிவுபடுத்த வேண்டியது அவசிய மாகும். பல்லாயிரக்கணக்கான மக்களிடம் இந்த ஏட்டை கொண்டு செல்வோம். மன்றங்களிலும், படிப்பகங்களிலும் மக்கள் கூடும் இடங்களி லும் தீக்கதிரை வாசிக்கச் செய்வது அவசியமாகும். கட்சிப் பத்திரிகை என்பது கட்சியின் அமைப்பாளர் என்று மாமேதை லெனின் கூறியதற்கேற்ப, தீக்கதிர் என்பது ஒரு பெரும் ஆயுதம் என்பதை மனதில் கொண்டு பிற்போக்கு சக்திகளுக்கு எதிராகவும், வகுப்பு வாத சக்திகளுக்கு எதிராகவும் பிளவுவாத சக்திகளுக்கு எதிராகவும் இந்தியாவில் இடதுசாரி ஜனநாயக சக்திகள் வலிமை பெறவும் போராட வேண்டுமென தோழர்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன். இந்திய விடுதலைப் போராட்டத்தில் கம்யூனிஸ்ட் இயக்கம் மகத்தான பங்கினை வகித்துள்ளது என்பது அனைவருக்கும் தெரியும். விடுதலைப் போராட்டத்தின் தொடர்ச்சியாக கம்யூனிஸ்டுகள் தொடர்ந்து மக்களுக் காகப் போராடி வருகின்றனர். அந்தச் செய்திகளைத் தாங்கி வெளிவரும் தீக்கதிர் ஏட்டினை பரவலாகக் கொண்டு செல்வோம். மக்கள் சக்தியைத் திரட்டுவோம் என்று கேட்டுக் கொள்கிறேன். இன்குலாப் ஜிந்தாபாத்!