கரூரில் இலவச புற்றுநோய் கண்டறிதல் சிறப்பு முகாம்
கரூர், செப்.12- இலவசமாக புற்றுநோய் கண்டறிதல் சிறப்பு முகாம், தாந்தோணிமலையில் நடைபெற்றது. ஹூண்டாய் நிறுவனம் புற்றுநோய் குறித்து ஆராய்ச்சி செய்வதற்கும், புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்தும் நோக்கிலும், சென்னை ஐஐடி நிறுவனத்திற்கு நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது. புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், பொதுமக்களுக்கு இலவசமாக புற்றுநோய் பரிசோதனைகளை மேற்கொள்ளவும் சென்னை ஐஐடி யுடன் இணைந்து கார்கினோஸ் புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனம் தமிழகம் முழுவதும் ஈடுபட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, கரூர் தந்தோணிமலை அருகில் உள்ள லபோனி ஜவுளி ஏற்றுமதி நிறுவனம் தங்களது நிறுவனத்தில் பணிபுரியும் நூற்றுக்கும் மேற்பட்டோர் பயனடையும் வகையில் கார்கினோஸ் புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனத்துடன் இணைந்து, புற்றுநோய் கண்டறிதல் இலவச சிறப்பு முகாமை, இரண்டு நாட்களுக்கு லபோனி ஜவுளி ஏற்றுமதி நிறுவனம் ஏற்பாடு செய்து இருந்தது. லபோனி ஜவுளி ஏற்றுமதி நிறுவனத்தின் உரிமையாளர் ஜி.ஆனந்தகுமார் தலைமை வகித்தார். மருத்துவர்கள் மாலினிசந்திரசேகர், தேவுபிரகாஷ் ஆகியோர் தலைமையிலான மருத்துவ குழுவினர் பெண்களுக்கு மார்பக புற்றுநோய், கர்ப்பப்பை வாய் புற்றுநோய் பரிசோதனைகளையும், ஆண்களுக்கு குடல் புற்று நோய்க்கான பரிசோதனைகளையும் மேற்கொண்டனர்.