tamilnadu

img

புதுப்பேட்டை மீனவர் கிராமத்தில் கடற்கரையோர வசதிகள் அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டு விழா

புதுப்பேட்டை மீனவர் கிராமத்தில்  கடற்கரையோர வசதிகள் அமைக்கும்  பணிக்கு அடிக்கல் நாட்டு விழா

மயிலாடுதுறை, ஜூலை 26-  மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வட்டம், புதுப்பேட்டை மீனவர் கிராமத்தில், காலநிலையை எதிர்கொள்ளும் வகையில் கடற்கரையோரம் வசதிகளை அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. தரங்கம்பாடி வட்டம், புதுப்பேட்டை மீனவ கிராமத்தில் 1,713 மீனவர்கள் வசித்து வருகின்றனர். இக்கிராமத்தில் 7 விசைப்படகுகள், 90 இயந்திரம் பொருத்தப்பட்ட கண்ணாடி நாரிழைப்படகுள் மற்றும் நாட்டு படகுகள் மூலம் மீனவர்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் மீன்களை சுகாதாரமான முறையில் விற்பனை செய்வதற்கும், மீன்பிடி வலைகளை சரி செய்வதற்கும் போதுமான வசதிகள் இல்லாமல் சிரமப்பட்டு வந்தனர். மேலும், கடற்கரையோரப் பகுதியில் வசதிகளை அமைத்துத் தர வலியுறுத்தி அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.  இதனைத் தொடர்ந்து, மீனவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் மீன் வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, மீன் பதப்படுத்தும் கூடம், வலை பின்னும் கூடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழாவில், பூம்புகார் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் நிவேதா எம்.முருகன் பங்கேற்று அடிக்கல் நாட்டி பணியை தொடங்கி வைத்தார். இவ்விழாவில், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் மோகன்குமார், உதவி செயற்பொறியாளர் ராஜசேகரன், மாவட்ட துணைச் செயலாளர் ஞானவேலன் உள்ளிட்ட மீன் வளத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.