tamilnadu

ஒமிக்ரான்

இந்தியாவில் நுழைந்தது

கொரோனா தொற்றின் புதிய  திரிபான ஒமிக்ரான் வைரஸ் குறுகிய காலத்தில் 30 நாடுகளுக்கு பரவி 375 பேருக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.  இதனால் உலக நாடுகள் பல எல்லைகளை மூடி கட்டுப்பாடுகளை விதிக்க தயாராகி வரும் நிலையில், இந்தியாவிலும் ஒமிக்ரான் வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கர்நாடகத்தை சேர்ந்த இருவருக்கு ஒமிக்ரான் பாதிப்பு இருப்பது பரிசோதனையில் உறுதியாகியுள்ளதாக ஒன்றிய சுகாதார அமைச்சகத்தின் இணைச் செயலாளர் லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார். ஒமிக்ரான் பாதிப்புக்குளான இருவரும் ஆண்கள் எனவும் 66,46 வயதில் இருப்பவர்கள் என கர்நாடகா சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்ட இருவருடன் தொடர்பில் இருந்த அனைவரும் கண்டுபிடிக்கப்பட்டு பரிசோதனையுடன் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.  பீதி அடைய வேண்டாம் இந்தியாவில் ஒமிக்ரான் தொற்று ஏற்பட்டுள்ளதால் பீதி அடையத் தேவையில்லை. ஆனால் விழிப்புணர்வு அவசியம். கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுங்கள். கூட்டங்களைத் தவிர்க்கவும் என ஒன்றிய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

30 நாடுகளில் பரவியது

உலகின் 23 நாடுகளில் ஒமிக்ரான் வகை கொரோனா வைரஸ் தொற்று பரவியிருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.  தென் ஆப்பிரிக்காவில் ஒமிக்ரான் என்ற புதிய வகை கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. இந்நிலையில் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா, சவூதி அரேபியா, நைஜீரியா உள்ளிட்ட  30 நாடு களுக்கு இந்த ஒமிக்ரான் பரவியிருப்பதாக உலக சுகாதார அமைப்பு உறுதி செய்துள்ளது.  இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் என்று  இதன் தலைவர் அதானோம் காப்ரியேஸ்  தெரிவித்துள்ளார். ஒமிக்ரான் பரவாமல் தடுக்க அனைத்து நாடுகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இதனிடையே அமெரிக்காவில் முதன் முறையாக தென் ஆப்பிரிக்க பயணி ஒருவரிடம் ஒமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அவருக்கு பாதிப்பு மிதமாகத்தான் இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இந்தியாவில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. மும்பை, தில்லி போன்ற நகரங்களுக்கு வரும் வெளிநாட்ட வர்கள் குறிப்பாக பாதிப்பு அதிகம் உள்ள நாடுகளில் இருந்து வந்தவர்களிடம் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. இதில் 6 பேர் கொரோனா பாஸிட்டிவ் என்று கண்டறியப் பட்டுள்ளது. ஆனால் அது ஒமிக்ரான் வகையா என்பது முடிவாகவில்லை.

அறிகுறிகள் இல்லை

போட்ஸ்வானா நாட்டில் ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானோரிடம் எந்த அறிகுறிகளும் கண்டறியப்படவில்லை என்று   அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தெற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான  போட்ஸ்வானா சுகாதாரத்துறையின் பொறுப்பு இயக்குநர் பமீலா ஸ்மித் லாரன்ஸ் கூறு கையில், ஒமிக்ரான் உறுதி செய்யப்பட்ட 19 பேரில் ஒன்று அல்லது இரண்டு பேருக்கு மட்டுமே லேசான காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் தென்பட்டன. வெளிநாடுகளில் இருந்து போட்ஸ்வா னாவிற்கு வந்தவர்களுக்கே முதன் முதலில் ஒமிக்ரான் உறுதி செய்யப்பட்டது. ஐரோப்பிய நாடுகள் உள்பட பல நாடுகள் தென் ஆப்பிரிக்கா மற்றும் போட்ஸ்வானாவிற்கு விமான சேவைகளை ரத்து செய்தது மோசமான ஒன்று என்று தெரிவித்தார். 

முதலில் நெதர்லாந்து

தென் ஆப்ரிக்காவிற்கு முன்பே நெதர்லாந்தில் ஒமிக்ரான் வகை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் இருந்ததாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.  நவம்பர் 24ஆம் தேதி தென் ஆப்ரிக்காவில் முதல் முறையாக ஒமிக்ரான் வகை கொரோனா உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் நெதர்லாந்தில் நவம்பர் 19 மற்றும் 23ஆம் தேதி கொரோனா சாம்பிள் சேகரிக்கப்பட்ட இரு நோயாளிகளுக்கு ஒமிக்ரான் தொற்று இருந்தது தற்போது தெரியவந்துள்ளது. நெதர்லாந்து மட்டுமின்றி, பெல்ஜியம் மற்றும் ஜெர்மனியிலும், தென் ஆப்ரிக்காவிற்கு முன்பே ஒமிக்ரான் வகை கொரோனா பாதிப்புகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுவரை ஒமிக்ரான் வகை கொரோனாவால் உயிரிழப்புகள் நேராத போதும், ஒமிக்ரான் தொற்று பரவும் தன்மை, ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களை அது மீண்டும் தாக்குமா? என்பது குறித்து ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன.

சோதனையே சிறந்தது

அமெரிக்காவில் கலிஃபோர்னியாவை சோ்ந்த ஒருவருக்கும், வடக்கு ஆப்பிரிக்க நாடொன்றிலிருந்து வந்த ஒருவருக்கு சவூதி அரேபியாவிலும், தென் ஆப்பிரிக்காவிலிருந்து வந்த இருவருக்கு நைஜீரியாவிலும் ஒமிக்ரான் வகை தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில்  ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அந்தோணியா குட்டரெஸ்  கூறுகையில், ஒமிக்ரான் பரவலைக் கட்டுப்படுத்த பயணத் தடைகள் மட்டும்  நன்மை செய்து விடாது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சர்வதேச விமானப் போக்குவரத்தை தடை செய்யவும் சில நாடுகள் ஆலோசித்து வருகிற வேளையில் அதனால் எந்தப் பயனும் இல்லை.  விமானப் போக்குவரத்து தடை என்பது நியாயமற்றது. தொடர்ந்து பயணிகளை சோதனைக்குட்படுத்துவதே சிறந்தது  என்று தெரிவித்தார். நாங்கள் தொடக்க கட்ட ஆராய்ச்சியில் தான் உள்ளோம். ஒமிக்ரான் வைரஸ், லேசான அளவிலேயே உடல் நலத்தைப் பாதிக்கிறது என்ற முடிவுக்கு வந்து விட முடியாது என முன்னணி தென்னாப்பிரிக்கா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.  பெரும்பாலும் இளைய வயதினரிடையே தொற்று பாதிப்பு இருந்தாலும் வயதானவர்களிடம் ஒமிக்ரான் தாக்கம் உள்ளதா என்பதைக் கண்காணித்து வருகிறோம் என்று தேசிய தொற்று நோய் தடுப்பு நிறுவனத்தின் பொதுசுகாதார கண்காணிப்பு பிரிவின் தலைவர் மிச்செல் க்ரூம் கூறினார்.

ரூ.3,900 வரை  கட்டணம்

மகாராஷ்டிரா அரசு, கொரோனா பரிசோதனை மற்றும் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டிய வழிகாட்டுதல்களில் கடுமையான விதிகளை அமல்படுத்தியுள்ளது. இதனால் தங்களது இணைப்பு விமானங்களைத் தவறவிடுவதற்கான நிலை இருப்பதாக  பயணிகள் கவலை தெரிவித்துள்ளனர். மகாராஷ்டிராவுக்கு வரும் வெளிநாட்டுப் பயணிகள்  அனைவரும் ஆர்டி-பிசிஆர் சோதனை மேற்கொள்ள வேண்டும் என அம்மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தில்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில், ஆர்டிபிசிஆர் சோதனைக்கு பயணிகளிடம் ரூ.500 வசூலிக்கப்படுகிறது  ரேபிட் பிசிஆர் பரிசோதனையை மேற்கொள்ள வேண்டியவர்கள் விமான நிலையத்தில் ரூ.3,900 செலுத்த வேண்டும்.




 

;