காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம்: நடைமுறை பிரச்சனைகளை தீர்க்க வேண்டும்
டாஸ்மாக் ஊழியர் சம்மேளனம் கோரிக்கை சென்னை: காலி மது பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தில் உள்ள நடைமுறை பிரச்சனைகளை தீர்த்த பிறகே, அமலாக்க வேண்டுமென்று டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேளனம்-சிஐடியு கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து சம்மேளன பொதுச் செயலா ளர் கே.திருச்செல்வன் விடுத்துள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது: டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டிலை விற்கும் போது, அதிகபட்ச விலையோடு கூடுதலாக ரூ.10 நுகர்வோரிடம் வசூலிக்க வேண்டும். காலி பாட்டிலை நுகர்வோர் திருப்பி தரும் போது, கூடுத லாக பெற்ற 10 ரூபாயை திருப்பித் தரும் திட்டத்தை அனைத்து மாவட்டங்களிலும் அமல் படுத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தர விட்டது. இத்திட்டம் கடை ஊழியர்களுக்கு கூடுதல் வேலைப்பளுவை ஏற்படுத்தியுள்ளது. நுகர் வோரிடம் பெறப்படும் காலி மதுபாட்டில்கள் அசுத்தமாகவும், சுகாதாரமின்றியும் இருப்ப தால் அதை கையாளும் ஊழியர்கள் தொற்று நோய்க்கு ஆளாகியுள்ளனர். காலி பாட்டில்களை சேகரித்து வைக்க கோணி, பெட்டி, பாட்டில்களை கையாள கையுறை என எந்த ஏற்பாட்டையும் நிர்வாகம் செய்து தரவில்லை. பாட்டில்களை கடைக்கு வெளியே சேகரித்து வைக்கும் போது விஷ ஜந்துக்கள் மூலம் உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலையும் உள்ளது. காலி மதுபாட்டில்களை பாதுகாப்பாக இருப்பு வைப்பதற்கான இடவசதி கடைகளில் இல்லை. கடைக்கு வெளியே மூட்டை கட்டி வைத் தால், அதை திருடி கடையில் கொடுத்து மீண்டும் பணம் கேட்டு மிரட்டுகின்றனர். காலி பாட்டில்கள் மூட்டைகளில் உடைந்தால் அதற் கான இழப்பு தொகைக்கு ஊழியர்களே பொறுப்பேற்க வேண்டியுள்ளது. இதை எதிர்த்து டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேளனம் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கில், நடைமுறை பிரச்சனை களுக்கு தீர்வு காண மேலாண்மை இயக்குநர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளதாக நிர்வாகம் தெரிவித்தது. ஆனால் அந்த குழுவை கூட்டாமல், பிரச்சனைகளுக்கு தீர்வு காணாமல் உள்ளது. இந்நிலையில். செப்.1 ஆம் தேதி முதல் சிவகங்கை, மதுரை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை அமல்படுத்தவுள்ளது கண்டிக்கத்தக்கது. நீதிமன்ற உத்தரவை காட்டி திட்டத்தை அமல்படுத்தும் நிர்வாகம், டாஸ்மாக் ஊழியர் களுக்கு சாதகமாக வரும் உத்தரவுகளை அமல்படுத்தாமல் மேல்முறையீடு செய்கிறது. நிர்வாகத்தின் தன்னிச்சையான நடவடிக் கைக்கு எதிராக ஊழியர்கள் தன்னெழுச்சியான போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதனை கவனத்தில் கொண்டு அரசு மாற்று ஏற்பாடு செய்துவிட்டு திட்டத்தை அமல்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.