இ-ஆதார் செயலி விரைவில் அறிமுகம்!
பயனர்கள் தங்கள் பெயர், முகவரி மற்றும் பிறந்த தேதி போன்ற முக்கிய தனிப்பட்ட விவரங்களை தங்கள் ஸ்மார்ட்போன்களிலிருந்தே புதுப்பிக்க உதவும் ஒரு புதிய ஆதார் மொபைல் செயலி உருவாக்கப்பட்டு வருகிறது. ஆதார் விவரங்களில் ஏதேனும் திருத்தம் இருந்தால் அதை அப்டேட் செய்ய தற்போது ஆதார் சேவை மையம் அல்லது இ சேவை மையம் மூலமாகவும், ஆன்லைன் வழியாகவும் மேற்கொள்ள முடியும். இந்நிலையில், ஒன்றிய அரசு, ஆதார் பயனர்களுக்காக ஒரு மொபைல் செயலியை உருவாக்கி வருகிறது. இந்த மொபைல் செயலியை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (Unique Identification Authority of India) உருவாக்கி வருகிறது. இந்த செயலி மூலமாக ஆதார் பயனர்கள், தங்களின் முகவரி உள்ளிட்ட விவரங்களை அப்டேட் செய்துகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. செயற்கை நுண்ணறிவு (AI), முக அடையாளம் (Face ID) தொழில்நுட்பங்கள் இதில் இணைக்கப்பட்டுள்ளதாகவும், டிஜிட்டல் முறையில் ஆவணங்களைச் சரிபார்ப்பதன் மூலம், அடையாள மோசடிகள் பெருமளவில் குறையும் என்றும் கூறப்படுகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் இந்த மொபைல் செயலி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மெட்டாவின் புதிய ஸ்மார்ட் கண்ணாடி அறிமுகம்!
மெட்டா நிறுவனம், அதன் புதிய ஸ்மார்ட் கண்ணாடியை செப்டம்பர் 17 அன்று வெளியிட்டது. மெட்டா நிறுவனம் தனது கனெக்ட் மாநாட்டில், தொழில்நுட்ப ஆர்வலர்களை வியக்க வைக்கும் வகையில் புதிய ஸ்மார்ட் கண்ணாடியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஸ்மார்ட் கண்ணாடியின் வலது லென்ஸில் ஒரு திரை உள்ளது. இந்த லென்ஸ் மூலமாக குறுஞ்செய்திகள், வீடியோ அழைப்புகள், புகைப்படங்களை பார்க்கவும், இசைக் கட்டுப்பாடுகள் மற்றும் கேமராவிற்கான டிஜிட்டல் வ்யூஃபைண்டர் ஆகியவற்றை இயக்கவும் முடியும். இதற்காக மெட்டா நியூரோன் பேண்ட் (Meta Neural Band) என்ற புதிய சாதனம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதை மணிக்கட்டில் அணிந்து கொண்டால் போதும், நம் கைவிரல்களின் அசைவுகளைப் புரிந்துகொண்டு கண்ணாடியை இயக்கும். கண்ணாடியின் பேட்டரி ஒருமுறை சார்ஜ் செய்தால் 6 மணி நேரம் நீடிக்கும். அதனுடன் வரும் சார்ஜிங் கேஸ் கூடுதலாக 30 மணிநேர பயன்பாட்டை வழங்குகிறது. நியூரோன் பேண்ட் 18 மணிநேர பேட்டரி ஆயுளையும், ஐ.பி.எக்ஸ்7 வாட்டர் ரேட்டிங்கையும் கொண்டுள்ளது.
கூகுளின் புதிய டெஸ்க்டாப் செயலி அறிமுகம்!
கூகுள் நிறுவனம், விண்டோஸுக்கான புதிய டெஸ்க்டாப் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது, இந்த செயலி மூலம் பயனர்கள் தங்களின் கணினியில் உள்ள கோப்புகள், Google Drive-இல் சேமித்துள்ளவை, நிறுவப்பட்ட பயன்பாடுகள் மற்றும் இணையத்தில் உள்ள தகவல்களை ஒரே இடத்தில் விரைவாக தேடிக்கொள்ளலாம். இந்த செயலி தற்போது கூகுள் லேப்ஸ் (Google Labs) மூலம் பயனர்களுக்கு சோதனை முறையில் வழங்கப்பட்டுள்ளது. இதில் Alt + Space என்ற shortcut-ஐ அழுத்தினால், Search Bar திறக்கப்படும். இதில், கூகுள் லென்ஸ் ஒருங்கிணைப்பு மூலம், திரையில் உள்ள உரை அல்லது படங்களை மொழிபெயர்க்கவும், நகலெடுக்கவும் அல்லது இணையத்தில் தேடவும் முடியும். இதில் ஏஐ அடிப்படையிலான ஓவர்வியூவ்ஸ் மற்றும் ஜெமினி ஏஐ அம்சங்களும் இணைக்கப்பட்டுள்ளன. இந்த செயலி தற்போது விண்டோஸ் 10 மற்றும் அதற்குப் பிறகு வந்த பதிப்புகளில் ஆங்கில மொழியில் மட்டுமே செயல்படும்.