புற்று நோயாளிகளுக்கு உதவி வரும் ஜோமன் பவுண்டேஷனுக்கு நிதி அளிப்பு
புதுக்கோட்டை, ஜூலை 11- புற்று நோயாளிகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு உதவி வருகின்ற ஜோமன் பவுண்டேஷனுக்கு ரோட்டரி சங்கத்தின் சார்பில் செவ்வாய்க்கிழமை நிதி உதவி வழங்கப்பட்டது. புதுக்கோட்டை ரோட்டரி சங்கத்தின் 73 ஆவது பணியேற்பு விழா புதுக்கோட்டையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் 2025-26 ஆண்டுக்கான தலைவராக எஸ்.இளங்கோ, செயலாளராக சாகுல்ஹமீது பொருளாளராக காசிராஜன் ஆகியோர் பொறுப்பு ஏற்றுக்கொண்டனர். இதனைத் தொடர்ந்து, புற்று நோயாளிகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு உதவி வருகிற ஜோமன் பவுண்டேஷனுக்கு ரூ.40,000 நிதியினை சங்கத் தலைவர் எஸ்.இளங்கோ வழங்க, ஜோமன் பவுண்டேஷன் நிர்வாகி ஜோ. டெய்சி ராணி பெற்றுக் கொண்டார். மேலும், அன்பாலயம் முதியோர் இல்லத்திற்கு ரூ.10,000, இன்பநாதன் என்ற ஏழை மாணவருக்கு ரூ.5000 நிதி உதவியும் வழங்கப்பட்டது. தொடர்ந்து ரோட்டரி சங்கத்தின் நாளிதழான புதுகை மணியை முன்னாள் ரோட்டரி ஆளுநர் ஏ.எல்.சொக்கலிங்கம் வெளியிட, பாரதி கல்வி குழும தாளாளர் ஏ.லியோ பெலிக்ஸ் லூயிஸ் பெற்றுக்கொண்டார். நிகழ்ச்சியில் ஏராளமானோர் பங்கேற்றனர்.