தீபாவளி சிறுசேமிப்பு மோசடி: எஸ்.பி அலுவலகத்தில் பாதிக்கப்பட்டோர் புகார்
தஞ்சாவூர், ஆக. 30- தீபாவளி சிறுசேமிப்பு திட்ட பண மோசடி செய்த நபர்கள் மீது நட வடிக்கை எடுக்குமாறு, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவ லகத்தில், பாதிக்கப்பட்டோர் வெள்ளி யன்று புகார் அளித்தனர். தஞ்சாவூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், பாதிக்கப்பட்ட பெண்கள் உள்பட 15 பேர் வெள்ளிக்கிழமை அளித்த மனுவில், “தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி கலைஞர் நகர், புதுக்கோட்டை சாலை கற்பகம் நகரில், தனியார் நிறுவனத்தை நடத்தி வந்த தம்பதியினர், தீபாவளி, கிறிஸ்துமஸ், புத்தாண்டு சிறுசேமிப்புத் திட்டம், தீபாவளி சிறுசேமிப்பு குலுக்கல் கூப்பன் திட்டம் நடத்துகிறோம் எனக் கூறி மாதந்தோறும் ரூ.500, ரூ.1,000 என வசூல் செய்தனர். இதில், ரூ.500 கொடுப்பவர்களுக்கு 12 மாதங்களில் ரூ.7 ஆயிரத்து 500-ம், ரூ.1,000 கொடுப்ப வர்களுக்கு ரூ.15 ஆயிரமும் பெற்றுக் கொள்ளலாம் எனவும் கூறினர். இதனை நம்பி, 11 பேர் தீபாவளி சிறுசேமிப்பு திட்டத்தில் சேர்ந்து ரூ.70 லட்சம் செலுத்தினோம். ஆகஸ்ட் மாதம் பணத்தை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் எனக் கூறியதன் அடிப்படையில், அவர்களது கைப்பே சிக்கு தொடர்பு கொள்ளும்போது, அணைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. வீட்டுக்குச் சென்று தேடியபோது இருவரும் இல்லை. பின்னர், ஏற்கெனவே மோசடி வழக்கில் தம்பதியினர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதேபோல், எங்களிடமும் தீபாவளி சிறுசேமிப்பு திட்டம் என்ற பெயரில் பணத்தைப் பெற்று மோசடி செய்திருப்பதை அறிந்தோம். ஏழ்மை நிலையில் உள்ள நாங்கள் வாழ்வாதார மின்றி சிரமமான நிலையில் உள்ளதுடன், எங்களைப் போன்று இன்னும் ஏராளமானோர் பாதிக்கப் பட்டுள்ளனர். எனவே, தொடர்புடைய தம்பதி மீது நடவடிக்கை எடுத்து, எங்களது பணத்தை பெற்றுத் தருமாறு கேட்டுக் கொள்கிறோம்’’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.