tamilnadu

திருச்சி விரைவு செய்திகள்

செப்.30 தஞ்சாவூரில் மாற்றுத்திறனாளிகள்  குறைதீர் கூட்டம் 

தஞ்சாவூர், செப். 28-  தஞ்சாவூர் மாவட்டத்தைச் சார்ந்த மாற்றுத் திறனாளிகளுக்காக, மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் தலைமையில், மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம், தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் வளாக மக்கள் குறைதீர்க்கும் கூட்ட அரங்கத்தில் செப்.30 (செவ்வாய்க்கிழமை) அன்று பகல் 12 மணிக்கு நடைபெற உள்ளது. இதில், அனைத்து துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொள்வார்கள். எனவே, தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள மாற்றுத்திறனாளிகள், தங்களது தேவைகளை கோரிக்கை மனுவாக மாவட்ட ஆட்சிய்ரிடம் வழங்கி பயன்பெறலாம் என மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குப்பைக் கிடங்கு அமைக்க கோரிக்கை

பாபநாசம், செப்.28- தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே வழுத்தூரில் 20 தெருக்கள் உள்ளன. 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இங்கு தினமும் அகற்றப்படும் குப்பைகளை கொட்ட கிடங்கு இல்லை. இதனால் ஆங்காங்கே குப்பைகள் கொட்டப்படுகின்றன. மெயின் சாலை அருகில் உள்ள கைலாசநாதர் கோவில் இடம் ஒரு ஏக்கருக்கும் மேல் பரப்பளவு உள்ளது. இங்கும் குப்பைகள் கொட்டப்படுகின்றன.  இந்த இடத்தில் மழை நீரும் தேங்கி நிற்கிறது. இதனருகில் குடியிருப்புகள் உள்ளதால் சுற்றுச் சூழலும் பாதிக்கப்படுகிறது. மாவட்ட நிர்வாகம் இதில் கவனம் செலுத்தி, வழுத்தூரில் அரசு இடம் ஆக்கிரமிப்பில் இருந்தால், அதில் குப்பைக் கிடங்கிற்கு இடம் ஒதுக்கலாம். இதேபோன்று கைலாச நாதர் கோவில் இடத்தில் திருமண மண்டபம் கட்டலாம் என்கின்றனர் அப்பகுதி பொதுமக்கள்.

போக்குவரத்து தொழிலாளர்களுக்கு  சிஐடியு தோழமை சங்கங்கள் ஆதரவு

கும்பகோணம் செப். 28- 
அரசு போக்குவரத்து ஓய்வூதியர்களும், தொழிலாளி வர்க்கத்தின் முன்னணிப் படையாக உள்ள போக்குவரத்து ஊழியர்களுக்கு கொடுத்த தேர்தல்கால வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தியும், பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்தக் கோரியும் கும்பகோணம் அரசு போக்குவரத்து தலைமை அலுவலகம் முன்பு போராட்டம் 41 ஆவது நாளாக காத்திருப்புப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். 
இந்நிலையில், அரசு போக்குவரத்து ஊழியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தியும், அரசு கவனத்தை ஈர்க்கவும், சிஐடியு அனைத்து தொழிற்சங்கங்களான அரசு ஊழியர் சங்கம், ஓய்வூதியர் சங்கம், ஆட்டோ தொழிலாளர் சங்கம், நெசவாளர் சங்கம் உள்ளிட்ட சகோதர தொழிற்சங்கத்தினர் காத்திருப்பு ஆதரவு ஆர்ப்பாட்டம் நடத்தினர். 
அரசு போக்குவரத்து தொழிலாளர் சம்மேளன பொதுச் செயலாளர் மணிமாறன், ஸ்தாபக தலைவர் மனோகரன், சிஐடியு மாவட்டச் செயலாளர் கண்ணன், தலைவர் ஜெயபால், துணைத் தலைவர் செங்குட்டுவன் தாமோதரன், ஓய்வூதியர் சங்க பொறுப்பாளர்கள் ராஜகோபாலன், பக்கிரிசாமி, நெசவாளர் சங்க பொறுப்பாளர்கள் சேகர், ஆட்டோ சங்க மாவட்டச் செயலாளர் ஜெயக்குமார் உள்ளிட்ட அனைத்து சிஐடியு சங்கத்தினர் கலந்து கொண்டனர்.

கரூரில்  உயிரிழந்தவர்களுக்கு  மமக தலைவர் இரங்கல் 

பாபநாசம், செப்-28-    மனித நேய மக்கள் கட்சியின் தலைவரும், பாபநாசம் எம்.எல்.ஏ வுமான ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில், “தவெக தலைவர் விஜய் கரூரில் பரப்புரை மேற்கொண்ட வேலுச்சாமிபுரத்தில், ஆயிரக்கணக்கானோர் திரண்டிருந்தனர். பகல் 12 மணிக்கு நடை பெறுவதாக அறிவிக்கப்பட்ட கூட்டம் இரவு 7 மணிக்கு தொடங்கியுள்ளது. அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக மக்கள் பலர் மயக்கமடைந்து விழுந்திருக்கின்றனர். தொடர்ச்சியாக பலர் பாதிப்புக்குள்ளானதும், மருத்துவமனைக்குக் கொண்டு சென்று, சிகிச்சை பலன் இல்லாமல் 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த தகவல் மிகுந்த வேதனையை, அதிர்ச்சியை அளிக்கிறது. 50-க்கும் மேற்பட்டோர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.  சிகிச்சை பெற்று வரும் அனைவரும் முழு நலம் பெற்று, இல்லம் திரும்புவதற்குப் பிரார்த்தனை செய்கிறேன். இந்த துயரச் சம்பவம் தமிழ்நாட்டு மக்களைப் பெரிய அளவில் உலுக்கி, துயரத்தில் ஆழ்த்தி இருக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என கூறப்பட்டுள்ளது.

அக்.7 முதல் காத்திருப்பு போராட்டம்: கேங் மேன்கள் முடிவு

திருச்சிராப்பள்ளி, செப். 28- தமிழக மின் வாரியத்தில் 10,000 கேங்மேன் பணியாளர்கள், ரூ.15,000 சம்பளம் பெற்று 4 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார்கள். மின் நுகர்வோருக்கான, மின் தடை நீக்குதல், மின் இணைப்பு வழங்குதல், புதிய கம்பம் நடுதல், கம்பி இழுப்பு உட்பட அத்தனை பணிகளையும் செய்யும் இவர்களில் பெரும்பாலானோர், பட்டப் படிப்புகள், தொழில்நுட்ப படிப்புகளான பி.இ, எம்.இ உட்பட்ட பட்டம் பெற்றவர்களாக உள்ளனர்.  ஆனால் மின் வாரியம் இவர்களை நிரந்தரப் படுத்தாமல், கள உதவியாளராக ஆக்காமல் உள்முக தேர்வு நடத்தி பதவி உயர்வு வழங்காமல் உள்ளது. இது சம்பந்தமாக மின்வாரிய தலைவர் உட்பட அனைத்து அதிகாரிகளிடம் கோரிக்கை அளித்தும், 4 ஆண்டுகளாக நிலைமை மாறவில்லை. அதிக வேலைப் பளுவுக்கு உட்படுத்தப்படுவதால், 4 ஆண்டுகளில் 100 பேர் உயிர் பலி ஆகியும், கையால் இழந்தும் உள்ளனர்.  எனவே கேங்மேன் பணியாளர்களை கள உதவியாளராக்க வேண்டும். உள்முக தேர்வில் நிபந்தனையின்றி பதவி உயர்வு வழங்க வேண்டும். 1.12.2019 முதல் மற்ற மின்வாரிய ஊழியர்கள் அனைவருக்கும் வழங்கப்பட்ட 6 சதவீத ஊதிய உயர்வை கேங்மேன் பணியாளர்களுக்கு வழங்க வேண்டும் உள்ளிட்ட நீண்ட நாள் கோரிக்கைகள் நிறைவேறும் வரை 10,000 கேங்மேன் பணியாளர்கள்,  வேலையை முற்றிலும் புறக்கணித்து வரும் அக்டோபர் 7 அன்று முதல், தமிழகத்தின் அனைத்து மண்டல தலைமை அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுவது என்று, திருச்சி மண்டல தலைமை பொறியாளர் அலுவலகத்தில் நடந்த கேங்மேன்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.  இக்கூட்டத்தில் சிஐடியு மாநில துணைத் தலைவர் ரெங்கராஜன், வட்டச் செயலாளர்கள் நடராஜன், பழனியாண்டி, ராதா, எஸ்.கே. செல்வராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

செப்.30 இல் குடிமனைப் பட்டா கேட்டு  மனு கொடுக்கும் போராட்டம் 

தஞ்சாவூர், செப். 26-  தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் சார்பில், செப்.30 ஆம் தேதி , மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு குடிமனை, குடிமனைப் பட்டா, அனுபவ நிலங்களுக்கு பட்டா கேட்டு மனு கொடுத்து ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இதனையொட்டி, புதன்கிழமை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பட்டுக்கோட்டை அலுவலகத்தில், பட்டுக்கோட்டை, மதுக்கூர், திருவோணம், பேராவூரணி, சேதுபாவாசத்திரம் ஆகிய ஒன்றியங்களின் கமிட்டி முன்னணி உறுப்பினர்கள் பங்கேற்ற திட்டமிடல் கூட்டம், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட துணைச் செயலாளர் ஜாக்குலின் மேரி தலைமையில் நடைபெற்றது.  தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் என்.வி. கண்ணன், சிபிஎம் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஆர்.மனோகரன், பட்டுக்கோட்டை ஒன்றியச் செயலாளர் எஸ்.கந்தசாமி, சங்க நிர்வாகிகள் பட்டுக்கோட்டை மகாலிங்கம், சேதுபாவாசத்திரம் ஆர்.எஸ்.வேலுச்சாமி, மதுக்கூர் எம்.அய்யநாதன், ஏ.எம்.வேதாச்சலம், திருவோணம் கே.ராமசாமி, கோவிந்தராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  செப்.30 ஆம் தேதி தஞ்சையில் நடைபெறும் போராட்டத்தில் இப்பகுதிகளைச் சேர்ந்த 2000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பது என முடிவு செய்யப்பட்டது.