திருப்பூர், டிச. 21 - திருப்பூர் மாவட்டம் உடுமலைப் பேட்டை மலை பகுதியில் உள்ள குழிப்பட்டி தொடக்கப் பள்ளிக் கட்டிடம் சிதிலமடைந்த நிலையில் உள்ளது. இதனால் இப்பள்ளிக்கூடம் செயல் படாத நிலையில் மலைவாழ் குழந்தை களின் கல்வி வாய்ப்பு கேள்விக் குறியாகி உள்ளது. உடுமலைப்பேட்டை மலைப் பகுதி யில் 15 செட்டில்மெண்டுகள் ( குடியிருப்பு கள்) உள்ளன. இதில் குழிப்பட்டி செட்டில் மெண்டில் மலைவாழ் குழந்தைகள் படிப்பதற்கு தொடக்கப் பள்ளி உள்ளது. ஐந்தாம் வகுப்பு வரை உள்ள இப்பள்ளி யில் 60 குழந்தைகள் படித்து வந்தனர். ஆனால் பள்ளிக் கட்டிடம் சிதிலம் அடைந்திருப்பதால் கடந்த பல ஆண்டு களாக செயல்படாமல் முடக்கி வைக்கப்பட்டுள்ளது. இதனால் இப்பள்ளியில் படித்து வந்த குழந்தை களில் ஓரளவு வாய்ப்புள்ள குடும்பங் களைச் சேர்ந்தோர் சமவெளிப் பகுதி யிலும், வால்பாறை உள்ளிட்ட பகுதிகளி லும் உள்ள பள்ளிகளுக்குச் சென்று படிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு ஒரு பகுதி குழந்தைகள் மட்டுமே நெடுந்தூரம் சென்று படிக்க முடியும் நிலையில் ஏராளமான குழந்தைகள் பள்ளிக்குச் செல்வது தடைபட்டுள்ளது. குழிப்பட்டி பள்ளியை சீரமைத்து செயல்படுத்தினால் இந்த குழந்தைகள் மீண்டும் தொடக்கக் கல்வி பெறக்கூடிய வாய்ப்பு ஏற்படும். எனவே உடனடியாக இப்பள்ளியை சீர மைக்க மாவட்ட நிர்வாகம் உரிய நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று மலை வாழ் மக்கள் வலியுறுத்துகின்றனர்.
ஆசிரியர்கள் தங்கும் அறையை சீரமைத்திடுக!
அத்துடன் மலைப் பகுதியில் உள்ள இப்பள்ளிக்கு உடுமலை பகுதியில் இருந்து சுமார் 7 கிலோமீட்டர் தூரம் கடினமான பாதையில் நடந்து செல்ல வேண்டியிருக்கிறது. இல்லாவிட்டால் அப்பர் ஆழியாறு பாதை வழியாக பல கிலோமீட்டர் தூரம் சுற்றித்தான் வாகனத்தில் இங்கு வந்து சேர முடியும். இதனால் சமவெளி பகுதியில் வேலை செய்யக்கூடிய ஆசிரியர்கள் இப்பள்ளிக்கு வந்து செல்வதில் மிகவும் சிரமம் ஏற்படுகிறது. ஒரு முறை மலைக்கு ஆசிரியர் வந்துவிட்டால் சில நாட்களுக்கு அங்கேயே தங்கி யிருந்து கல்வி கற்பித்துவிட்டு பின்னர்தான் அங்கிருந்து வெளியேறி வரக்கூடிய நிலை உள்ளது. எனவே ஆசிரியர்கள் வருவதற்கும் தயங்கு கின்றனர். ஆசிரியர்கள் தங்கு வதற்கான அறையும் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளதாகவும், ஆனால் அந்த அறையும் மோசமாக சேத மடைந்திருப்பதாகவும் இந்த செட்டில்மெண்ட் மக்கள் கூறுகின்றனர்.
படித்த இளைஞர்களுக்கு ஆசிரியப் பயிற்சி அளித்திடுக!
அதேசமயம் இங்கேயே மேல்நிலைக் கல்வி மற்றும் பட்டப்படிப்பு படித்த மலைவாழ் இளைஞர்கள் உள்ள னர். அவர்களுக்கு ஆசிரியப் பயிற்சி அளித்தால் அவர்களே இப்பள்ளி ஆசிரியர்களாக செயல்படும் வாய்ப்பு ஏற்படும். எனவே இது குறித்தும் மாநில பள்ளிக்கல்வித் துறை பரிசீலனை செய்து சிறப்பு அனுமதி வழங்க வேண்டும். மலைவாழ் மக்கள் வசிக்கும் இடத்தில் உள்ள இந்த பள்ளியை தொடர்ந்து இயக்குவதற்கு நடவடிக்கை எடுத்தால் இங்குள்ள குழந்தைகள் மிகவும் பயனடைவர். கல்வி வாய்ப்பு மறுக்கப்பட்டு காடு, மலைகளில் இதர வேலைக்குச் செல்லக்கூடிய மலைவாழ் சிறார்களின் நிலையை மாற்றி கல்வி கற்பிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம் ஒரு தலைமுறை குழந்தைகளின் கல்வி வாய்ப்பு மேலும் உறுதிப்படுத்தப்படும் என்றும் குழிப்பட்டி மலை கிராம மக்கள் வலியுறுத்துகின்றனர்.