புதிதாக விண்ணப்பித்தோருக்கு டிச. 15 முதல் ரூ. 1000 துணை முதல்வர் உதயநிதி அறிவிப்பு
சென்னை, அக். 16 - தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் மகளிர் உரிமைத் தொகைக்கு, புதிதாக விண்ணப்பித்தவர்களின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, தகுதி உடையவர்களுக்கு டிசம்பர் 15 முதல் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். மகளிரின் பொருளாதார விடுதலைக்கு வழிவகுக்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் மூலம் ஒவ்வொரு மாதமும் சுமார் 1.14 கோடி மகளிருக்கு மாதம் ரூ. 1000 வழங்கப்பட்டு வருவதாகவும், இதுவரை சுமார் 26 மாதங்களில் ஒவ்வொரு மகளிருக்கும் 26,000 ரூபாய் அரசு சார்பில் கொடுக்கப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம், தமிழக அரசு சுமார் ரூபாய் 30 ஆயிரம் கோடியை மகளிர் உரிமைத் தொகைக்காக வழங்கியிருக்கிறது. தற்போது, தளர்த்தப்பட்ட விதிகளின் அடிப்படையில், ‘உங்களுடன் ஸ்டாலின் முகாம்’களில் புதிதாக விண்ணப்பித்த 28 லட்சம் மகளிரின் விண்ணப்பங்கள் நவம்பர் 30-க்குள் வருவாய்த்துறை மூலம் ஆய்வு செய்யப்பட்டு, தகுதியான மகளிருக்கு வரும் டிசம்பர் 15 முதல் கலைஞர் மகளிர் உரிமைத் தொகையை வழங்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முடிவெடுத்திருப்பதாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.