tamilnadu

பல ஆண்டுகளாக வீடு கட்டி குடியிருக்கும்  திருமயம் லெனின் நகர் மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும் சிபிஎம் புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர் வலியுறுத்தல்

பல ஆண்டுகளாக வீடு கட்டி குடியிருக்கும்  திருமயம் லெனின் நகர் மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும் சிபிஎம் புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர் வலியுறுத்தல்

புதுக்கோட்டை, ஜூலை 26-  புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் ஏழை, எளிய மக்கள் பல  ஆண்டுகாலமாக பயன்பாடற்ற நீர்நிலை புறம்போக்குகளில் வீடு கட்டி குடியிருந்து வருகின்றனர். அரசு அடிப்படை வாழ்வாதார தேவைகளான குடிநீர், மின்சாரம், சாலை வசதி, தெருவிளக்கு உளிட்டவற்றை செய்து கொடுத்துள்ளது.  ஏழை, எளிய மக்கள் மீது காழ்புணர்வு கொண்ட சிலர், கெட்ட எண்ணத்தில் நீதிமன்றங்களை பயன்படுத்தி, நீர் நிலைகளை ஆக்கிரமித்துள்ளனர் என வழக்குத் தொடுத்து பல ஆயிரக்கணக்கான மக்களின் வீடுகளை இடித்து அப்புறப்படுத்தி, அவர்களை நடுத்தெருவில் நிறுத்த முயற்சித்து வருகின்றனர்.  சட்டப்படியான ஆய்வுகளை மேற்கொள்ளாமல் அரசு அதிகாரிகள் உடனடியாக மக்கள் வெளியேற வேண்டும் என நோட்டீஸ் கொடுப்பது வழக்கமாகியுள்ளது.   திருமயம் லெனின் நகரில் 40 ஆண்டுகளுக்கு மேலாக சர்வே எண் :597/2 இல் கைவிடப்பட்ட நீர்நிலை புறம்போக்கில் 40-க்கும் மேற்பட்ட ஏழை, எளிய மக்கள்  வீடு கட்டி குடியிருந்து வருகின்றனர். இந்நிலையில் இக்குடியிருப்புகளை  ஆக்கிரமிப்பாக அறிவித்து, வசிப்பிடங்களில் உள்ள அனைவரும் காலி செய்து  கொள்ள வேண்டும் என நீர்வளத்துறை, பாசனப்பிரிவு உதவி செயற்பொறியாளர்  தொடர்ந்து நோட்டீஸ் கொடுத்து வருவதால், மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.  தொடர்ச்சியாக மாவட்ட ஆட்சியரை சந்தித்து நிலைமையை எடுத்து கூறியும்,  நீதிமன்ற உத்தரவு என்ற பெயரில் தொடர்ந்து மக்களை பாதிக்கும் அறிவிப்பை  வழங்குவதும். மக்களை அச்சுறுத்துவதும் ஏற்புடையதல்ல என்பதை சுட்டிக்காட்ட  விரும்புகிறோம். இதே இடத்தில் அரசுக்குச் சொந்தமான கூட்டுறவு சங்க  கட்டிடம், வேளாண்மைத் துறை கட்டிடம், அரசு மாணவர் விடுதி கட்டிடம்,  கால்நடை மருத்துவமனை கட்டிடம், தொலைத் தொடர்புத் துறை கட்டிடம், நீதி  மன்றக் கட்டிடம் அமைந்துள்ளது. ஆனால் மக்கள் வசிக்கும் சர்வே எண் 297/2  மட்டும் தரை வகைமாற்றம் செய்யப்படாமல் வைக்கப்பட்டுள்ளது.   வசிப்பிடங்களில் உள்ள மக்கள் வரி வாய்தா உட்பட செலுத்தி வந்துள்ளனர். அரசே ஆக்கிரமித்து பல கட்டிடங்களை கட்டியுள்ள  நிலையில் பயன்பாடற்று கைவிடப்பட்ட நீர்நிலை என்பது உறுதியாகிறது. இந்நிலையில் வறுமையில் வாடும் மக்கள் தங்களின் மொத்த உழைப்பையும்  செலுத்தி வீடு அமைத்து குடியிருந்து வருகின்றனர். இதுவரை நீர்வளத்துறையில்  இருந்து நீதிமன்ற உத்தரவு என்ற பெயரில் பலமுறை நோட்டீஸ் கொடுத்துள்ளனர். மிகவும் வாழ்வாதாரம் பாதித்துள்ள மக்களை இது மேலும்  பாதிப்படைய வைக்கும் செயலாகும்.   தினக்கூலிகளாக வாழ்ந்து வரும் திக்கற்ற  மக்களின் வாழ்வாதாரத்தை கணக்கில் கொண்டு, பல அலுவலகங்களுக்கு அதே  இடத்தில் அரசு நிலம் கையகப்படுத்தி தரை வகைமாற்றம் செய்துள்ளது போலவே  மக்களின் வசிப்பிடங்களுக்கும் தரை வகைமாற்றம் செய்து பட்டா  வழங்கிடவேண்டும்.  எந்த விதமான மாற்று இடமோ, குடியிருப்போ வழங்காமல் 40-க்கும் மேற்பட்ட குடும்பங்களின் வீடுகளை இடித்து அப்புறப்படுத்த எடுக்கும் முயற்சி எவ்வகையிலும் ஏற்புடையதல்ல. மாவட்ட நிர்வாகமும், தமிழ்நாடு அரசும் ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது.  மேலும், மாவட்டம் முழுவதும் இப்படியான நிலை இருந்து வருகின்றது. மாவட்ட ஆட்சியர், நீர்நிலை கண்காணிப்புக் குழு அமைத்து, பயன்பாடற்ற நீர்நிலைகளில் குடியிருந்து வரும் மக்களுக்கு உரிய அடிப்படையில் மாற்று வழிமுறைகளை அல்லது பட்டா வழங்கும் ஏற்பாடுகளை செய்திட வேண்டும். வீடுகளை இடித்து வெளியேற்றினால் மக்கள் நிலைமை மேலும் பாதிக்கப்பட்டுவிடும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ்.சங்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.