சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் சிறை
உறவினர்கள் 6 பேருக்கும் தண்டனை விதிப்பு
புதுக்கோட்டை, ஆக. 31- 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து மாவட்ட மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. சிறார் திருமணம் செய்து வைத்ததாக அவரது குடும்பத்தினருக்கும் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 9 ஆம் வகுப்பு படித்து வந்த 14 வயது சிறுமி ஒருவரை, புதுக்கோட்டை மாவட்டம் மேடுகாட்டுப்பட்டியைச் சேர்ந்த செந்தில் (34) என்பவர் கடந்த 2015 டிசம்பர் மாதம் முதல், பல முறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். தொடர்ந்து, அவருக்கு கொலை மிரட்டல் விடுத்து, தனது வீட்டுக்குக் கடத்திச் சென்று 2016 செப்டம்பர் 21 ஆம் தேதி சிறார் திருமணம் செய்துள்ளார். இதற்கு, செந்திலின் தாய் தங்கமணி, சகோதரர்கள் அழகர், ஏழுமலை, இவர்களின் மனைவிகள் ராதா, கௌரி மற்றும் உறவினரான மணப்பாறையைச் சேர்ந்த குமார் ஆகியோர் உடந்தையாக இருந்து வீட்டிலேயே திருமணம் செய்து வைத்துள்ளனர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை அளித்த புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த இலுப்பூர் அனைத்து மகளிர் காவல்நிலைய காவல்துறையினர், 7 பேரையும் கைது செய்தனர். இந்த வழக்கு, புதுக்கோட்டை மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணையின் முடிவில், நீதிபதி கனகராஜ் வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தார். முதல் குற்றவாளியான செந்திலுக்கு, போக்சோ சட்டப் பிரிவின் (பாலியல் வன்கொடுமை) கீழ், 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. கடத்தல் குற்றத்துக்காக 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும், கொலை மிரட்டல் விடுத்த குற்றத்துக்கு 2 ஆண்டுகள் சிறை, சிறார் திருமணம் செய்த குற்றத்துக்காக 2 ஆண்டுகள் சிறை, வீட்டில் சிறை வைத்த குற்றத்துக்காக ஓராண்டு சிறை இவற்றுடன் தலா ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. செந்திலின் தாய் தங்கமணி, சகோதரர்கள் அழகர், ஏழுமலை, இவர்களின் மனைவிகள் ராதா, கௌரி, உறவினர் குமார் ஆகிய 6 பேருக்கும், சிறுமியை வீட்டில் சிறை வைத்த குற்றத்துக்காக தலா ஓராண்டு சிறை தண்டனை மற்றும் தலா ஆயிரம் ரூபாய் அபராதம், சிறார் திருமணம் செய்து வைத்த குற்றத்துக்காக தலா 2 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் தலா ரூ.2 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. சிறைத் தண்டனைகளை குற்றவாளிகள் ஏககாலத்தில் அனுபவிக்கலாம் என நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.