tamilnadu

கூடங்குளத்தில் 3, 4-ஆவது அணு உலைகள் அமைக்கும் பணி 2023 இல் நிறைவடையும்

 திருநெல்வேலி, டிச. 16- கூடங்குளம் அணுமின் நிலையத்தின் 3 மற்றும் 4-ஆவது அணு உலைகள் அமைக்கும் பணி முறையே மார்ச் 2023 மற்றும் நவம்பா் 2023-இல் முடிக்கப்படும் என்று ஒன்றிய  அணுசக்தித் துறை இணையமைச்சா் ஜிதேந்திர சிங் தெரிவித்தார். இது தொடா்பாக மக்களவையில்  எழுத்து மூலம் அளித்த பதிலில் கூறியுள்ளதாவது: கடந்த 7 ஆண்டுகளில் நிறுவப்பட்ட அணு மின்சார உற்பத்தித் திறன் 40 சதவீதத்துக்கு மேல் அதிகரித்து 4780 மெகாவாட்டிலிருந்து 6780 மெகாவாட்டாக உயா்ந்துள்ளது. நாட்டுக்கு நீண்டகால எரிசக்தி பாதுகாப்பை வழங்கும் விதமாக, உள்நாட்டு மூன்று நிலை அணு மின்சாரத் திட்டத்தை இந்தியா பின்பற்றி வருகிறது. இது தவிர வெளிநாடுகளின் ஒத்துழைப்புடன், இலகு நீா் அணுஉலைகள் அடிப்படையிலான தூய்மையான மின்சாரத்தை வழங்குவதற்கான கூடுதல் வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. கூடங்குளம் அணுமின் நிலையத்தில் தலா 1000 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட 3 மற்றும் 4-ஆவது அணு உலைகளை அமைக்கும் பணி இந்திய அணுமின் கழகத்தால் மேற்கொள்ளப்பட்டு, நவம்பா் 2021 நிலவரப்படி பாதிஅளவுக்கு மேல் வேலை முடிந்துவிட்டது. 3-ஆவது உலை பணி 2023-ஆம் ஆண்டு மார்ச் மாதத்திலும், 4-ஆவது உலையின் பணி 2023 நவம்பா் மாதத்திலும் நிறைவடையும். சென்னை அருகேயுள்ள கல்பாக்கத்தில் புதிதாக அமைக்கப்படும் 500 மெகாவாட் உற்பத்தித் திறனுடைய நவீன அணு உலைக்கான பணிகள் 2022 அக்டோபரில் நிறைவடையும் என்று தெரிவித்துள்ளார்.