tamilnadu

img

ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக மௌனம் காக்கும் அருணா ஜெகதீசன் ஆணையம்

தூத்துக்குடி சுற்றுச்சூழலுக்கு கேடு விளை விக்கும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என மக்கள் தன்னெழுச்சியாகத் திரண்டு நடத்திய போராட்டத்தில் அன்றைக்கு முதல்வராக இருந்த எடப்பாடி பழனிச்சாமியின் கட்டுப்பாட்டில் இருந்த காவல்துறை குருவிகளைச் சூடுவது போல் 13 பேரை சுட்டுக்கொலை செய்தது. இச்சம்பவம் நடை பெற்ற நாளன்று விரைந்துச் சென்று மக்களுக்கு ஆறுதல் கூறியவர்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணன், மாநிலச் செயற்குழு உறுப்பினர் க.கனகராஜ், அன்றைக்கு தூத்துக்குடி மாவட்டச் செயலாளராக பொறுப்பு வகித்த கே.எஸ்.அர்ச்சுணன் உள்ளிட்ட தூத்துக்குடி மாவட்டத் தின் தலைவர்கள். தூத்துக்குடி அரசு மருத்துவ மனையில் இரவு இரண்டு மணி வரையிருந்து காயமடைந்து வந்திருந்த ஒவ்வொருவரையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் சந்தித்து ஆறுதல் கூறினர். இந்தச் சம்பவம் நடைபெற்ற மறுநாள் தீக்க‌திர் நாளேடு மட்டுமே 13 பேரை காவல்துறை சுட்டுக் கொலை செய்தது என்று செய்தி வெளியிட்டி ருந்தது. 13 பேரை காவல்துறை சுட்டுக் கொலை செய்தது குறித்து விசாரிக்க அருணா ஜெகதீசன் ஆணையம் அமைக்கப்பட்டது. அந்த ஆணை யத்தின் அறிக்கை சட்டமன்றத்தில் செவ்வாயன்று தாக்கல் செய்யப்பட்டது.

க.கனகராஜ் 

இதையடுத்து அருணா ஜெகதீசன் அறிக்கை குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் க.கனகராஜ் புதனன்று கூறியதாவது: அருணா ஜெகதீசன் ஆணையம் பரிந்து ரைத்துள்ளவற்றை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும். அதே நேரத்தில், இந்த அறிக்கை “ஸ்டெர்லைட் ஆலையை அப்படியே விலக்கி வைத்துள்ளது”. என்ன காரணத்திற்காக தூத்துக் குடி மக்கள் போராடினார்கள். துப்பாக்கியால் 13 பேரை சுட்டுக்கொல்வதால் காவல்துறைக்கு என்ன லாபம்? என்ற கேள்விக்கு பதிலில்லை. ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் எனப் போராடுபவர்களுக்கு சரியான பாடத்தை கற்பிக்க வேண்டும் என்ற ஸ்டெர்லைட் ஆலையின் நோக்கம் நிறைவேறியுள்ளது. அருணா ஜெகதீசன் ஆணையம் உடனடி யாக துப்பாக்கிச்சூடு நடத்துவதற்கான காரணம் ஏதுமில்லை, ஆத்திரமூட்டல் இல்லாதபோது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு எனக் குறிப்பிட் டுள்ளது.

அலட்சியமாயிருந்த  மாசு கட்டுப்பாட்டு வாரியம்

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக 1996-ஆம் ஆண்டு முதல்   போராட்டம் நடைபெற்று வரு கிறது. ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச்சூழல் மாசு  அடைகிறது. ஆலைக்கழிவுகளால் மக்கள் பாதிக் கப்படுவர். தமிழக அரசும், மாசுக் கட்டுப்பாட்டு வாரியமும் இப்பிரச்சனையில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டுமென முதல் குரலெ ழுப்பியதில் சிஐடியுவும் உள்ளது. இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது. மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் போராட்டமே நடந்திருக்காது. 13 பேர் கொல்லப்பட்டிருக்க மாட்டார்கள். அலட்சி யமாக இருந்த மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மீது என்ன நடவடிக்கை?

ஆலையின் கைப்பாவையாக

அருணா ஜெகதீசன் ஆணையத்தின் பரிந்து ரையில் உள்ளவர்கள் மீது கிரிமினல் வழக்குப் பதிவு செய்யவேண்டும். அதே நேரத்தில், மாவட் டத்தில் உள்ள சில அதிகாரிகளை வழக்கமாக தங்க ளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் பணியில் இருக்க விடாமல்  வேறு அதிகாரிகளை வைத்து துப்பாக்கிச் சூட்டை நிகழ்த்தி உள்ளனர். இவர்கள் அந்தந்த இடங்களில் பணியில் இருந்திருந்தால் துப்பாக்கிச்சூட்டை நிகழ்த்த இயலாது என்ற நோக்கத்தில் இவ்வாறு செய்துள்ளனர். இவர்க ளெல்லாம் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்தின் கைப்பாவையாகவே மாறிவிட்டார்கள். காவல் துறையும் கைப்பாவையாக மாறியே துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளது. வெறும் துப்பாக்கிச்சூட்டை மட்டுமே ஆணையம் பேசியுள்ளது. ஸ்டெர்லைட் ஆலை மீது என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதும், ஆலை தான் துப்பாக்கிச்சூட்டிற்கு காரணம் என்பதும் மறைக்கப்படுகிறது. நடிகர் ரஜினிகாந்த் போராட்டத்தில் சமூகவிரோ திகள் புகுந்துவிட்டதாகவும் அதனால் கலவரம் ஏற்பட்டதாகவும் கூறியுள்ளார். இவர் யாருடைய குரலை எதிரொலிக்கிறார். தீர விசாரிக்காமல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சமூகவிரோதிகள் எனக் கூறிய ரஜினிகாந்த் உணர்ச்சிவசப்பட்டு பேசக்கூடாது எனக் கூறியுள்ளது ஆணையம். ரஜினிகாந்த்தின் பொறுப்பற்ற  பேச்சு குறித்து வருத்தம் தெரிவிக்கவேண்டும். அதேபோல் அப்போதைய முதல்வராக இருந்த எடப்பாடி பழனிச்சாமி உண்மைக்கு மாறாக‌ டிவி பார்த்து தெரிந்து கொண்டதாக கூறினார். ஆனால் எடப்பாடி பழனிசாமிக்கு அனைத்து விபரங்களும்தெரியும் என கூறப்பட்டுள்ளது. எனவே அவரும் இதற்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும், அவர் தனது கடமையில் இருந்து தவறி உள்ளார் என கூறினார்.

கிரிமினல்  நடவடிக்கை தேவை

ஸ்டெர்லைட் போராட்டத்தில் உயிரிழந்தவர் கள், காயமடைந்தவர்களுக்காக மாரக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் உயர்நீதிமன்றத் தில் வாதாடிய‌தூத்துக்குடி வழக்கறிஞர் சுப்பு முத்துராமலிங்கம் கூறுகையில்,  “துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து சிபிஐ-க்கு புகாரளித்து சிபிஐ விசாரிக்க வேண்டுமென வலி யுறுத்தியது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் கே.எஸ்.அர்ச்சுணன் மட்டுமே. அதன் மீது முதல் தகவலறிக்கையும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஆணையம் அமைக்கப்பட்டு அதன் அறிக்கை சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. “ துறை ரீதியாக நட வடிக்கை என்பது பத்தோடு பதினொன்றாக சேரும். காவல்துறையில் ஆய்வாளர் நிலையில் உள்ள வர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியும். ஆனால், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் அளவில் நடவ டிக்கை எடுக்க வேண்டுமெனில் ஒன்றிய அரசிடம் அனுமதி பெற வேண்டும். எனவே ஆணை யம் பரிந்துரைத்துள்ளவர்கள் மீது தமிழக அரசு கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

ஆலை மூடலே நீதி

துப்பாக்கிச்சூட்டில் பலியான ஸ்னோலின் தாயார் வனிதா கூறியதாவது: உயிரிழந்தவர்க ளுக்கும், காயமடைந்தவர்களுக்கும் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. அதிகாரிகள் மீதான நடவடிக்கை வெளிப்படைத் தன்மையாக இருக்க வேண்டும். உயிரிழந்த 14 பேருக்கும் நினைவு மண்டபம் குறித்து எதுவும் ஆணையம் தெரி விக்கவில்லை. வெறும் நிவாரணமும், வேலை யும் மட்டும் தீர்வாகாது. ஸ்டெர்லைட் ஆலை தற்காலிகமாகத்தான் மூடப்பட்டுள்ளது. அது நிரந்தரமாக மூடப்பட்டால் தான் இந்தப் பிரச்சனை யில் நீதி கிடைத்ததாக அர்த்தம் என்றார். துப்பாக்கிச்சூட்டில் பலியான அந்தோணி மனைவி கல்பனா கூறுகையில், ஒரு குடும்பத் தலைவர் இன்றி எப்படி ஒரு குடும்பம் தவிக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். எனது கணவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து எனது மக னுக்கு ஆட்சியர் அலுவலகத்தில் வேலை கிடைத்தது. ஒரு வருடமாக பணியாற்றி வருகிறார். ஆனால் எதற்காக சுட்டார்கள்? என்ன காரணம்? என்பது தெரியவில்லையே. ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவது தான் உயிரி ழந்தவர்களுக்கு கிடைக்கும் நீதி என்றார்.

-ச.நல்லேந்திரன், ஆர்.எஸ்.விக்னேஷ்வரன்


 

;