‘அகல் விளக்கு’ திட்டம்: அமைச்சர்கள் தொடக்கி வைப்பு
புதுக்கோட்டை, ஆக.11- புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில், மாணவிகள் இடர்பாடின்றி பள்ளிக்கு வருகை புரியும் பொருட்டு ‘அகல் விளக்கு’ என்கிற புதிய திட்டத்தினை, இயற்கை வளங்கள் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோர் சனிக்கிழமை தொடங்கி வைத்தனர். பின்னர், அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவிக்கையில், அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவிகள் எவ்வித இடர்பாடுமின்றி, தொடர்ந்து பள்ளிக்கு வருகை புரியும் பொருட்டு, அவர்களுக்கு மனம், உடல் மற்றும் சமூக ரீதியாக ஏற்படும் இன்னல்களில் இருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ளவும், இணையதளப் பயன்பாடுகளைப் பாதுகாப்பாகக் கையாள்வது குறித்தும் வழிகாட்டுதல்கள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதனை நடைமுறைப்படுத்தும் பொருட்டு, தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை சார்பில், ‘அகல் விளக்கு’ என்னும் திட்டத்தை உருவாக்கி, துவக்கி வைத்துள்ளது என்றார். இந்நிகழ்விற்கு மாவட்ட ஆட்சியர் மு.அருணா, ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநிலத் திட்ட இயக்குநர் மா.ஆர்த்தி ஆகியோர் தலைமை வகித்தனர். இணை இயக்குநர்கள் வை.குமார், முதன்மைக் கல்வி அலுவலர் கூ.சண்முகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.