tamilnadu

img

சிபிஎம் போராட்டம் எதிரொலி பொதுப் பாதை அடைக்கப்பட்ட விவகாரத்தில் நடவடிக்கை

சிபிஎம் போராட்டம் எதிரொலி  பொதுப் பாதை அடைக்கப்பட்ட விவகாரத்தில் நடவடிக்கை

பொன்னமராவதி, செப். 18-  புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அண்ணா சாலையில் உள்ள எம்ஜிஆர் நகரில், பொதுமக்கள் பல ஆண்டுகளாக பயன்படுத்திய பொதுப் பாதையை அடைத்து, பொதுமக்களுக்கு பெரும் இடையூறும், அச்சுறுத்தலையும் ஏற்படுத்திய பாலு என்கிற பத்மநாபன், அவரது மகன் பழனியப்பன் ஆகிய இருவர் மீதும், உரிய நடவடிக்கை எடுத்து பொதுப் பாதையை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து விட வலியுறுத்தி, எம்ஜிஆர் நகர் சிபிஎம் கிளை சார்பில், போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. சிபிஎம் ஒன்றியச் செயலாளர் பக்ருதீன் தலைமையில் சாலை மறியல் போராட்டம் செப்.16 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், செப்.15 ஆம் தேதி வட்டாட்சியர் முன்னிலையில் நடைபெற்றது. கூட்டத்தில், செப்.17 ஆம் தேதி இந்து சமய அறநிலையத்துறை, வருவாய்த்துறை ஆகிய அலுவலர்களை வைத்து, உரிய ஆய்வு செய்து பொதுப் பாதையை அடைத்து வைத்திருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என உறுதி அளித்திருந்தனர்.  இந்நிலையில் புதனன்று மண்டல துணை வட்டாட்சியர் திருப்பதி, வருவாய் ஆய்வாளர் சரவணன், கிராம நிர்வாக அலுவலர் பச்சையப்பன், இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் லாவண்யா, காவல் ஆய்வாளர் பத்மா, உதவி ஆய்வாளர் பூவரசன் உள்ளிட்ட அதிகாரிகள் முன்னிலையில் பொதுப் பாதையை அடைத்து வைக்கப்பட்டிருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. சிபிஎம் ஒன்றியச் செயலாளர் பக்ருதீன், ஒன்றியக் குழு உறுப்பினர் குமார், கிளைச் செயலாளர் தனலட்சுமி, நிர்வாகி பூங்கோதை உள்ளிட்ட கட்சியினர், எம்ஜிஆர்.நகர் பொதுமக்கள் பங்கேற்றனர்.