ஐநா கோட்பாடுகளின்படி, உள்நாட்டுப் போர், பஞ்சம், அரசியல் நெருக்கடி காரணமாகப் புலம்பெயரும் அகதிகள் பிற நாடுகளில் புகலிடம் கோர உரிமை உள்ளது. அவர்களை துன்புறுத்திய நாட்டிற்கு கட்டாயமாகத் திருப்பி அனுப்பத் தடை விதித்துள்ளது. புகலிடம் கோரியவர்களுக்கு பாதுகாப்புத் தந்து கண்ணியத்தோடு நடத்தவும் வலியுறுத்துகிறது. இதற்கு மாறாக,ஐரோப்பிய ஒன்றிய நாடான போலந்திற்குள் புகும் அகதிகளை அந்நாடு வெறுப்போடும் வன்மத்தோடும் வேட்டையாடி விரட்டும் நடவடிக்கையைப் பேசுகிறது 2023 இல் வெளிவந்த “கிரீன் பார்டர்”.
பெலாரஸின் மேற்கில் போலந்தும், தெற்கில் உக்ரைனும் உள்ளது. பைலோருஷ் ஜனாதிபதி அலெக்ஸாண்டர் லூகஷென்ஹோ. ரஷ்ய ஜனா திபதி புடினுக்கு நெருக்கமானவர். ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் நுழைவாயில் போலந்து. மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்காவிலி ருந்து வரும் அகதிகள்,கள்ளத்தனமாக செல்ல பெலா ரஸ் எல்லையையே தேர்ந்தெடுக்கின்றனர். பெலா ரஸ் அரசு, புவிசார் அரசியல் (Geopolitical), அடிப் படையில் ஐரோப்பிய ஒன்றியத்திற்குத் தொல்லை தரும் நோக்கோடு, அகதிகளுக்குப் பச்சைக்கொடி காட்டுகிறது என்ற குற்றச்சாட்டும் உள்ளது. பெலாரஸ் எல்லை வழியாக போலந்து வரும் அகதிகளை போலந்து இராணுவம் பிடித்து மீண்டும் பெலாரஸ் எல்லைக்குள் வலுக்கட்டாயமாக விரட்டு வதும், அதே அகதிகளை, பெலாரஸ் மீண்டும் போலந் துக்குள் தள்ளுவதும் வாடிக்கை. இந்த பின்புலத்தில் மூன்று புள்ளிகளிலிருந்து கதை மாந்தர்கள் பயணிக்கின்றனர். 1. சிரியா உள்நாட்டுப் போரில் பாதிப்பிற்குள் ளாகி உயிர் வாழ, போலந்தைக் கடந்து ஸ்வீட னில் தஞ்சம் புகும் திட்டத்தோடு ஒரு இஸ்லா மியக் குடும்பம் வருகிறது. கணவன் பஷிர், மனைவி அமினா. பால்குடி மறவா கைக்குழந்தை மற்றும் இரண்டு சின்னஞ்சிறு ஆண், பெண் பிள்ளைகள், பஷிரின் வயதான தகப்பன் இவர் களடங்கியது பஷிர் குடும்பம்.இடையில் ஆப்கன் ஆசிரியை லீலா,இவர்களோடு இணைகிறார். இவர் போலந்தில் தஞ்சமடையும் எண்ணத்தோடு வருகிறார். பஷிர் குடும்பம் மற்றும் லீலா ஆகியோர் பெலாரஸ் எல்லையைக் கடந்து போலந்து சதுப்பு நிலக் காட்டு வழியாகச் செல்கின்றனர். 2. போலந்து நாட்டு எல்லைப்புற படை வீரன் ஜெனக். கர்ப்பிணி மனைவியோடு வாழ்பவன். அகதி களை மிருகங்களாக நடத்தும் அரசின் கொள் கைக்கு நேர் எதிரானவன்; மனித நேயம் கொண்ட வன். போலந்துக்குள் வரும் அகதிகளை ஆட்டு மந்தைகளைப் போல் அடித்து விரட்டும் பணியில் வேண்டா வெறுப்போடு பணியாற்றுகின்றான். 3. விரட்டியடிக்கப்பட்டு அடர்ந்த காட்டுப் பகுதி களுக்குள் பதுங்கிய அகதிகளுக்கு மருத்துவ உதவி, உணவு, உடை, செல்பேசி மற்றும் சட்ட உதவிகளை மார்தா, ஜூகு, மாஷிக் என்ற போலந்துக்காரர்கள் செய்கிறார்கள். இந்த செயல்பாட்டாளர்களோடு இணைகிறார் பெண் மருத்துவ உளவியலாளர் ஜூலியா. இவர் கொரோனாவில் கணவனை இழந்தவள். இவள் செயல்பாட்டாளர்களைக் காட்டிலும் அகதி களுக்கு உதவுபவர். இதனால் சிறைக்கும் சென்ற வர்.
இச்சூழலில் மேற்கண்டவர்கள், தங்கள் வாழ்க்கைப் போக்கில் ஒருவருக்கொருவர் ஏதோ வொரு வகையில் குறுக்கிடுகின்றனர். இந்த சிக்கலான நிலையில் பஷிர் குடும்பம் ஸ்வீடன் சென்றடைந்ததா? ஒரு மனநோயாளிக்கு, வீடியோ மூலம் மருத்துவ ஆலோசனை, லீலா வழங்குகிறாள். அவர் தனது போலந்து அரசு, இனவெறி கொண்டதாக இருக்கி றது. பிஞ்சு உள்ளங்களில் இனவெறியை ஊட்டு கிறது. இக்கொடுமைகளை நினைத்து ஊனுறக்க மின்றித் தவிப்பதாகக் கூறுகிறார். ஒரு மன நோயாளி மூலமாக சமூக நோயான இனவெறி அடிக்கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளது. போலந்து எல்லைக்காவல் படையினருக்கான வகுப்பில், ராணுவ அதிகாரி, “அகதிகளாக வரு பவர்கள் மனிதர்களில்லை. துப்பாக்கி குண்டுகள். இவர்கள், புடின் (ரஷ்ய அதிபர்) மற்றும் லூக ஷென்ஹோவின் ஆயுதங்கள்.இவர்களது பிணங்கள் கூட நமது மண்ணில் இருக்கக் கூடாது”என வீரர் களை மூளைச்சலவை செய்வது, இன்றைய ஐரோப் பிய ஒன்றிய நாடுகளின் நிலையை தோலுரிக்கிறது. லீலா, பஷிர் மகனிடம் பெயர் கேட்கையில், அவ னது உண்மை பெயரை சொல்லாமல், பிரான்ஸ் கால்பந்தாட்ட வீரர் “கிலியன் மெப்பே” பெயரைச் சொல்கிறான். இதேபோல், போலந்துப் படைவீரன் ஜெனக், பிறக்கும் குழந்தைக்கு போலந்து கால்பந்தாட்ட வீரர் ராபர்ட் லீவான்டோஸ்கி மகளின் பெயரை வைக்க வேண்டும் என்று மனைவியிடம் கூறுகிறான். இது, கால்பந்தாட்டம் இனவேறுபாடின்றி அனைவரது வாழ்விலும் ஊடுருவியுள்ளதை காட்டுகிறது. கருப்பு வெள்ளையில் படம் சிறப்பாக ஒளிப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இசை “ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட்” படத்தின் சோக இசையை நினைவூட்டுகிறது. சிறப் பான படத்தொகுப்பு.
பஷிர், அமினா, லீலா, ஜெனக் மற்றும் ஜூலியா போன்ற பாத்திரங்களில் நடித்தவர்கள் சிறப்பான நடிப்பைத் தந்துள்ளனர். காட்டில் தாய்ப்பாலின்றி அமீனாவின் குழந்தை அழுவது, காண்போர் நெஞ்சை பதற வைக்கக்கூடிய தாகும். எல்லை தாண்டும் மனிதர்களை கொல்லும் அரசுகளுக்கு மத்தியில், ஜூலியா மூன்று ஆப்பிரிக்க இளைஞர்களை ரகசியமாகக் காப்பாற்றி அழைத்து வருகிறாள். அந்நேரம் காட்டப்படும், அழகிய மாபெரும் வில் போல் வானத்தில் எல்லையற்று பறக்கின்ற பறவைகள் கூட்டக் காட்சியானது, கவி தைக்கு ஒப்பானது. போலந்து அரசின் நாஜி சார்பு அரசியலை தைரிய மாக பேசி இயக்கிய போலந்து நாட்டு பெண் இயக்கு நர் அக்னீஸ்ஹா ஹோலண்ட் மிகுந்த பாராட்டுக்குரி யவர். இதனால் போலந்து அரசின் கண்டனத்திற்கு உள்ளானவர். இவரை ஒரு “ஸ்டாலினிஸ்ட்” என்றும், இது நாஜி பிரச்சாரப்படம் எனவும் இரு வகையான விமர்சனங்கள் இவர் மீது தொடுக்கப்பட்டுள்ளது. வெனிஸ் திரைப்பட விழாவில் 2023க்கான சிறப்பு பிரிவின் கீழ், சிறந்த படத்திற்கான விருதினை இப்படம் வென்றுள்ளது.பிரைம் அமேசானில் உள்ளது. பெலாரஸிலிருந்து வரும், மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்க அகதிகளை ஓட..ஓட.. விரட்டியடிக்கும் போலந்து அரசு, உக்ரைன் போர் தொடங்கிய 2022க்கு பின், இரண்டு பில்லியன் உக்ரைன் அகதிகளையும், அவர்களது “நாய், பூனை” போன்ற வளர்ப்பு பிராணி களுக்கும் தஞ்சம் கொடுத்துள்ளது என்பதும் சமீபத்திய புவிசார் அரசியல் முரண்.