tamilnadu

ஒரு வட்ட ரொட்டி! - வரத.இராஜமாணிக்கம், பழநி


வாலற்ற நாய்க்கு ரொம்பவும்
வயதாகி இருந்தது
இடது கண்ணில் பூ விழுந்து 
மறைத்திருந்தது
வலது கண் சுருங்கிப் போய்
பசியின் ஏக்கம் ஒளிந்திருந்தது!

கறிக்கடை முன்பு எலும்புக்காக
காத்திருந்த காலம் போய்
ஒரு தேநீர் கடை முன்பு
இப்போதெல்லாம் தவமிருக்கிறது !

கருணையுள்ள மனிதர்களை கவனமாக 
அவதானிக்கிறது தலையை 
ஒருபுறமாக சாய்த்து
இடது பக்க முன்காலால் 
முழங்காலைச் சுரண்டுகிறது!

பார்வைக்கு பிச்சைக்கார
குழந்தையை போல 
பரிதாபமாக இரக்கத்தை தூண்டுகிறது
பிறகு ஒற்றைக் கண்ணால்
வட்ட ரொட்டி இருக்கும்
ஜாடியைக் காண்பித்து
கெஞ்சலுடன் ஜாடை செய்கிறது!

அதன் கணக்கு தப்பவில்லை 
ஜாடியிலிருந்து ஒரு வட்ட ரொட்டி 
அதன் வாயருகே வருகிறது
மணமும் ருசியும் மிருதுவமான 
உணவை ஆற அமர தின்கிறது!

தலையை மறுபுறமாக சாய்த்து
பூ விழுந்த கண்ணால் 
அந்த மனிதனுக்கு
அது நன்றியை வெளிப்படுத்துகிறது!

அந்தக் கண் கவனிப்பாரற்று 
செத்துப் போன அவனது தந்தையை 
நினைவூட்டுவதாக இருந்தது
அப்பா.. என அவன்
நாயைப் பார்த்து அழைத்தது
அருகில் இருந்த நாய்(?)களுக்கு
வினோதமாக தெரிந்தது! 

வரத.இராஜமாணிக்கம், பழநி