tamilnadu

img

வைர மலராய் வளர்க தீக்கதிர்

வைரம் வாங்க     வழியற்றவர்களின்
வைர விழா இது.... ஆனால்
வைரம் போல் கொள்கை உறுதி
வாய்ந்தவர் கொண்டாடும் விழா!

வளர்ந்த பிறகே விருட்சம்
வைரம் பாயுமாம்... ஆனால் தீக்கதிர்
உதிக்கும் போதே வைரம் பாய்ந்த
உறுதியுடன் எழுந்தது!

அறுபது ஆண்டுகளாய்
உழைப்பாளிகளின் 
உக்கிர உஷ்ணத்தை
ஏந்தி வருவதால்....தீக்கதிர்
அச்சு எந்திரத்தில் இருந்தல்ல
உலைக்களத்தில் இருந்து தினமும்
வார்ப்படம் செய்யப்பட்டு வருகிறது!

தீக்கதிர் நம்
சிந்தனைக்கு சிறகு தருகிறது!
கண்களுக்கு கனவு தருகிறது!

நம் காயங்களுக்கு ஒத்தடத்தையும் ,
நம் கால்களுக்கு வழித்தடத்தையும்,
நம் கண்ணீருக்கு உஷ்ணத்தையும்,
நம் முஷ்டிகளுக்கு உறுதியையும்,
தினமும் ஏந்தி தீக்கதிர் வருகிறது!

சூரியனை நகலெடுக்கும் இதன்
சூடு படும்போது
ஆளும் வர்க்கத்துக்கு
அடி நெஞ்சில் குளிரெடுக்கிறது!

கருத்தரித்த தினம் இருந்தே
பிரசவ வேதனைப் படும் தாயின்
பெருங்கஷ்டம் எப்படி இருக்கும்?
தொடங்கிய தினம் இருந்தே தீக்கதிரை
தொடர்ந்து கொண்டு வரும் நம்
கட்சியின் கஷ்டம் போல் இருக்கும்!

யானையை கட்டி மட்டுமல்ல
சேனையைக் கட்டி தீனி போடும்
செல்வம் பெருத்த பண முதலைகள் கூட
தினசரியை நடத்த சிரமப்படும் காலம்இது.

நம்மால் எப்படி தீக்கதிரை
நடத்த முடிகிறது?
காரணம் எளிமையானது தோழர்களே!
கட்சித் தோழன் ஒவ்வொருவரும் தன்
வீட்டு விளக்கை காப்பது போல
தேச விளக்காம் தீக்கதிரை
அணையா விளக்காய் காக்க
தன்னையே எண்ணெயாய் தர
தயாராய் இருக்கிறார்!
உழைப்பாளித் தோழன் தன்னுடைய
உதிர நரம்பின் ஓட்டத்தை துடிப்பை
தீக்கதிர் தினசரியின்
ஒவ்வொரு வரியிலும் 
உணர்வதால் காண்பதால்...
கடவுளுக்கு காணிக்கைக் காசு
முடிந்து வைக்கும் பக்தன் சிரத்தை போல்
கட்சித் தினசரிக்கு சந்தாக் காசு
ஒவ்வொரு மாதமும் ஒதுக்கி வைக்கிறான்!

அது மட்டுமா?
வர்க்க சிந்தனையற்ற வாசகரும் நம்
தர்க்க அறிவின் தரத்தை விரும்பி
தவறாமல் தீக்கதிர் தருவிக்கிறார்!
ஜரிகைக்கும் சருகுக்கும் உள்ள
வேற்றுமையை அவர்
தீக்கதிர் வாசித்து அறிகிறார்!

எல்லா பத்திரிகைகளும் அறிவுக்கு
எரு இடுவதாகவே சொல்கின்றன... ஆனால்
சவத்தை எரிப்பது போல்
சத்தியத்தை எரிக்கும் “எரு “மூட்டைக்கும்
மாதாவின் மடிப்பால் போல்
மானுடப் பயிர் வளர்க்கும் “எரு “வுக்கும்
வேற்றுமையை வித்தியாசத்தை அவர்
தீக்கதிர் படித்து தெரிந்து கொள்கிறார்!

ஆம் தீக்கதிரின் ஒவ்வொரு எழுத்தும் ஓர்
அக்கினிக் குஞ்சை அடைகாக்கிறது!
இந்த அக்னிக் குஞ்சுகள் நாளை
அசுரப் பறவைகளாய் வளர்ந்து
சூரிய முட்டைகளை சூல்கொள்ளும்!

செந்தமிழ் நாட்டு மக்களின்
சீற்ற நெருப்பை சேகரித்து
நடமாடும் தீக்குண்டமாய் தீக்கதிர்
-சூரியனுக்கு ஜோடியாய் -
நாள்தோறும் நாட்டை வலம் வருகிறது!

சீற்றத்தை மட்டும் அல்ல
சிரிப்பையும் நம் உதடுகளுக்கு
சீதனமாய் தருகிறது தீக்கதிர்! ஆம்!
தீக்கதிரின் கார்ட்டூன்கள்
அரச மகுடத்தை அகற்றிவிட்டு
கோமாளித் தொப்பியை
பாராள்வோருக்கு பரிசளிக்கிறது!

ஆனாலும்
குறும்புச் சிறுவன் குறி பார்க்கும்
சுண்டு வில் போல் தோன்றினாலும்
கோதண்டம் அந்த கார்ட்டூன் என்பதை
ஆளும் வர்க்கம் அறிந்தே உள்ளது!

தீக்கதிர் கட்டுரைகள் எம்
மூளையில் அறிவுக் கோடுகளையும்
முதலாளியத்தின்
முதுகில் சாட்டைக் கோடுகளையும்
ஒரே நேரத்தில் உருவாக்குகின்றன!

ஆயுதம் செய்வோம் “நல்ல 
காகிதம்”செய்வோம் என்றான் பாரதி.
தீக்கதிர் காகிதம் சாணிக் காகிதத்திற்கு
சகோதரி என்றாலும்
“நல்ல காகிதம்” தான் நண்பர்களே!
காகிதத்தில் வறுமை இருப்பினும் அதன்
கருத்துகளில் வாய்மை இருப்பதால்
நல்ல காகிதம் தான் நண்பர்களே!

தீக்கதிருக்கு
பொன்மலர்ப் பருவம் பூத்து நிறைந்து
வைரமலர்ப் பருவம் வரும்நேரம் இது.
எஃகுத் தசைகள் போன்ற அதன் 
எட்டுப் பக்கமும் எட்டுத்திக்குகளின்
அகல நீளமாய் அகன்று உயர்ந்து
வாழ்க்கையை வரைக!
தமிழ் மக்களின்
வானமாய் விரிக!
-நவகவி

;