tamilnadu

img

இருள் சூழ்ந்து கிடக்கும் போர்க் காலங்கள் - ச.லெனின்

1943 இரண்டாம் உலகப் போரின் இறுதிக் காலம் அது. சோவியத் ரஷ்யாவுடன் இருந்த உக்ரைனின் அடர் பனி படர்ந்த பகுதியில் காட்சிகள் விரிகின்றன. ஜெர்மன் நாஜிப் படையினருக்காகப் போர் புரிய  வந்துள்ள ஹங்கேரி நாட்டின் சிப்பாயை மையமிட்டே கதை நகர்கிறது. எளிய விவசாய குடும்பத்தைச் சேர்ந்த மனிதம் நிறைந்த இஸ்த்வான் செமட்கா எனும் அந்த சிப்பாய் தனது  குழுவினருடன் உக்ரைனின் கிராமம் ஒன்றுக்கு வருகிறார். உக்ரைனில், ஹங்கேரி சுமார் ஒரு லட்சம் படையினரை அப்போது குவித்து வைத்தி ருந்தது. கட்டுப்பாடுடைய ஒழுங்கை உருவாக்க வும் சோவியத் ரஷ்யாவின் விசுவாசிகளை அழிக்கவுமே இந்த முயற்சி என்று கூறப்பட்டது. பொதுவாக போர்க் காலக் கட்டுப்பாடுகளும் ஆளுகை செலுத்தப்படும் மக்கள் மீது சுமத்தப்ப டும் ஒழுங்கும் நாம் அறிந்ததுதான்.  கிராமவாசி களை இராணுவத்தினர் நடத்தும் விதத்தில் இஸ்த்வானின் மனிதம் கலங்குகிறது. “எங்களிடம் இருந்த எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டீர் கள். இன்னும் என்னதான் வேண்டும் உங்க ளுக்கு?” என்கிற கிராமவாசிகளின் கேள்விகளிலி ருந்த நியாயம்  அவனை சஞ்சலப்படுத்தியது. ஆனால்,  அவற்றை எதிர்க்கும் நிலையில் அவர்  இல்லை. எதையும் கேள்வி எழுப்பச் சாத்திய மற்ற ராணுவ கட்டுப்பாடுகளின் கீழ்ப்படிதல் அதைச் சாத்தியப்படுத்தவில்லை. அமைதியும் கீழ்ப்படிதலும் கண் முன் நடக்கும் அக்கிரமங் களை அங்கீகரித்து விடுகிறது என்பதை அக்காட்சிகள் அம்பலப்படுத்தின.

அடக்குமுறைகளை  அங்கீகரிக்கும் அமைதி

சோவியத்தின் விசுவாசிகள் என்று 33 பேர் ஒரு கொட்டகையில் அடைக்கப்படுகின்றனர். அதில்  ஏழு பேர் தப்பித்து விடுகின்றனர். மீதம் இருப்ப வர்கள் மீதான கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்படு கின்றன. அதில் கைக்குழந்தையுடன் இருக்கும் இளம் பெண்ணும் இருக்கிறாள். தண்ணீர் கூட யாருக்கும் வழங்கப்படவில்லை. குழந்தை வீறிட்டு அழுகிறது. அழுகிறது… அழுகிறது.. அழுது கொண்டே இருக்கிறது.

கொடூரம் நிறைந்த போர்க்களத்தின் மாண்புகளை அந்த  அழுகை கொஞ்சமும் கரைக்கவில்லை. குழந்தை யின் அழுகையும் நின்றபாடில்லை. கருணையு டன் தண்ணீர் கொடுக்கவும் யாருக்கும் மனம் வரவில்லை. மனிதம் நிறைந்த இஸ்த்வான் மட்டும் கலங்கு கிறான். தயவு செய்து கொஞ்சம் தண்ணீர் கொடுங்கள் என்று குழந்தையின் தாய் கெஞ்சு கிறாள். அருகில் இருக்கும் கிணற்றிலிருந்து, ஒரு வாளியில் தண்ணீர் எடுத்து வருகிறான் இஸ்த்வான். அந்த நேரம் பார்த்துத் தப்பித்து சென்று ஏழு பேரில் ஒருவனைக் குதிரையின் பின்புறம் கட்டி இழுத்து வருகின்றனர். இஸ்த் வான் எடுத்துவந்த ஒரு வாளி நீரும் அவனிட மிருந்து வாங்கப்பட்டு அப்படியே அந்த கைதியின் மீது வீசி ஊற்றப்படுகிறது. மீண்டும் கிணற்றி லிருந்து தண்ணீர் எடுத்துக்கொண்டு கொட்ட கைக்குள் செல்கிறான். குழந்தையின் அழுகுரல்  கரைகிறது; அமைதி நிலவுகிறது. போர்க்கால அமைதி எப்போதும் மயான அமைதிதான் என்பதை அடுத்த காட்சி நமக்குக் காட்டிவிடுகிறது. கொட்டகை பாதுகாப்பு பணியி லிருந்து வேறு ஒரு பணிக்கு இஸ்த்வான் அனுப்பப் படுகிறான். அந்த வேலையை முடித்துவிட்டு அவன் திரும்பி வரும்போது அந்த கொட்டகை கொழுந்துவிட்டு எரிகிறது. குழந்தையின் அழுகுர லும் அந்த அமைதியும் அதோ அங்கே பொசுங்கிக் கொண்டிருந்தது. போர் கொடூரமா னது; அது மனிதர்களை மேலும் கொடூரமான வர்களாக மாற்றிவிடுகிறது. என்ன ஆனது? என்று அங்கிருந்த அதிகாரி யைக் கேட்டான். அவர் சொன்னார், “நான் தூரத்தில் நின்று கொண்டிருந்தேன், என்ன ஆனது  என்று தெரியவில்லை. அதைத் தடுத்திட அங்கி ருந்து நகர நினைத்தேன் எனது கால்கள் ஒத்துழைக் கவில்லை, குரல் எழுப்ப எத்தனித்தேன் அது  எங்கோ புதைந்து கிடந்தது“ என்றார். அவன் மனிதம் மீண்டும் ஒரு அக்கிரமத்தை அங்கீகரித்து  அமைதியில் உறைந்து போனது.

உனக்காக விடியல் காத்துக்கிடக்கிறது

போர் காலங்கள் எப்போதும் இருள் சூழ்ந்தே  கிடக்கிறது. அதுபோலவே இயற்கையின் ஒளி  எனும் படத்தின் காட்சிகள் முழுமையும் இருளால் நிறைந்துள்ளது. இருளின் ஒளியில் எடுக்கப்பட்ட காட்சிகள் அனைத்தும் 1943 ன் காலப்பகுதியை கவனத்தில் கொண்டு எடுக்கப்பட்டிருக்கிறது என்கிற போதும் காட்சிகள் அனைத்தும் ஒளி யற்று இருப்பது படத்தைப் பார்ப்பதில் அலுப்பை ஏற்படுத்துகிறது. பார்வையாளர்களை சோதிக்கும் அளவிற்குத் திரைக்கதை மிக மிக மெதுவாக நகர்கிறது. வசனங்கள் குறைவுதான் என்கிற போதும் அவை காத்திரமானவை.  இறுதிக்காட்சியில், நோய்வாய்ப்பட்ட மூன்று  சிப்பாய்களை நகரத்தின் மருத்துவமனையில் சேர்க்கும் பணிக்காக இஸ்த்வான் அனுப்பப்படு கிறார். அங்கு ராணுவ உயர் அதிகாரியைச் சந்தித்து தகவல்களை தெரிவிக்கிறார். எல்லா வற்றையும் நிதானமாகக் கேட்டுக்கொண்டிருந்த அதிகாரி இஸ்த்வானின் மனக்குழப்பத்தையும் உணர்கிறார். “உன் குடும்பத்தைப் பார்த்து எவ்வ ளவு காலம் ஆகிறது?“ என்று இஸ்த்வானை கேட்கி றார். எட்டு மாதம் ஆகிறது என்றார் இஸ்த்வான். “சரி, இரண்டு வாரங்கள் விடுமுறை எடுத்துக் கொள். குடும்பத்துடன் இருந்துவிட்டு, விடுமுறை  முடிந்து என்னை வந்துபார்“ என்று விடைகொடுக் கிறார். இஸ்த்வான் ரயிலில் தனது ஊருக்கு பய ணிக்கிறார். ஜன்னல் வழியே வானத்தைப் பார்க்கி றார், இயற்கையின் ஒளியில் அந்த காலை வானம் இன்னும் இரத்தம் படிந்தே காட்சி தந்தது.  “இதோ உன் வாசலில் சூரியன் உதிக்கத் தயாராகி விட்டது, உனக்காக அது காத்துக்கிடக்கிறது“ என்கிற வரிகளுடன் படம் ஒளி பெற்றது.

நேச்சுரல் லைட்/2021/போர்/டிராமா 
இயக்குநர்: டேன்ஸ் நாகி
மொழி: ஹங்கேரியன்