ஒசூரில் வாலிபர் சங்க 18ஆவது மாநில மாநாடு : ஏ.ஏ. ரஹீம் துவக்கி வைத்தார்
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின், தமிழ்நாடு மாநில 18-ஆவது மாநாடு ஓசூரில் பேரணி - பொதுக்கூட்டத்துடன் ஞாயிறன்று துவங்கியது. திங்கட்கிழமை (அக்.13) தோழர் வைரமுத்து நினைவரங்கில் (சூடப்பா திருமண மஹால்) பிரதிநிதிகள் மாநாடு துவங்கியது. மாநாட்டுக் கொடியை ஏற்றிவைத்து, சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ். கார்த்திக் மாநாட்டிற்குத் தலைமை வகித்தார். மாநில இணைச் செயலாளர் செல்வராஜ் அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். வரவேற்புக் குழுத் தலைவர் ஆர். சேகர் வரவேற்றார். மாநிலச் செயலாளர் ஏ.வி. சிங்காரவேலன் அரசியல் ஸ்தாபன அறிக்கையை முன்வைத்தார். மாநிலப் பொருளாளர் எஸ். பாரதி வரவு - செலவுக் கணக்கைச் சமர்ப்பித்தார். வாலிபர் சங்கத்தின் மத்திய செயற்குழு உறுப்பினர் ஜெய்க் சி. தாமஸ், கேரள மாநிலச் செயலாளர் வி.கே. சனோஜ், அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற மாநிலச் செயலாளர் கே. பாரதி, இந்திய மாணவர் சங்க மாநிலச் செயலாளர் டி. சம்சீர் அகமது ஆகியோர் வாழ்த்திப் பேசினர். வாலிபர் சங்கத்தின் அகில இந்தியத் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான ஏ.ஏ. ரஹீம் மாநாட்டைத் துவக்கி வைத்து உரையாற்றினார். முன்னதாக, வாலிபர் சங்கத் தியாகிகள் கண்காட்சியை சங்க மாநில முன்னாள் செயலாளர் சு.பொ. அகத்தியலிங்கம் திறந்து வைத்தார். பிரதிநிதிகள் மாநாடு செவ்வாய்க்கிழமையும் தொடர்ந்து நடைபெறவுள்ளது. இளைஞர்களின் முக்கியமான பிரச்சனைகளை முன்வைத்துத் தீர்மானங்கள் நிறைவேற்றப்படவுள்ளன. மாநாட்டில் புதிய நிர்வாகிகளும் தேர்வு செய்யப்படவுள்ளனர்.
