வெள்ளி, பிப்ரவரி 26, 2021

tamilnadu

img

நீட் எனும் கொலைக்கருவியை எப்போது கீழே போடுவீர்கள்? மக்களவையில் சு.வெங்கடேசன் எம்.பி. ஆவேச கேள்வி

புதுதில்லி:
நீட் தேர்வு எனும்  கொலைக்கருவியை இன்னும் எத்தனை குழந்தைகளின் மரணத்துக்குப் பின் கீழே போடுவீர்கள்? என்று மக்களவையில் சு.வெங்கடேசன் எம்.பி., ஆவேச கேள்வி எழுப்பினார்.

மாணவர்கள், அரசியல் கட்சியினரின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் பாஜக அரசு மருத்துவப்படிப்பு சேர்க்கைக்கான நீட்நுழைவுத்தேர்வை கொண்டு வந்தது. நீட் தேர்வு கொடுக்கும் மனஅழுத்தத்தால் இந்த தேர்வுக்குதயாராகி வந்த  12 மாணவ, மாணவியர்கள் தமிழகத்தில் தொடர்ச்சியாக தற்கொலை செய்துகொண்டனர். இந்த சம்பவம் தமிழகம் முழுக்க அதிர்ச்சி மற்றும் சோகத்தையும் கொந்தளிப்பையும் உருவாக்கியுள்ளது. இத்தனை உயிர்கள் பலியான பிறகும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற தமிழகத்தின் கோரிக்கையை மத்திய பாஜக அரசு கண்டுகொள்ளாமல் அலட்சியத்துடன் உள்ளது என்று அரசியல் கட்சியினர் மற்றும் மாணவர்கள் குற்றம்சாட்டுகின்றனர். இந்நிலையில் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி செப்டம்பர் 15 செவ்வாயன்று மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன்,நாடாளுமன்றத்தில் பேசியதாவது:

அனிதா முதல் ஜோதி ஸ்ரீதுர்கா வரை பனிரெண்டுக்கும் மேற்பட்ட குழந்தைகளின் மரணத்தின் துயரத்திலிருந்து மீளாவேதனையுடன் கேட்கிறோம், எப்போது நீட் எனும் தேசிய தகுதித் தேர்வினை கைவிடுவீர்கள்.நீட் எனும் திரிசூலத்தில் மூன்று முனை இருக்கிறது. ஒரு முனை,மாநில  அரசின் கல்விமுறையையும், மாநில  உரிமையை யும் குத்திக்கிழிக்கிறது; மற்றொரு முனை டீச்சிங்கை கொன்று, கோச்சிங்கை கொண்டாடுகிறது; மூன்றாவது முனை மாணவர்களின் உளவியலை சிதைத்து தற்கொலைக்குத் தள்ளுகிறது. இந்த கொடிய கொலைக்கருவியை இன்னும் எத்தனை குழந்தைகளின் மரணத்துக்குப் பின் கீழே போடுவீர்கள்? 

மருத்துவ மாணவர் சேர்க்கை சம்பந்தமாக தமிழக சட்டப்பேரவை ஏக மனதாக நிறைவேற்றிய தீர்மானத்தை குடியரசுத்தலைவர் திருப்பி அனுப்பினார்.அரசமைப்புச் சட்டம் 201 இன் படி மசோதாவை திருப்பி அனுப்பினால் அதற்கான காரணத்தை தெரிவிக்க வேண்டும். ஆனால் இன்றுவரை காரணம் தெரிவிக்கப்படவில்லை. இது பற்றி நீதித்துறை ஆளுமைகள் கேள்வி எழுப்புவதில்லை. ஆனால் திரைக்கலைஞர் சூர்யா கருத்து கூறினால் உடனே எதிர்வினை புரிகிறார்கள். நீதியும், தேர்வும், மனுநீதியின் சாயலாகவும், சாரமாகவும் மாறிவிடக்கூடாது என்பதால் கேட்கிறோம். நீட்டினை கைவிடுங்கள். கைவிடுங்கள்.கைவிடுங்கள்.இவ்வாறு அவர் பேசினார்.

;