tamilnadu

img

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் குருதாஸ் குப்தா காலமானார்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் குருதாஸ் குப்தா உடல் நலக்குறைவால் இன்று காலமானார். 
தொழிலாளர்களுக்கும், சாமானிய மக்களுக்கும் ஆதரவாக பல்வேறு போராட்டங்களை, கடந்த 1970களில் நடத்திய  குருதாஸ் குப்தா, அகில இந்திய தொழிற்சங்க காங்கிரஸ் தலைவராகவும் இருந்தார். கடந்த 1985-ம் ஆண்டு முதன்முதலாக மாநிலங்களவை எம்.பி.யானார். கடந்த 2004 மற்றும் 2009-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று எம்.பி.யானார். இதையடுத்து உடல் நலக்குறைவு காரணமாகக் கட்சியில் பணிகளில் இருந்து தன்னை விடுவித்தது கொண்டார். அதேசமயம்தொடர்ந்து  தேசிய செயற்குழுவில் உறுப்பினராக இருந்து வந்தார்.
 இந்நிலையில் குருதாஸ் குப்தாவின் 84-வது பிறந்த நாள் வரும் நவம்பர் 3-ம் தேதி கொண்டாட உள்ள நிலையில், உடல்நலக் குறைவால் இன்று காலை காலமானார். அவருக்கு மனைவி, ஒரு மகள் உள்ளனர். 
இதுகுறித்து மேற்கு வங்க இந்திய கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் ஸ்வபன் பானர்ஜி கூறுகையில், "குருதாஸ் குப்தா இன்று காலை 6 மணிக்கு கொல்கத்தாவில் உள்ள அவரின் இல்லத்தில் உயிரிழந்தார். சிறுநீரகக் கோளாறு, இதயநோய், தொண்டைப் புற்றுநோயால் அவதிப்பட்டு அவர் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், சிகிச்சை பலன் அளிக்காமல் மரணமடைந்தார். உடல்நலக் குறைவு காரணமாகக் கட்சியில் எந்தவிதமான பதவியும் வேண்டாம் எனத் தெரிவித்திருந்தார். அதேசமயம் தேசிய செயற்குழுவில் உறுப்பினராக இருந்து வந்தார்" எனத் தெரிவித்தார்.