tamilnadu

img

பட்ஜெட் உரையில் ஆர்எஸ்எஸ்-சின் ‘சிந்து’ விளையாட்டு சொற்களைக் கொண்டு தமிழர்களை ஏமாற்ற முடியாது

புதுதில்லி,பிப்.2-   2020-21 ஆம்  ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்ற மக்களவையில் மத்திய நிதி யமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ர வரி 2 சனிக்கிழமையன்று தாக்கல் செய்து பேசினார். அப்போது சிந்து சமவெளி நாகரிகத்தை ‘சரஸ்வதி சிந்து நாகரிகம்’ என்று பல முறை குறிப்பிட்டார். அமைச்சரின் இந்த பேச்சுக்கு பல்வேறு தரப்பிலிருந்து கண்டனங்களும் விமர்சனங்களும் எழுந்துள்ளன.   மத்திய அமைச்சரின் பேச்சை விமர்சித்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மதுரை மக்க ளவை உறுப்பினர் சு.வெங்கடே சன், ஊடகத்திற்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:  நிதியமைச்சர் முதலில் தவ றாகப் படிக்கிறார் என்று எண்ணி னேன். ஆனால், அவர் மீண்டும் மீண்டும் ‘சரஸ்வதி சிந்து நாகரி கம்’ என்றே குறிப்பிட்டார். இது புதிதல்ல. ஆர்.எஸ்.எஸ் தொடர்ச்சி யாக இதையே சொல்லிக்கொண் டிருக்கிறது. இந்துத்துவவாதிகள் இந்திய வரலாற்றை கட்டமைக்க இதைத்தான் பயன்படுத்தி வரு கிறார்கள்.     வேதப் பண்பாடுதான் இந்தி யப் பண்பாடு. வேத நாகரிகம் தான் இந்திய நாகரிகம் என்று மீண்டும் மீண்டும் நிறுவ நினைக்கி றார்கள். அதற்கான குறியீடாகத் தான் சரஸ்வதி நதியை பயன் படுத்துகிறார்கள்.  சரஸ்வதி நதி என்று ஒரு நதி இல்லை. அது இலக்கியத்தில் கூறப்பட்டுள்ளது. சரஸ்வதி நதி இல்லாமல் போன நதி என்று கூறுகிறார்கள். அப்படிப்பார்த்தால் தமிழ் இலக்கியத்திலும் பல நதிகள் பற்றி கூறப்பட்டுள்து. பஃறுளியாறு என்று தமிழ் இலக்கியத்தில் கூறப் பட்டுள்ள ஆறு இன்று இல்லை. அதைக் கண்டுபிடிக்க 1000 கோடி ரூபாய் ஒதுக்குவார்களா?  சரஸ்வதி நாகரிகம் என்று இவர்கள் கூறுவது வேதகால நாக ரிகத்தை, பண்பாட்டை. உலகம் முழுவதும் நாகரிகத்தின் அடையா ளமாக இரண்டு விஷயங்கள் கூறப்படுகின்றன. ஒன்று செங்கல். இன்னொன்று பானை. ஆனால் வேதத்தில் செங்கல் மற்றும் பானையின் பயன்பாட் டைப் பற்றி எதுவும் கூறப்பட வில்லை. மாறாக, செங்கல் மற்றும் பானையை பயன்படுத்துபவர் களை அசுரர்கள் என்று திட்டுகிறது வேதம்.  எந்த இடத்திலும் கற்களை வைத்து யாகம் நடத்திவிட்டு அங்கி ருந்து செல்லக்கூடியதுதான் வேதத்தின் பண்பாடு. ஆனால் சிந்து சமவெளி நாகரிகம் அப்படி யானதல்ல. சுட்ட செங்கற்களால் ஆன பிரம்மாண்டமான கட்டடங்க ளைக் கொண்டிருந்த மிகப்பெரிய நாகரிகத்தின் குறியீடு அது. வேதகாலத்தில்தான் இந்திய வரலாறு தொடங்கியது என்பதை மீண்டும் மீண்டும் நிரூபிக்க நினைக்கிறார்கள். சிந்து வெளி நாகரிகத்தை வேத நாகரிகமாக மாற்றுவது அல்லது வேத நாகரி கத்தின் அம்சங்களை சிந்து வெளி நாகரிகத்தில் பொருத்தி அதை எங் களுடையது என்று உரிமை கோரும் வேலையை பொருளா தார நிதிநிலை அறிக்கையில் செய்கிறார்கள். வேதத்தில் வந்த சொல்லை எடுத்து அதை சரஸ்வதி சிந்து நாக ரிகத்தில் இருக்கும் சொல் என்று இவர்கள் சொல்வது அதிர்ச்சி யாக இருக்கிறது. இந்தியா மட்டுமல்லாது உல கம் முழுவதும் உள்ள தொல்லியல் அறிஞர்கள் 100 ஆண்டுகள் ஹரப்பா, மொஹஞ்சதாரோவில் ஆய்வு செய்துள்ளார்கள். எவ்வளவோ எழுத்துகள் அங்கு கிடைத்துள்ளன. ஆனால் அவை இன்னும் படிக்கப்படவே இல்லை. ஆனால், போகிறபோக்கில் அதன் பொருளை நிதியமைச்சர் சொல்கி றார். சிந்து நாகரிகம் வேத நாகரி கம் என்று ஆர்.எஸ்.எஸ் சொல்லும் வரலாற்றுத் திரிபை இவர்கள் நிதி நிலை அறிக்கையில் செய்கிறார் கள்.  சரஸ்வதி சிந்து நாகரிகம் என்று மீண்டும் மீண்டும் கூறிவிட்டு, அதன்பின் ஆதிச்சநல்லூர் உள் ளிட்ட ஐந்து இடங்களில் தொல்லி யல் அருங்காட்சியகம் அமைக்கப் படும் என்று கூறும்போது எச்சரிக்கை யாக இருக்க வேண்டியுள்ளது. ஆதிச்சநல்லூர் இரண்டாம் கட்ட அகழாய்வை மத்திய தொல் லியல் துறை 2005 ஆம் ஆண்டில் நடத்தி முடித்து, இப்போது 15 ஆண்டுகள் ஆகிவிட்டன. இப் போதுவரை அந்த அகழாய்வின் அறிக்கை வெளியாகவில்லை. இந்நிலையில் அருங்காட்சி யகம் குறித்து பேசியுள்ளீர்கள். உங்களுக்கு என்று ஓர் அரசியல் உள்ளது. 100 ஆண்டுகள் சர்வதேச சமூகம் விஞ்ஞானப்பூர்வமாக செய்த ஆய்வையே மறைத்து சரஸ்வதி சிந்து நாகரிகம் என்று சொல்லும்போது ஆதிச்ச நல்லூரை அவர்கள் என்ன வேண்டு மானாலும் சொல்ல வாய்ப்புள் ளது. எனவே அதை மிகுந்த எச்ச ரிக்கையோடும் கவனத்தோடும் தான் அணுக வேண்டும். கீழடியிடம் பாஜகவால் நெருங்க முடியாது கீழடி என்பதே மத்திய பாஜக அரசுக்கு எதிரான ஒரு குறியீட்டுச் சொல். கீழடியில் எதுவுமே இல்லை, அங்கு வரலாற்றுத் தொடர்ச்சி  இல்லை என்று கூறி மத்திய அரசு வெளியே வந்தது. அவர்கள் சொன்னது தவறு என்பதை நான்காம் கட்ட அகழாய்வில் தமி ழக அரசு நிரூபித்துள்ளது. எனவே அவர்கள் இப்போது கீழடியிடம் நெருங்க முடியாது. அப்படி செய் தால் அவர்கள் சொன்னது பொய் என்று நிரூபணம் ஆகிவிடும் என்பதால் ஆதிச்சநல்லூரிடம் வருகிறார்கள். ஆதிச்சநல்லூரின் அகழாய்வு முடிவுகளே இன்னும் வெளிவராத போது எதை வைத்து அருங்காட்சி யகம் அமைக்கப்போகிறீர்கள். எந்தக் கருத்தில் நின்று அந்த அருங்காட்சியகத்தைக் காட்சிப் படுத்தப் போகிறீர்கள்? வெறும் சொற்களைக் கொண்டு தமிழ் சமூகத்தை ஏமாற்றி விட முடியாது. பொருளாதார ஆய்வறிக்கை திருக்குறளைக் கொண்டு தொடங்குகிறது. பிரதம ரும் எல்லா இடங்களிலும் திருக் குறளை சொல்கிறார். ஆனால் ஏன் திருவள்ளு வருக்கு காவிச் சாயம் பூசுகிறார் கள்? தமிழ் மரபை கையகப்படுத்து வது நேர்மையோடு செய்ய வேண் டிய வேலை. அதற்கு குறுக்கு வழி கள் கிடையாது. நீங்கள் குறுக்கு வழிகள் எவ்வளவு கையாண்டா லும் அந்த மரபு உங்களுக்கு எதி ரானது. வைதீகத்தின் மீது நின்று கொண்டு, வேதப் பண்பாட்டின்மீது நின்றுக்கொண்டு, இதுதான் இந்திய வரலாறு என்று சொல்லிக் கொண்டே தமிழை அணுகினால் உங்களால் அதை நெருங்க முடி யாது. இவ்வாறு சு.வெங்கடேசன் கூறினார். “சரஸ்வதி சிந்து நாகரிகத்தின் பட்டறைகளும், ஹரப்பன் முத்தி ரைகளும் குறிப்பிடத்தக்கவை” என்று தனது பட்ஜெட் உரையில் குறிப்பிட்ட நிர்மலா சீதாராமன், சிந்து நாகரிக கால சித்திர எழுத் துக்கள் மூலம் எழுதப்பட்ட சில சொற்களுக்கும் அவர் பொருள் கூறினார். சரஸ்வதி சிந்து நாகரிகம் சுமார் கி.மு. 4000-வது ஆண்டுக்கு முற்பட்டது என்றும் குறிப்பாக இந்த முத்திரைகள் கி.மு 3300-வது ஆண்டைச் சேர்ந்தவை என்றும் நிர்மலா சீதாராமன் கூறினார். ‘ஷ்ரேனி’ என்றால் ‘பட்டறை’ என்றும் முத்திரையில் காணப் படும் ‘சேட்டி’ எனும் சொல்லுக்கு ‘மொத்த வியாபாரி’ என்றும் பொருள், ‘பொத்தார்’ எனும் சொல்லின் பொருள் ‘கருவூ லத்தில் கனிமங்களின் அளவை மதிப்பிடுபவர்’ என்று கண்டறியப் பட்டுள்ளது என்று நிர்மலா தனது உரையில் குறிப்பிட்டார். தமிழக எம்.பி.க்கள் எதிர்ப்பு தனது உரையின்போது ஒரு முறை சிந்து நாகரிகம் என்று கூறிய நிதியமைச்சர், பின்னர் அதைத் திருத்தி ‘சரஸ்வதி சிந்து நாகரி கம்’ என்று குறிப்பிட்டார். இந்தத் தகவல்களை நிதி யமைச்சர் வாசித்தபோது, தமிழக மக்களவை உறுப்பினர்கள் அமர்ந்திருந்த பகுதியில் எதிர்ப்புக் குரல்களும் எழுந்தன. 

                                                                                                                      “மண் பறித்து உண்ணேல்”

இம்முறை பொருளாதாரம் தாண்டி வரலாறு, பண்பாடு என்று தனது தாக்குதல் எல்லையை விரிவாக்கிக் கொண்டிருக்கிறார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.  “சரஸ்வதி சிந்து நாகரிகம்” என்று புதுப்பெயர் சூட்டி இது வரை நடந்த ஆய்வுகளையும், நிரூபணங்களையும் முற்றிலும் மாற்றி அமைக்க நினைக்கிறார். வேத பண்பாட்டினை சரஸ்வதி நாகரிகம் என பெயர்சூட்டி அதனை சிந்துவெளி நாகரிகத்தின் மீது பொருத்த தொடர்ந்து இந்துத்துவாவாதிகள் முயற்சி செய்து வருகிறார்கள். அந்த முயற்சியின் அதிகாரப்பூர்வமான குரலாக நிதியமைச்சரின் குரல் அவையில் எதிரொலிக்கிறது. நாகரிகத்தின் அடிப்படை அடையாளம் செங்கலும், பானை யும் கண்டுபிடித்ததில் இருக்கிறது. ஆனால் வேதத்தில் செங்க லையும் பானையையும் செய்பவர்களை அசுரர்கள் என்று வசை பாடப்படுகிறார்கள். பின் எப்படி உங்களை நாகரிகவாதி என்று உரிமைகொண்டாடுகிறீர்கள்? உங்களுக்கும் சிந்துவெளிப் பண்பாட்டுக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது? சடங்குகளுக்காக ஆங்காங்கே கற்களையும் சுடாத செங்க லையும் பயன்படுத்தி ஹோமம் செய்து, பின்னர் கலைத்து விட்டுப் போகிற பழக்கத்தைத்தான் வேத காலத்தில் பார்க்க முடி கிறது. சடங்குகள் பற்றிய வேத இலக்கிய குறிப்பில் சதபத பிரா மணத்தில் அக்னிசேனா என்ற சடங்கிற்குத்தான் முதன் முதலில் செங்கலைப்பற்றிய குறிப்பே வருகிறது. அதற்கு மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சிந்துவெளி நாகரிகத்தில் சுட்ட செங்கல் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. இன்றைய கீழடி கண்டுபிடிப்பிலும் சுட்டசெங்கல் பயன் பாட்டினை பார்க்க முடியும். எனவே இது வரை நிரூபிக்கப்பட்ட வரலாற்றினை புராணங்களோடு இணைத்து உங்களின் கதை களை தேசத்தின் வரலாறாக மாற்ற நினைக்காதீர்கள். ஒளவை தனது ஆத்திச்சூடியில் “மண் பறித்து உண்ணேல்” என்பாள். வரலாறும், பண்பாடும் கொண்ட மனிதக்கூட்டத்தின் வாழ்விடம்தான் மண். அதனை ஒரு போதும் அதிகாரத்தால் பறித்துவிட முடியாது.

 

;