tamilnadu

img

அன்பால் சூழ்ந்த அத்தாவின் வீடு

சுதந்திர போராட்ட வீரர், தமிழக கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முதுபெரும் தலைவர் அப்துல்வஹாப் அவர்கள் பிறந்த ஊரில் நாங்களும் பிறந்திருக்கிறோம்; அவர் வாழ்ந்த காலத்தில் நாங்களும் வாழ்ந்திருக்கிறோம் என்கிற பெருமையோடும் அவரை இனி பார்க்க முடியாதே என்று கலங்கிய கண்களோடும் அவரது இறுதி நிகழ்வில் ஜனவரி14 அன்று கலந்து கொண்டோம். 1925ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் தேதியில் கம்பம் நகரில் பிறந்த தோழர் அப்துல் வஹாப், படிக்கும் காலத்தில் இந்திய நாட்டின் விடுதலைப் போராட்டத்தில் மாணவர்களோடு முன்வரிசையில் நின்றவர். பின்னர் சோசலிசக் கருத்தால் ஈர்க்கப்பட்டு உத்தமபாளையத்தில் மாணவர்சங்கத்தை ஒருங்கிணைத்து அந்த கூட்டத்திற்கு தோழர் சங்கரய்யாவை அழைத்து மாணவர் சங்கத்தை உருவாக்கியவர்.

வசதியான குடும்பத்தில் பிறந்த அவர் படித்து முடித்துவிட்டு சொத்துக்களை பராமரித்து மேலும் செல்வங்களை பெருக்கி இருக்கலாம்; அல்லது அவருக்கு கிடைத்த விமானப்படை வேலையில் சேர்ந்து தனது குடும்ப வாழ்க்கையை முன்னெடுத்து இருக்கலாம்; மாறாக, இன்றைய இளம் கம்யூனிஸ்டுகள் சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்றான பொது வாழ்க்கைக்கு செல்லும் பிள்ளைகளை சமூகச்சூழல் கருதி தடுத்து நிறுத்தும் அப்பாக்களை போலவே அன்றைக்கும் அப்துல் வஹாப் அவரது தந்தையால் தடுக்கப்பட்டார். ஆனால் அத்தனையையும் நிதானமாக கையாண்டு கம்யூனிஸ்டு இயக்கத்தில் கொடுக்கப்பட்ட அனைத்து வேலைகளையும் தனது ஆற்றல்மிகு சிந்தனையால் வெற்றிகரமாக முடித்து பல பொறுப்புகளுக்கு உயர்ந்தார். சுதந்திரப்போராட்டத்தில் மாணவர்களைத் திரட்டியது தொடங்கி-கம்யூனிஸ்ட் இயக்கம் தடை செய்யப்பட்ட காலத்தில் தலைமறைவு வாழ்க்கை - 16 மாத கால சிறைவாசம்-மாநிலஎல்லை தாண்டி கட்சி கட்டும் பணி என சவாலான வேலைகளை வெற்றிகரமாய் செய்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் வரை உயர்ந்தார்.

மாநில செயற்குழு உறுப்பினராக இருந்தபோது அவருக்கு கொடுக்கப்பட்ட பணி என்ற முறையில் உழைக்கும் மக்களின் வாழ்வியலை பிரதிபலிக்கும்  தீக்கதிர் நாளிதழுக்கு பொதுமேலாளராக இருந்து  அந்த பத்திரிக்கை தினசரி வருவதற்கு தனது வாழ்நாளில் பெரும் பகுதியை தீக்கதிர் அலுவலகத்தில் கழித்தார். இன்றைக்கும் மதுரையின் அடையாளமாய் இருந்து கொண்டிருக்கும் தீக்கதிர் அலுவலகத்தின் கட்டுமானப் பணிக்கு தனது வீட்டில் இருந்த பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள மரப் பொருட்கள் உட்பட கட்டுமான பொருட்களை கொண்டு வந்து சேர்த்தவர். கட்சியின் வரலாற்றில் தனக்கென்று தடம் பதித்திருக்கும் கம்பம் நகரில், கட்சிக்கு சொந்த அலுவலகம் இல்லாத காலத்தில் தனது வீட்டின் ஒரு பகுதியை கட்சி அலுவலகத்திற்கு ஒதுக்கியவர். கம்பம் நகரில் கட்சியை ஒரு முக்கிய அரசியல் சக்தியாக மாற்றிட தோழர் அப்துல் வஹாப் அவர்களது பங்களிப்பே காரணம். இப்படியாக அத்தாவைப் பற்றி சொல்லிக்கொண்டே இருக்கலாம். அதனால்தான் என்னவோ இரங்கல் கூட்டத்தில் தலைவர்கள் ஆற்றிய உரை வழக்கமானதாக இல்லாமல் அவர்களின் பேச்சுக்கள் செதுக்கப்பட்டிருந்தன.

முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாலபாரதி பேசும்பொழுது, அத்தாவின் வீடும் இந்த வீதியும் மறக்க முடியாத ஒன்று. 1990களில் மாதர் சங்க பணிகளுக்காக கட்சியின் பெண் தோழர்கள் கம்பம் வருகின்றபோது அத்தாவின் வீட்டில்தான் தங்குவோம். அவர் ஒரு அப்பாவை போல எங்களையெல்லாம் பாதுகாத்தவர் என்றார்.  நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் பேசும்போது, 1992 ஆம் ஆண்டு தீக்கதிரில்  பணியாற்றினேன். அப்போது அவருக்கு 73 வயது, எனக்கு 23 வயது. தோற்றத்தைப் பார்த்தால் தாத்தாவுக்கும் பேரனுக்கும் இருக்கின்ற உறவை போல் இருக்கும். ‘ஆனால் என்னை ஒருபோதும் பேரனாக பார்த்தது இல்லை. என்னை அந்த வயதில் மிக மரியாதையாக பேசி, வாருங்கள் சு.வெ என்று  வயது வித்தியாசம் இல்லாமல் அனைவரிடமும் பேசி சாப்பிட அழைத்துச் செல்வார்’ என்றார். 

இடுக்கி மாவட்ட செயலாளர் கே.கே. ஜெயச்சந்திரன் பேசும்போது, ஒன்றுபட்ட கோட்டயம் மாவட்டத்திலிருந்து இன்றைய இடுக்கி மாவட்டம் பிரிகின்ற போது மார்க்சிஸ்ட் கட்சி ஒரு சிறிய கட்சி. இங்கு கட்சியை கட்டும் பணிக்கு வந்த குழுவில் தோழர் அப்துல் வஹாப்பும்  ஒருவர் ; 1957ல் நடந்த இடைத்தேர்தலில் இ எம் எஸ் அரசை வெற்றி பெறச் செய்ய தேவிகுளம் சட்டமன்ற தொகுதியில்  மகத்தான பணியாற்றியவர்  என்றார். (இந்த தேர்தல் பிரச்சாரத்தில் தான் பாவலர் வரதராஜன் பாடல்கள் தொழிலாளர்கள் மத்தியில் கம்யூனிஸ்ட் கட்சி மேடைகளில் ஒலித்த காலம்). தீக்கதிர் ஆசிரியர் மதுக்கூர் ராமலிங்கம் பேசும்போது, “ தீக்கதிர் பொது மேலாளராக அத்தா  பணியாற்றிய காலத்தில் அவருடன் பல கூட்டத்தில் பங்கெடுத்து இருக்கிறேன். அப்படியான ஒரு கூட்டத்தில் வார இதழாக வந்து கொண்டிருந்த தீக்கதிர் பத்திரிக்கை ஆறு பக்கங்களாக வந்தபோது பொருளாதார நெருக்கடியால் நான்கு  பக்கமாக மாற்றலாமா என்று விவாதம் நடந்து கொண்டிருந்த வேளையில், தீக்கதிரில் பணியாற்றிய தோழர்கள் சொன்னார்கள், எங்களின் ஊதியத்தை பாதியாக குறைத்துக் கொள்கிறோம், பக்கங்களை குறைக்க வேண்டாம் என்று. அப்படி அவர்கள் சொன்ன போதுதோழர் அப்துல் வஹாப் அவர்கள் கண்ணீர் விட்டு அழுத காட்சியை நேரில் பார்த்தவன் நான். அப்போது அவர் சொன்னது என்ன தெரியுமா? தீக்கதிருக்கு சொத்து இங்கு இருக்கும் கட்டிடங்கள் அல்ல; இங்கு இருக்கும் இயந்திரங்கள் அல்ல; இங்கு இருக்கும் காகிதங்கள் அல்ல; இது போன்ற அர்ப்பணிப்பு உள்ள ஊழியர்கள் தான்  தீக்கதிருக்கு சொத்து” என்று சொன்னார்” என்றார்.

அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் தோழர் ஜி, ராமகிருஷ்ணன் பேசும்போது, “தமிழகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உருவாகும்போது மாநில செயற்குழு உறுப்பினராக இருந்தவர்; தமிழகத்தில் முதல் கம்யூனிஸ்ட் தலைவர்களான தோழர்கள் பி. ராமமூர்த்தி, என்.சங்கரய்யா, ஏ.நல்ல சிவன், ஏ.பாலசுப்பிரமணியம், ஜீவா ஆகியவர்களோடு  பணியாற்றியவர் தோழர் அப்துல் வஹாப் ‘இவரைப்’ போன்ற தோழர்கள் சுதந்திரப் போராட்டத்தில் பங்கெடுத்து விடுதலை கிடைத்த பின்பு சாதி மத பேதமற்ற சுய சார்புப் பொருளாதார  கொள்கையோடு அரசியலமைப்புச்சட்டம் உருவாகவேண்டும் என்று கனவு கண்டார்கள். ஆனால் அதற்கு இன்றைக்கு பெரும் ஆபத்து வந்திருக்கிறது அதை பாதுகாக்க அத்தாவின் தியாகப் பூர்வமான வாழ்க்கையை நாமும் முன்னெடுப்போம்” என்றார், இறுதியாக கட்சியின் மாநில செயலாளர் தோழர் கே.பாலகிருஷ்ணன், ‘இஸ்லாமியர்கள் எப்படி மெக்காவிற்கு சென்று வந்தால் எங்களுக்கு புத்துணர்வு வருகிறது என்று சொல்வார்களோ அதேபோலத்தான் நாங்களெல்லாம் கட்சி பணிகளுக்கு வருகின்ற போது அத்தா வீட்டிற்கு வந்து அவரைப் பார்த்துச் சென்றால் புத்துணர்ச்சியோடு செல்வோம்” என்று பேசிக்கொண்டிருக்கும் போதே அவரது கண்களிலிருந்து கலங்கிய கண்ணீர் துளிகள் வடிந்தன. 

அத்தா மறைவுச் செய்தி அறிந்தவுடன் அதிகாலை 4.30 மணிக்கே அவரது வீட்டில் கால்பதித்த கட்சியின் ஏரியா செயலாளர் ஜி.எம்.நாகராஜன் தலைமையிலான தோழர்கள் உட்பட இரவு 9.30 மணிக்கு இறுதி அடக்கம் நடக்கும் வரை அவரால் வார்க்கப்பட்ட தோழர்கள் ஏ.லாசர் , கே. ராஜப்பன், டி.வெங்கடேசன் தலைமையிலான தேனி மாவட்ட தோழர்கள் அனைவரும் உணர்வுப் பூர்வமாய் இன்குலாப் ஜிந்தாபாத்; அப்துல் வஹாப் ஜிந்தாபாத் என்ற முழக்கத்தோடு பிரியாவிடை கொடுத்தனர். 97 வயது நிரம்பியுள்ள வாழும் வரலாறு தோழர் என்.சங்கரய்யா தொடங்கி எந்த மாணவர் பருவத்தில் தோழர் அப்துல் வகாப் ஈர்க்கப்பட்டாரோ அதே மாணவப் பருவத்தில் இன்று பதினொன்றாம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கும் மாணவர் சங்க தோழர்களான பச்சையப்பன், பழனி, சண்முக பூபதி உட்பட இளம் கம்யூனிஸ்ட்டுகள் வரிசையில் நின்று அஞ்சலி செலுத்தியது தான். அவரது பாரம்பரியம் செறிவோடு தொடர்கிறது என்பதற்கான சான்று.

ஒரு சகாப்தத்தின் தியாக வாழ்க்கையை நெஞ்சில் சுமந்து அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்வோம். போய்வாருங்கள் அத்தா செவ்வணக்கம்!

பா.லெனின்,  தேனி மாவட்டச் செயலாளர், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்