ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞருக்கு போலீசார் அபராதம் விதித்ததால் ஆவேசம் அடைந்த இளைஞர் இருசக்கர வாகனத்திற்கு தீ வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
தில்லி, ஹரியாணா உள்ளிட்ட மாநிலங்களில் ஹெல்மெட் அணியாமல் சென்றால் கடுமையான அபராதங்கள் விதிக்கப்படுகின்றன. இதனால் சாலை விதிகளை சரிவர கடைப்பிடிக்காமல் பிடிபடும் நபர்கள் 20 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரை அபராதங்கள் கட்ட நேரிடுகிறது. இந்நிலையில், தெற்கு தில்லியின் கிரேட்டர் கைலாஷ் பகுதியில் விகாஸ் என்ற இளைஞர் ஹெல்மெட் இல்லாமல் இருசக்கர வாகனத்தில் சென்றதால், அவருக்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்தனர். இதில் ஆவேசமடைந்த அந்த இளைஞர், திடீரென வாகனத்திற்கு தீ வைத்து எரித்தார்.
இதனை அடுத்து போக்குவரத்து போலீஸார் தீயணைப்புத் துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணியாளர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். அதன் பின்னர் அந்த இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.