tamilnadu

புதுச்சேரியில் தனியார் பல்கலைக்கழகம் அமைக்கும் முடிவை திரும்பபெற்றிடுக - இந்திய மாணவர் சங்கம்

புதுச்சேரியில் தனியார் பல்கலைக்கழகம் அமைக்கும் அமைச்சரவை மற்றும் ஆளுநர் கூட்டு சேர்ந்து எடுத்த முடிவை திரும்ப பெற வேண்டும் என இந்திய மாணவர் சங்கம் கோரிக்கைவிடுத்துள்ளது.
இதுகுறித்து இந்திய மாணவர் சங்கம் புதுச்சேரி பிரதேச குழுவின் தலைவர். ச ஜெயபிரகாஷ், செயலாளர். கு விண்ணரசன்  ஆகியோர் விடுத்துள்ள கூட்டறிக்கையில் கூறியிருப்பதாவது;
புதுச்சேரி மாநிலம் உயர்கல்வி கேந்திரம் என்று புதுவை அரசு பிரகடனப்படுத்தியுள்ளது. புதுவையில் மத்திய அரசின் முழு நிதி உதவியோடு செயல்படக்கூடிய ஜிப்மர், புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகம், நோய்க் கடத்தி ஆராய்ச்சி நிறுவனம், தேசிய தொழிற் கல்வி நிறுவனம் மற்றும் புதுவை மாநில அரசின் நேரடி நிர்வாகத்திற்கு உட்பட்ட புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழகம், மருத்துவ கல்லூரி, கால்நடை மருத்துவ கல்லூரி, பல் மருத்துவ கல்லூரி, விவசாய அறிவியல் கல்லூரி போன்ற தேசிய முக்கியத்துவம் வாய்ந்த உயர்கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.  இந்த சூழலில் கடந்த 2015ஆம் ஆண்டு என் ஆர் காங்கிரஸ் ஆட்சியில் தனியார் கல்வி நிறுவனங்களின் லாபத்திற்காக புதுவையில் தனியார் பல்கலைக்கழகம் கொண்டு வருவதற்காக கொள்கை முடிவை எடுத்து அரசாணை வெளியிட்டது. இதனை எதிர்த்து இந்திய மாணவர் சங்கம் கடுமையாக போராடியதை அடுத்து அந்த அரசு ஆணை செயல்படுத்தாமல் நிறுத்தி வைக்கப்பட்டது. இப்பொழுது என் ஆர் காங்கிரஸ் கட்சிக்கு மிகவும் நெருக்கமான ஒரு தனியார் குழுமம் இந்த அரசாணையை செயல்படுத்திட வேண்டி பலவகையிலும் முயற்சி செய்து வருகிறது. இதுதொடர்பாக ஆளும் காங்கிரஸ் அரசை இந்தக் குழுமம் அணுகி உள்ளதாகவும் தெரிகிறது. எனவே புதுவை ஆளும் காங்கிரஸ் அரசு தங்கள் சுயலாபத்திற்காக தனியார் பல்கலைக்கழகம் அமைக்க அனுமதி வழங்கும் சட்டவரைவுக்கு துணைநிலை ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
சின்னஞ்சிறு மாநிலமான புதுவையில் ஏற்கனவே ஒரு மத்திய பல்கலைக்கழகமும், பல தேசிய கல்வி நிறுவனங்களும் செயல்பட்டு வரும் வேலையில் குறிப்பாக மாநில பல்கலைக்கழகங்களை உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளாமல் தனியார் பல்கலைக்கழகம் அமைக்க புதுச்சேரி காங்கிரஸ் அரசு ஆட்சியின் இறுதி காலத்தில் அவசரகதியில் முயற்சித்து வருவது எதிர்காலத்தில் பணம் இருந்தால் மட்டுமே கல்வி என்ற சூழலுக்கு இட்டுச்செல்லும். கடந்த 2016ம் ஆண்டு காங்கிரஸ் அரசு பதவி ஏற்றவுடன் கல்விக்கட்டண நிர்ணயக்குழு மூலம் தனியார் பள்ளிகளுக்கு கட்டணம் நிர்ணயித்தது. ஆனால் 4 ஆண்டுகளில் அரசு நிர்ணயித்த கல்வி கட்டணத்தை ஆரம்ப பள்ளிகள் கூட வசூலிப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆகவே புதுச்சேரி அரசு தனியார் பல்கலைக்கழகம் அமைக்கும் முடிவு என்பது காங்கிரஸ் கட்சிக்கு பயன்தரலாமே தவிர, மாநில மக்களுக்கும், மாணவர்களுக்கும் பயனளிக்காது. ஆகவே புதுச்சேரி அரசும்,  துணைநிலை ஆளுநரும் உடனடியாக மாநில நலனுக்கு எதிரான தனியார் பல்கலைக்கழகம் அமைக்கும் முடிவை திரும்ப பெற வேண்டும் என இந்திய மாணவர் சங்கம் புதுச்சேரி பிரதேச குழு கேட்டுக்கொள்கிறது. என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

;