tamilnadu

img

பீகார்: ஊழல் புகாரைத்தொடர்ந்து புதிதாக பதவியேற்ற  கல்வி அமைச்சர் ராஜினாமா

பீகாரில் ஊழல் புகாரைத்தொடர்ந்து புதிதாக பதவியேற்ற கல்வி அமைச்சர் ராஜினாமா செய்திருப்பது அம்மாநில அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
பீகார் சட்டப் பேரவைக்கு அக்டோபர் கடைசி வாரம் தொடங்கி நவம்பர் முதல் வாரம் வரையிலும் 3 கட்டங்களாக வாக்குப் பதிவு நடைபெற்றது. இதில் தேசிய ஜனநாயகக் கூட்டணி மீண்டும் வெற்றி பெற்றது. இதையடுத்து நிதீஷ் குமார் தலைமையில் 2 பெண்கள் அடங்கிய 14 பேர் கொண்ட அமைச்சரவை ஆட்சிப் பொறுப்பேற்றுள்ளது. இந்நிலையில் ஜனநாயக சீர்திருத்தத்துக்கான சங்கம் (ஏடிஆர்) என்ற அமைப்பு பீகார் அமைச்சரவை குறித்த புள்ளி விவரங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, பீகார் அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள 57 சதவீத அமைச்சர்கள் மீது, அதாவது 8 பேர்கள் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன. இதில் 6 பேர்கள் பிணையில் விட இயலாத, 5 ஆண்டுகளுக்கும் மேல் சிறைத் தண்டனை கிடைக்கக் கூடிய வழக்குகளில் தொடர்புடையவர்கள். இவர்களில் 4 பேர் பாஜகவைச் சேர்ந்தவர்கள். 2 பேர் ஐக்கிய ஜனதா தளத்தையும், தலா ஒருவர் ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா, விகாஸ்ஷீல் இன்சான் கட்சிகளையும் சேர்ந்தவர்கள். மேலும் 13 அமைச்சர்கள் கோடீஸ்வரர்கள் என்றும் அவர்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ.3.93 கோடி எனவும் தெரிய வந்துள்ளது. தாராபூர் தொகுதியில் வெற்றி பெற்று அமைச்சராகியிருக்கும் மேவா லால் சௌத்ரி ரூ.12.31 கோடி சொத்து மதிப்புடன் முதலிடத்தில் உள்ளார்.இவர் பீகார் அரசியலில் கல்வி அமைச்சராக பொறுப்பேற்றிருந்தார். அமைச்சர் அசோக் சௌத்ரி ரூ.72.89 லட்சம் சொத்துகளுடன் கடைசி இடத்தில் இருக்கிறார் என்று தெரிவித்திருந்தது. இதைத்தொடர்ந்து பீகாரில் அமைச்சர்களின் ஊழல் விவகாரம் தற்போது விஸ்வரூபம் எடுக்கத்துவங்கி உள்ளது. 
இதன் காரணமாக ஊழல் குற்றச்சாட்டில் ஈடுபட்ட பீகாரின் புதிய கல்வி அமைச்சராக பொறுப்பேற்ற மேவா லால்சௌத்ரி தற்போது தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.  
 

;