tamilnadu

img

பஞ்சமி நிலமும் திருட்டு நகையும் - பெ.சண்முகம்

பஞ்சமி நிலம் குறித்து 1994 காரணையில் நடைபெற்ற பஞ்சமி நிலமீட்பு போராட்டத்தை தொடர்ந்து அமைப்புகளை சார்ந்தவர்களால் அவ்வப்போது பேசப்பட்டு வந்தாலும், அசுரன் திரைப்படத்தில் “பஞ்சமி நிலம்” என்ற சொல்லாடல் பயன்படுத்தப்பட்டதையொட்டி பஞ்சமி நிலம் என்றால் என்ன என்று அறிந்து கொள்ளும் ஆர்வம் பொதுத்தளத்தில் உருவாகியுள்ளது. அதே நேரத்தில் அது எப்படி மற்றவர்களால் கைப்பற்றப்பட்டு, ஆவணங்களில் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது போன்ற விவாதங்கள் நடந்து வருவது வரவேற்கத்தக்க ஒன்று.

பிரிட்டிஷ் ஆட்சியில் கலெக்டர்கள் (ICS)  மன்னர்கள் போல் தான் நடந்து கொண்டார்கள் என்பதற்கு ஏராளமான நிகழ்ச்சிகள் வரலாற்றுச் சான்றுகளாக உள்ளன. அவர்கள் வைத்ததுதான் சட்டம், விதித்தது தான் வரி, கொடுத்தது தான் தண்டனை. இதிலிருந்து விதிவிலக்காக செங்கற்பட்டு மாவட்ட கலெக்டராக பணிபுரிந்த ஜேம்ஸ் ஹென்றி ஏ.திரமென்ஹீர் தாழ்த்தப்பட்ட மக்களைப்பற்றி கவலைப்பட்டவராக மட்டுமல்லாமல் அம்மக்களின் இழிநிலையைப் போக்க வேண்டுமென்ற குறிக்கோளோடு செயல்பட்டவராக விளங்குகிறார். செங்கற்பட்டு மாவட்ட பறையரின மக்களின் நிலை குறித்து அவர் பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கு அனுப்பிய மிக விரிவான அறிக்கை மிகச்சிறந்த ஆய்வுக்கட்டுரைக்கு ஒப்பானதாகும். அக்கால தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்நிலையை வாசிக்கும் ஒவ்வொருவரையும் கண்ணீர் சிந்த வைக்கும். கல்நெஞ்சத்தையும் கரைத்துவிடும்.

 இந்த அறிக்கையை 1891 அக்டோபர் 5ஆம் தேதி கையெழுத்திட்டு அனுப்பியிருக்கிறார். இந்த அறிக்கை வருவாய்த்துறை அரசாணையாக (1010-1010 A) பிறகு வெளியிடப்பட்டது. திரமென்ஹீரின் எதிர்பார்ப்பு முழுமையடையவில்லை. எப்படியிருப்பினும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு நிலம் கொடுக்க வேண்டுமென்று எழுதிய முதல் பிரிட்டிஷ் அதிகாரி இவராகத்தான் இருப்பார். அப்படி 1892க்கும் 1933க்கும் இடையில் வழங்கப்பட்ட சுமார் 12 லட்சம் ஏக்கர் நிலம் அம்மக்களிடம் இல்லை என்பது நிதர்சனமான உண்மை. அந்த நிலம் பிற சாதியினரிடத்தில் கைமாறி உள்ளது. 

நிபந்தனைகளின் நோக்கம்

பஞ்சமி நிலம் வழங்கப்பட்ட போதே முக்கியமாக இரண்டு நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. 1) 10 ஆண்டு காலத்திற்கு அந்த நிலத்தை விற்க முடியாது. 2) பத்தாண்டு கழித்து விற்பதாக இருந்தால் தாழ்த்தப்பட்ட சாதியை சார்ந்தவருக்குத்தான் விற்க முடியும். இந்த நிபந்தனைகள் மீறப்பட்டால் அது சட்டப்படி செல்லாது என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிபந்தனைகளின் நோக்கம் என்ன? நிலம் பெற்ற அந்த தாழ்த்தப்பட்ட குடும்பம் குறைந்தபட்சம் 10 ஆண்டுகளாவது அதை அனுபவிக்க வேண்டுமென்பது. மற்றொன்று, தாழ்த்தப்பட்ட சமுதாயத்திற்காக ஒதுக்கப்பட்ட இந்த நிலம் அந்த சமுதாயத்திற்குள்ளாகவே மாற்றிக் கொள்வதன் மூலம் அச்சமூகம் முன்னேற  வேண்டும் என்பதற்காகத்தான். ஆனால் இந்த நோக்கம் முழுமையாக குழிதோண்டி புதைக்கப்பட்டு அரசு மற்றும் வருவாய்த்துறையினரின் முழுமையான ஒத்துழைப்போடு ஆவணரீதியாக நிலம் மற்றவர்களுக்கு மாற்றப்பட்டுவிட்டது.

மருத்துவர் ராமதாஸ் , முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் உள்ளதாக கூறி அது குறித்து தொடர்ந்து கேள்விகளை எழுப்பி வருகிறார். தாழ்த்தப்பட்டோர் தேசிய ஆணையமும் இதை ஒரு புகாராக எடுத்துக்கொண்டு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. அந்த நிலம் குறித்த சர்வே எண் சம்பந்தப்பட்ட ‘ஏ’ பதிவேட்டை பார்த்தால் உண்மை தெரிந்துவிடப்போகிறது. அரசு நினைத்திருந்தால் இதை உடனடியாக வெளியிட்டிருக்க முடியும். ஆனால் நடப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. முரசொலி அலுவலகம் உள்ள இடம் பஞ்சமி நிலமாக இருந்தால் சட்டப்படி அது மீட்கப்பட வேண்டுமென்பதில் இருவேறு கருத்துக்களுக்கு இடமில்லை. ஆனால் இதை மட்டுமே பேசுவதும், இந்த ஒரு நிலத்திற்காக மட்டும் புகார் பதிவு செய்வதும் அரசியல் உள்நோக்கத்தோடு மேற்கொள்ளப்படுகிறது என்பதில் சந்தேகமில்லை. பெரும்பகுதியான பஞ்சமி நிலம் மற்ற சாதியினருக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில் அதை முழுமையாக மீட்க வேண்டுமென்று பேசினால் அது தாழ்த்தப்பட்ட சமுதாய மக்கள் மீதுள்ள அக்கறையாக எடுத்துக்கொள்ளலாம். ஆனால் இவர்கள் நடத்திக்கொண்டிருப்பது லாவணிக் கச்சேரி என்பதை தவிர பஞ்சமி நிலத்தை மீட்க வேண்டுமென்ற உண்மையான அக்கறையில்லை என்பது குழந்தைக்குக் கூடதெரியும்.

தீர்ப்புகள், அரசாணைகள் அதிகாரிகளின் அக்கறையின்மை 

ஓரடி நிலத்திற்காக உச்சநீதிமன்றம் வரை சென்று வழக்கு நடத்துகின்றனர். நிலத்துக்கான மோதலில்  எத்தனையோ பேர் உயிரிழந்திருக்கின்றனர். உயிரை இழந்தாலும் அந்த குடும்பம் நிலத்தை இழக்கத் தயாராக இல்லை. ஆனால், தாழ்த்தப்பட்ட மக்களுக்காக அரசு வழங்கிய 12 லட்சம் ஏக்கர் நிலம் சட்டவிரோதமாக பறிக்கப்பட்டுவிட்டது. வாங்கியவர்கள் பணம் கொடுத்து தானே வாங்கி இருக்கிறார்கள். அது பஞ்சமி நிலம் என்று தெரியாமல் வாங்கிவிட்டார்கள் என்றெல்லாம் இந்த தவறு நியாயப்படுத்தப்படுகிறது. அதை திரும்பக் கேட்பது சரியல்ல என்று பலர் பேசுகின்றனர். திருடு போன நகை ஒருவரிடம் இருக்கிறது. காவல்துறை வந்து கேட்கும் போது இது திருட்டு நகை என்று எனக்கு தெரியாது. நான் பணம் கொடுத்துத்தான் வாங்கினேன். ஆகவே எனக்கு தான் சொந்தம் என்றால் விட்டுவிடுவார்களா? நகையை இழந்தவர்கள் பாவம் பணம் கொடுத்து ஏமாந்து இருக்கிறான், எனவே எனது நகை போனால் பரவாயில்லை என்று புகாரை திரும்பப் பெற்றுக் கொள்வார்களா? மாறாக நகையை திருடியவன், வாங்கியவன் எல்லோரும் குற்றவாளிக் கூண்டில் ஏற்றப்பட்டு நகைக்கு உரிமையாளர்களிடம் நகை திரும்ப ஒப்படைக்கப்படுவது தானே சட்டப்படி நியாயம். 

மேலும் நீதிமன்ற தீர்ப்புகள், அரசு உத்தரவுகள் அனைத்தும் பஞ்சமி நிலம் மீட்கப்பட்டு சம்பந்தப்பட்ட பிரிவு மக்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டுமென்று தெளிவாக குறிப்பிட்டுள்ளது. பஞ்சமி நிலம் தொடர்பான வருவாய் நிலை ஆணை எண் 15ம், சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் சந்துரு  7.11.2008 அன்று வழங்கிய தீர்ப்பும் மிக முக்கியமானது. ஆனாலும், அந்த தீர்ப்புகளை, அரசு ஆணைகளை நிறைவேற்ற வேண்டிய அதிகாரிகள் இதில் விருப்பமில்லாமலும், அக்கறையற்றும் இருக்கிற காரணத்தினால் எல்லாம் ஏட்டில் மட்டுமே இருக்கிறது.

பயன்படுத்தப்படாத 27-ஆவது அதிகாரம்

பெரும்பாலான நிலங்கள் “நிலவுடமைப் பதிவு மேம்பாட்டு திட்டம்” (UDR) செய்யப்பட்ட போது ஆவணங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் ஊராட்சி தலைவருக்கு 29 அதிகாரம் வழங்கியுள்ளது. அதில் 27ஆவது அதிகாரம் பஞ்சமி நிலமீட்பு என்பது ஆகும். ஆனால் இந்த அதிகாரம் பயன்படுத்தப்படவே இல்லை.  சட்டவிரோதமாக இந்த நிலத்தை வைத்திருப்பவர்களுக்கு பிரிட்டிஷ்காரன் கொடுத்ததை நாம் பறித்துக் கொண்டோமே என்ற குற்ற உணர்ச்சி கொஞ்சமாவது இருக்க வேண்டும். தற்போதைய ஆட்சியாளர்களுக்கு நமது அரசால் தான் நிலம் கொடுக்க முடியவில்லை. குறைந்தபட்சம் பிரிட்டிஷார் கொடுத்த பஞ்சமி நிலத்தையாவது மீட்டு தாழ்த்தப்பட்ட மக்களிடம் ஒப்படைப்போம் என்ற அரசியல் உறுதி வேண்டும். அந்த உறுதி இதுவரை ஆட்சி புரிந்த யாரிடமும் இல்லாமல் போய்விட்டது. 

சட்டம், நீதிமன்றம், அரசு உத்தரவுகள் எல்லாம் சாதகமாக இருந்தும் நிலம் மீட்கப்பட முடியவில்லை. நிலத்துக்கான போராட்டம் அவ்வளவு சுலபமானது அல்ல என்பதற்கு இது மிகச்சிறந்த உதாரணமாகும். சமூக, பொருளாதார, அரசியல் மேம்பாட்டை நிர்ணயிக்கும் காரணியாக நிலம் பயன்படுகிறது என்பதை மக்கள் உணர வேண்டும். நிலத்துக்கான உரிமை படைத்த மக்களிடம் இதற்கான விழிப்புணர்வும், போராட்டக் குணமும் வளர வேண்டும். மீட்கும் வரை ஓயமாட்டோம்; அரசை நிர்பந்தித்து நிலத்தை மீட்போம் என்ற உறுதி தேவை.