கேள்வி: இந்தத் தேர்தல் உங்களுக்கு எந்தவிதத்தில் முக்கியத்துவம் வாய்ந்தது?
அஜித் சிங்: இந்தத் தேர்தல் எனக்கு எப்படி முக்கியத்துவம் வாய்ந்தது என்று கேட்கிறீர்கள். அது இப்போது கேள்வியே அல்ல. இது நாட்டிற்கு எந்த அளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்தது, ஜனநாயகத்திற்கு எந்த அளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்தது, நம் அரசமைப்புச்சட்டத்தைத் தொடர்ந்து பாதுகாப்பதற்கு எந்த அளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்தது, நம் அரசமைப்புச்சட்டத்தின் கீழ் இயங்கும் அமைப்புகள் அனைத்தையும் பாதுகாப்பதற்கு எந்த அளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்று பார்க்கப்பட வேண்டும். நம் அரசமைப்புச்சட்டத்தின்கீழ் இயங்கும் அமைப்புகள் மீது மக்கள் நம்பிக்கை இழப்பார்களானால், பின் நாட்டில் ஜனநாயகமே இருக்காது. எனவே, இந்த மக்களவைத் தேர்தல் மிகவும் முக்கியமானதாகும். அமித் ஷா கூறியதைப்போல, இந்தத் தடவையும் மோடி வென்றுவிட்டார் என்றால், அடுத்த 50 ஆண்டுகளுக்கு அவர்தான் பிரதமர். இதன் பொருள் நாட்டில் ஜனநாயகம் இருக்காது என்பதேயாகும்.
கேள்வி: இது ஆர்எல்டி, சமாஜ்வாதி கட்சி அல்லது பகுஜன் சமாஜ் கட்சி ஆகியவற்றிற்கு மாபெரும் சவால் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?
அஜித் சிங்: உத்தரப்பிரதேச மாநிலத்தைப் பொறுத்தவரை ஒரு விஷயம் மிகவும் தெளிவானது. ஆர்எல்டி, சமாஜ்வாதி கட்சி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிக் கூட்டணியை எவராலும் வெல்ல முடியாது.
கேள்வி: ஏன் அப்படி நினைக்கிறீர்கள்?
அஜித் சிங்: கணக்கு போட்டு பாருங்கள்.
கேள்வி: வெறும் கணக்கு மட்டும்தானா?. கூட்டணிக்கு வேறெதுவும் உண்டா?
அஜித் சிங்: சமூகத்தின் அனைத்துப் பகுதியினரும் - அது விவசாயிகளாக இருந்தாலும் சரி, அல்லது இளைஞர்களாக இருந்தாலும் சரி, அல்லது சிறுபான்மையினராக இருந்தாலும் சரி அல்லது தலித்துகளாக இருந்தாலும் சரி - அனைத்துத்தரப்பினருமே இந்த அரசாங்கத்தின்மீது கடும் கோபத்துடன் இருக்கிறார்கள். ஜனநாயகத்தில் தேர்தலின் பங்கு என்ன? ஆட்சியிலிருந்தவர்கள் தாங்கள் ஆட்சி புரிந்த ஐந்தாண்டுகளில் என்ன சாதித்திருக்கிறார்கள் என்று ஆராய்ந்து, அடுத்த ஐந்தாண்டு காலத்திற்கு அவர்களே மீண்டும் ஆள்வதற்கு வாய்ப்பளிக்கலாமா என்று ஆராய்ந்து முடிவு எடுப்பதேயாகும். இந்தக் கோணத்தில் நீங்கள் ஆராய்ந்தீர்கள் என்றால் அவர்கள் ஏராளமான வாக்குறுதிகள் அளித்ததைத் தவிர வேறு எதுவுமே செய்யவில்லை என்பது நன்கு விளங்கும். அவர்கள் அளித்திட்ட வாக்குறுதிகளில் ஒன்றைக்கூட நிறைவேற்றிடவில்லை. விவசாயிகளுக்கு உற்பத்திச் செலவினத்தில் ஒன்றரை பங்கு அளிப்போம் என்று வாக்குறுதி அளித்தார்கள். அதனைச் செய்திடவில்லை. இளைஞர்களுக்கு, ஒவ்வோராண்டும் இரண்டு கோடி பேருக்கு வேலை அளிப்போம் என்றார்கள். இப்போது அவர்களை பக்கோடா விற்றுப் பிழைத்துக் கொள்ளுங்கள் என்கிறார்கள். கங்கை தூய்மைத் திட்டம், எதுவுமே நடக்கவில்லை. இந்தியாவில் உற்பத்தி செய்வோம் திட்டம், எதுவுமே நடக்கவில்லை. நவீன நகரங்கள் என்றார்கள், எங்குமே உருவாகவில்லை. இவை அனைத்தும் ஆட்சியாளர்கள் முன்பு வைக்கப்படும் கேள்விகளாகும். தேர்தல் பிரச்சாரம் துவங்கிவிட்டது. எனவே இந்தக் கேள்விகள் அனைத்தும் மீண்டும் முன்னுக்கு வரும். இந்தப் பிரச்சனைகள் மீது மக்கள் தீர்மானிப்பார்கள்.
இதையெல்லாம் கூறாமல் ஊடகங்கள் பாலக்கோடு சம்பவத்தை மட்டுமே தூக்கிப் பிடிக்கின்றன. பாலக்கோடு விமானத் தாக்குதலைப் பொறுத்தவரை, நாம் ஒவ்வொருவருமே நம் ராணுவத்தின் பக்கம்தான் இருக்கிறோம்.
கேள்வி: நீங்கள் பாக்பாத் தொகுதியில் பல முறை போட்டியிட்டீர்கள். ஆனாலும் வெற்றி பெறவில்லை. இப்போது மதவெறிக் கலவரம் நடந்த முசாபர் நகரில் போட்டியிடுகிறீர்கள்?
அஜித் சிங்: சென்ற ஆண்டு பிப்ரவரி 13 அன்று, நான் முசாபர் நகருக்குச் சென்றேன். பிப்ரவரி 12 என்னுடைய பிறந்த நாள். எனக்கு 79 வயது நிறைவடைந்துவிட்டது. அப்போது நான் கூறினேன், “எனக்கு 80 வயது ஆகும்போது இந்த நகரை இவ்வாறு மதத்தால் பிரித்திடும் வெறியர்களிடமிருந்து காப்பாற்றி, அனைவரும் சகோதரத்துவத்துடன் வாழும் ஒன்றாக மாற்றுவதற்காக என்னை நான் அர்ப்பணித்துக் கொள்வேன்,” என்றேன். கடந்த ஓராண்டு காலமாக இங்குள்ள பத்து மாவட்டங்களுக்கு இரண்டு, மூன்று தடவைகள் நான் சென்றேன். அங்கு வாழும் பலதரப்பட்ட குழுவினர்களுடனும் விவாதங்கள் நடத்தினேன். இப்போது அங்கே மதத்தின் அடிப்படையில் வித்தியாசங்கள் கிடையாது. கைரானா தேர்தல், எங்கள் வாக்கு வங்கியில் ஏற்பட்டிருந்த பிரிவினையைக் களைந்து அனைவரையும் பிணைத்திருக்கிறது.
கேள்வி: முன்பு இருந்ததைப்போலவே ஜாட் இனத்தவர்களும், முஸ்லிம்களும் மீண்டும் ஒன்றாகிவிட்டார்கள் என்கிறீர்களா?
அஜித் சிங்: ஆம், ஆம்! கைரானாவில் இதுமட்டுமல்ல. அடிப்படை வாக்காளர்களான விவசாயிகள் அனைவரும் எங்களுக்கு வாக்களித்தார்கள். அனைத்து சாதிகளைச் சேர்ந்த, அனைத்து மதங்களைச் சேர்ந்த விவசாயிகளும் எங்களுக்கு வாக்களித்தார்கள். இங்கே மற்றுமொரு முக்கிய பிரச்சனை, பசு. பசு இங்கே பூஜிக்கப்படுகிறது. அதே சமயத்தில் விவசாயிகளின் உடனடி ஏடிஎம்களாக விளங்குபவைகளும் பசுக்கள் மற்றும் கால்நடைகள்தான். விவசாயிகளுக்கு உடனடியாகப் பணம் தேவை என்றால் அவர்கள் தங்களின் சில கால்நடைகளை விற்பார்கள். இப்போது அந்த நிலைமை இல்லாததால் விவசாயிகள் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள். அடுத்து, கரும்பு. விவசாயிகளுக்கு, தாங்கள் விளைவித்த கரும்புக்கு உரிய விலை கிடைக்கவில்லை. இங்குள்ள விவசாயிகளின் பொருளாதார ஜீவனே கரும்புதான். அடுத்து தெருவில் சுற்றித்திரியும் விலங்குகள். அவை, விவசாயிகள் விளைவித்திடும் அனைத்துப் பயிர்களையும் தின்று விவசாயிகளைக் கடும் பாதிப்புக்கு ஆளாக்கி வருகின்றன. இதனால் விவசாயிகள் மத்தியில் பாஜக ஆட்சியாளர்களுக்கு எதிராகக் கடும் கோபம் நிலவுகிறது. இது இங்கே மாபெரும் பிரச்சனையாகும்.
கேள்வி: உங்கள் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக இது இருந்திடுமா?
அஜித் சிங்: நான் சமூக வலைத்தளங்கள் மற்றும் யூ டியூப் காணொலிகள் பலவற்றையும் பார்த்தேன். அவற்றில் விவசாயிகள் என்ன கூறுகிறார்கள் தெரியுமா? “யோகி என்ன செய்துகொண்டிருக்கிறார் என்று பாருங்கள். எங்கள் பயிர்களைத் தின்று கொண்டிருக்கிறார்.” தெருவில் அலையும் பசுக்களை அவர்கள் யோகி என்றும் மோடி என்றும் அழைக்கிறார்கள்.
கேள்வி: ஆனால் பாஜகவோ தாங்கள்தான் பசுக்களை வெட்டப்படுவதிலிருந்து பாது காப்பவர்கள் என்று கூறிக்கொண்டிருக்கிறதே?
அஜித் சிங்: இங்குள்ள நிலைமை குறித்து ஒவ்வொருவரும் நன்கு அறிவார்கள். இப்போதுள்ள நிலைமை முன்பிருந்ததைவிட மிகவும் மோசமாகும்.
கேள்வி: கரும்பு, பசுக்கள் மற்றும் மதப்பிரிவினை தவிர வேறெந்த பிரச்சனை முக்கியமானது எனக் கருதுகிறீர்கள்?
அஜித் சிங்: வேலையில்லாத் திண்டாட்டம் மிகப் பெரிய பிரச்சனையாக உருவாகி இருக்கிறது. ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு முறைசாராத் தொழிலில் ஈடுபட்டிருந்தவர்களை கடுமையாகப் பாதித்திருக்கிறது. அதேபோன்று ஜிஎஸ்டி, விவசாயிகள் பிரச்சனை ஆகியவையும் முக்கியமான பிரச்சனைகளாகும். ஆட்சியாளர்கள் விவசாயிகளுக்கு முதலில் குறைந்தபட்ச ஆதார விலை அறிவிக்கிறார்கள். பின்னர் அனைத்து விவசாயப் பொருள்களை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்கிறார்கள். எனவே விவசாயிகளுக்கு தாங்கள் விளைவித்த பொருள்களுக்கு, குறைந்தபட்ச ஆதார விலை கிடைத்திடவில்லை. அடுத்து மின்சாரக் கட்டணங்கள் இரண்டு மடங்கு உயர்ந்துவிட்டன. டிராக்டர்களுக்கு முன்பெல்லாம் வரி கிடையாது. ஆனால் இப்போது அவையும் வணிக வாகனங்கள் என்று அறிவிக்கப்பட்டிருக்கின்றன. எனவே ஒவ்வோராண்டும் அவர்கள் வரி செலுத்திட வேண்டும். இத்துடன் ஜிஎஸ்டி வேறு.
அதுமட்டுமல்ல, பத்தாண்டுகளுக்குப்பின்னர் புதிய டிராக்டர் வாங்கிட வேண்டும் என்று நிர்ப்பந்திக்கிறார்கள். விவசாயிகள் எவரும் இதனை ஏற்கமாட்டார்கள். அவர்கள் தங்கள் டிராக்டர்களை 40 ஆண்டுகளாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். ஆட்சியாளர்களுக்கு, கிராமப்புற பொருளாதாரம் குறித்து எதுவுமே தெரியவில்லை.
கேள்வி: ஆர்எஸ்எஸ்/பாஜக வகையறாக்கள் இதர அரசாங்கங்கள் எல்லாம் ஊழல் மிகுந்தவை என்றும் தாங்கள்தான் சுத்தமானவர்கள் என்றும் கூறிவருகின்றனவே!
அஜித் சிங்: ஒரு கிராமத்திற்கோ அல்லது நகரத்திற்கோ சென்று எவராவது ஒருவரைப் பார்த்து, “ஊழல் அதிகரித்திருக்கிறதா?” என்று கேளுங்கள். அவர்கள் அனைவருமே ‘ஆம்’ என்றுதான் பதில் கூறுவார்கள்.
மற்ற அனைத்தையுமே மறந்துவிடுவோம். ஜனநாயகத்தில் பிரதமரின் கடமை என்ன? அவர் அனைவரின் கருத்துக்களையும் கேட்க வேண்டும், அனைவரையும் கலந்தாலோசிக்க வேண்டும், பின்னர் ஒரு முடிவினை எடுத்திட வேண்டும். ஆனால், மிஸ்டர் மோடி, எவரையும் கேட்பதில்லை, எவரையும் கலந்தாலோசிப்பது இல்லை, பத்திரிகையாளர் சந்திப்பில் கேட்கப்படும் எந்தக் கேள்விக்கும் பதில் அளிப்பது இல்லை.
56 அங்குல மார்பு இருப்பது நல்லதுதான், ஆனால் அதே சமயத்தில் பெரிய அளவிற்கான இதயமுள்ளவராகவும் இருந்திட வேண்டும்.
ஆனால் மோடியைப் பொறுத்தவரை அவருக்கு ஏழைகள் பற்றி எந்த அக்கறையும் கிடையாது. அதேபோன்று ஒடுக்கப்பட்டவர்கள், விவசாயிகள் மற்றும் வேலையில்லா இளைஞர்கள் பற்றியும் எவ்விதமான அக்கறையும் கிடையாது.
கேள்வி: கூட்டணியில் உங்கள் கட்சிக்கு மூன்று இடங்கள் மட்டும் அளிக்கப்பட்டிருக்கிறதே. (முசாபர்நகர், பாக்பாத் மற்றும் மதுரா) நீங்கள் மனநிறைவு அடைந்துள்ளீர்களா?
அஜித் சிங்: கூட்டணி என்று வரும்போது மனநிறைவு கொண்ட கட்சி என்று எதுவும் கிடையாது. எனவே இது இங்கே முக்கிய பிரச்சனை கிடையாது. நாம் எதிர்கொள்ளும் பிரச்சனை இதைவிடப் பெரியது. இத்தகைய சிறுசிறு வேறுபாடுகளை ஒதுக்கித்தள்ளிவிட்டோம்.
கேள்வி: ஏப்ரல் 7 அன்று அகிலேஷ் யாதவ், மாயாவதி மற்றும் நீங்கள் பங்கேற்கும் மாபெரும் பேரணி சகரன்பூரில் நடைபெறவிருக்கிறது. உத்தரப்பிரதேசத்தைப் பொறுத்தவரை அதன் முக்கியத்துவம் என்ன?
அஜித் சிங்: இந்தக் கூட்டணி கோரக்பூர், புல்பூர் மற்றும் கைரானாவில் ஏற்கனவே உருப்பெற்றுவிட்டது. இப்போது அது முறைப்படுத்தப்பட்டிருக்கிறது.
நன்றி: தி இந்து
தமிழில்: ச.வீரமணி