1965 - ‘அனைத்து வடிவங்க ளிலான இனப் பாகுபாடு களையும் அகற்றுவதற்கான பன்னாட்டு உடன்படிக்கை’ ஐக்கிய நாடுகள் அவையில் நிறைவேற்றப் பட்டது. உலகின் பல பகுதிகளிலும் காணப்பட்ட யூத எதிர்ப்பு நடவடிக்கைகளால், இன, மத, தேசிய வெறுப்புணர்வுகளின் அனைத்து வெளிப்பாடுகளும், நடைமுறைகளும், 1945இல் ஐநா உருவாக்கப்பட்டபோது ஏற்கப்பட்ட அமைப்புப் பட்டயத்திற்கும், 1948இல் நிறைவேற்றப்பட்ட உலக மனித உரிமை கள் பிரகடனத்திற்கும் எதிரானவை என்றும், அத்தகைய செயல்களைத் தடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக மேற்கொள்ள வேண்டுமென்றும், டிசம்பர் 1960இல் ஐநா தீர்மானம் நிறைவேற்றியது. இதைத் தொடர்ந்து, ஐநாவின் ‘பொருளாதார, சமூக அவை’ உருவாக்கிய, சகிப்பின்மைக்கெதிராக மக்களுக்கு விழிப்பு ணர்வூட்டவும், பாகுபாடு காட்டும் சட்டங்களைக் கைவிடவும் அரசுகளைக் கோரும் ‘இனப் பாகுபாடு, தேசிய-மத சகிப்பின்மை ஆகியவற்றின் வெளிப்பாடுகள்’ என்ற தீர்மானம், 1961இல் போதிய அவகாசமில்லாததால் அடுத்த ஆண்டில் நிறை வேற்றப்பட்டது.
இத்தீர்மானத்தின்மீதான விவாதத்தின்போது, ஒரு பன்னாட்டு உடன்படிக்கை வடிவிலான உறுதியான நடவடிக்கை தேவையென்று ஆப்ரிக்க நாடுகள் வலியுறுத்தின. கட்டுப்படுத்தும் உடன்படிக்கையாக இல்லாமல், பிரகடனம் மட்டும் போதுமென்று சில நாடுகள் விரும்பின. இனப் பாகுபாட்டைக் குற்றமாக்கு வதிலும்கூட, வன்முறையாக உருப்பெற்ற அல்லது உருப்பெறும் வாய்ப்புள்ள நடவடிக்கைகளை மட்டும் குற்றமென்று அறிவிக்கவேண்டும் என்று அமெரிக்கா வாதிட்டது. இனவாத, பாசிச அமைப்புகள் மட்டுமின்றி, இனப் பாகுபாட்டை கடைப்பிடிக்கும், தூண்டும் அனைத்து இயக்கங்களையும் தடைசெய்ய வேண்டு மென்று சோவியத் ஒன்றியம் வாதிட்டது. வெறுப்புப் பேச்சைக் குற்றமாக்கும் போது, மனித உரிமைப் பிரகடனத்திற்குட்பட்டு முடிவெடுக்கப்படும் என்ற சமாதா னத்துடன் உருவாக்கப்பட்ட வரைவுப் பிரகடனம் 1963இல் ஏற்கப்பட்டது. முன்னுரி மையளிக்கப்பட்டு, 1964இல் இதற்கான உடன்படிக்கை உருவாக்கப்பட்டாலும், 1965இன் பொதுக்குழுவில்தான் நிறைவேற்றப்பட்டது. மதப் பாகுபாட்டுக்கெதிரான உடன் படிக்கை தனியாக நிறைவேற்றப்படாவிட்டாலும், ஐநா அமைப்புப் பட்டயமும், மனித உரிமைப் பிரகடனமும் எந்த மதத்தையும் பின்பற்றும் சுதந்திரத்தை அளிப்பதுடன், மத அடிப்படையிலான பாகுபாடுகளைத் தடைசெய்கின்றன.
- அறிவுக்கடல்