தேனியில் தனியார் எண்ணெய் ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 2 பேர் படுகாயம் அடைந்து உள்ளனர்
தேனி அருகே ரத்தினம் நகரில் கருணாகரன் என்பவருக்கு சொந்தமான எண்ணெய் ஆலை இயங்கி வருகிறது. நேற்றிரவு சுமார் பத்து மணியளவில் ஆலையின் கொதிகலன் ஒன்றில் தீப்பொறி ஏற்பட்டதில் ஆலை முழுவதும் தீ பரவியது. தீ மளமளவென பரவியதை அடுத்து, பணியில் இருந்து 46 ஊழியர்கள் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். பாண்டியன் மற்றும் பால்பாண்டியன் ஆகிய இருவருக்கு மட்டும் தீக்காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் இருவரும் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தேனி, பெரியகுளம், ஆண்டிபட்டி, போடி, மதுரை, வத்தலகுண்டு ஆகிய பகுதிகளில் இருந்து பத்துக்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு, 50க்கும் மேற்பட்ட வீரர்கள் தீயை அணைக்கும் பணிகளில் ஈடுபட்டனர். ஆனால் விபத்து ஏற்பட்டு பத்து மணி நேரத்துக்கு மேல் ஆகியும், தீயின் தாக்கம் குறையவில்லை. எண்ணெய் ஆலை என்பதால், தீயை கட்டுப்படுத்துவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தினால் ஆலையில் இருந்த 15 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் முற்றிலுமாக எரிந்து சாம்பலாகி உள்ளது.
இதற்கிடையில் எண்ணெய் ஆலையின் அருகே உள்ள மின்மாற்றி தீயில் வெடித்தது. இதனால் அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. தீ விபத்துக்கான காரணம் குறித்து அல்லிநகரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.