tamilnadu

img

வளர்ச்சி என்பது வாழ வழியற்றவர்களுக்கா? பன்னாட்டு முதலாளிகளுக்கா? திருவண்ணாமலையில் கே.பாலகிருஷ்ணன் கேள்வி

திருவண்ணாமலை,ஏப். 28-8 வழிச் சாலை சவால்களும், எதிர்கால செயல்பாடுகளும் என்ற தலைப்பில் திருவண்ணாமலையில் கருத்தரங்கம் நடைபெற்றது. 8 வழிச் சாலை எதிர்ப்பு கூட்டமைப்பு சார்பில்நடைபெற்ற இந்த கருத்தரங்கத்திற்கு, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் பி.சண்முகம் தலைமை தாங்கினார். இதில் கலந்துகொண்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேசியது வருமாறு:-தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன், மீத்தேன் எரிவாயு என புதிய, புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தி, ஏழை விவசாய மக்களின் வாழ்வாதாரத்தை அழித்து, அவர்களை, நிலங்களை விட்டு அப்புறப் படுத்தபல்வேறு திட்டங்கள் அமல்படுத்தப்படுகின்றன.எரிவாயு, எண்ணெய் வளம் தேவை என்கின்றனர் ஆட்சியாளர்கள். கடந்த பிப்ரவரி 19 அன்று, மத்திய அரசு, காவிரி டெல்டா பகுதியில் எரிவாயு எடுப்பதற்கு அனுமதி கொடுத்துள்ளது. இதனால், மிகப் பெரிய சாகுபடி, பாசன பகுதி அழிந்து போகும். மக்கள் வாழ்வு சிதறுண்டு போகும்.வளர்ச்சி, வளர்ச்சி என்று சொல்கிறார்கள். நாடு வளர்ச்சி பெற வேண்டாமா என்றும் கேட்கிறார்கள். அந்த வளர்ச்சி யாருக்கு என்பது தான் நமது கேள்வியாக உள்ளது. அதுகுறித்து நாம் கேள்வி கேட்டால், நாம் தேச வளர்ச்சிக்கு தடையாக உள்ளது போல் குற்றச்சாட்டு தெரிவிக்கின்றனர். இந்திய வளரவேண்டும், இந்திய மக்கள் வளம் பெற வேண்டும். அதில் எவ்வித ஆட்சேபணையும் நமக்கு இல்லை.ஏற்கனவே வாழ்க்கைக்கு வழியற்றவர்களுக்கு,  வாழ வகை செய்வதே உண்மையான வளர்ச்சி. 

இயற்கை வளங்களையும், கனிம வளங்களையும், அழித்து, மக்களின் உணவு உற்பத்தியை சிதைத்து ஏற்படும் வளர்ச்சி உண்மையான வளர்ச்சி அல்ல. தற்போது, வளர்ச்சி என்ற பெயரில், கொண்டுவரப்படும் திட்டங்கள், பன்னாட்டு முதலாளிகளுக்கும், உள்நாட்டு அதானி, அம்பானிகளுக்காகவும் கொண்டுவரப்படுகிறது.  இதற்காக நமது தேச மக்களை அழிக்கப்பட வேண்டுமா என்பதே நமது கேள்வியாக உள்ளது. இந்த 8 வழிச் சாலை திட்டத்தில், அடிப்படை வழிமுறைகளை கடைபிடிக்காமல், சுற்றுச்சூழல் அனுமதி பெறாமல், அவசரகதியில் திட்ட அறிக்கை, ஆய்வு அறிக்கையை சமர்ப்பித்துள்ளனர். அடிப்படை ஜனநாயக உரிமை கூட இல்லாமல், தமிழக அரசு, காவல்துறையை வைத்து, கிராம விவசாயிகளை, ராணுவ தீவிரவாதிகளை போல், தாக்குவதும், மிரட்டுவதும், கேவலமாக சித்தரிப்பதுமாக செயல்படுகிறது. இது குறித்துநீதிமன்றம், அரசு மீது, அடுக்கடுக்காக குற்றச்சாட்டு  தெரிவித்துள்ளது. நீதிமன்ற குற்றச்சாட்டுக்கு, அரசும் பதில் சொல்லவில்லை, அதிகாரிகளும் பதில் சொல்லவில்லை, சட்டத்தை காலில் போட்டு மிதிக்கும் நிலைமையே உள்ளது.பொள்ளாச்சி சம்பவங்களை போல, தேசத்தில் பல சமூக விரோதசெயல்கள் நடந்து கொண்டுள்ளது. அங்கெல்லாம் சமூகவிரோதிகள் மீது நடவடிக்கை எடுத்து வீரம் காட்டாத காவல்துறை, கிராம விவசாயிகளை, விவசாய குடும்பத்தைச் சேர்ந்த பெண்களை, தாக்குவதும் மிரட்டுவதும் ஏற்புடையதா என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.நீதிமன்ற தீர்ப்பு வந்த பிறகும் கூட, இந்த திட்டத்தை நிறைவேற்று வோம் என, மத்திய அமைச்சர் சொல்கிறார். எதிர்காலத்தில் இந்ததிட்டத்தை மத்திய, மாநில அரசுகள் மீண்டும் கையிலெடுக்க நினைத்தால், அதற்காக கடுமையான போராட்டம் நடத்த நாம் தயாராக வேண்டும்.

ஏற்கனவே 8 வழிச் சாலை காக்க நாம் போராடி வந்தோம் இனிவரும் காலங்களில் நீதிமன்ற உத்தரவு எனும் ஆயுதத்துடன் போராட்டக் களத்தில்இறங்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் கே.பாலபாரதி தனது துவக்கஉரையில்,“எட்டு வழிச் சாலை திட்டத்தை தடை செய்து உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில், மத்திய அமைச்சர் ஒருவர், மீண்டும் சாலை அமைப்போம் என்று கூறியபோது, வாய்மூடி மவுனியாய் நின்றவர் எடப்பாடி” என்றார்.மத்திய அமைச்சரின் பேச்சை தடுக்கும் விதமாக பேசுவதற்கு முதலமைச்சருக்கு துணிச்சல் இல்லை. போராட்ட குணம் மிக்கவர்கள் விவசாய மக்கள். தமிழக விவசாய மக்களின் உறுதியை, போராட்ட குணத்தை மீறி எடப்பாடி, மோடி என யாராலும், இந்த எட்டுவழிச் சாலை திட்டத்தை செயல்படுத்தமுடியாது என்றும் தெரிவித்தார்.தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் பெ.சண்முகம் பேசும்போது, “ மீத்தேன்விவகாரத்தில் மாநில அரசின் தடையை மீறி மத்திய அரசு செயல்படுகிறது. தமிழக அரசை துச்சமாக மதிக்கிறது மத்திய அரசு” என்றார். மீத்தேன் போன்ற எண்ணெய் பொருட்களை பூமியிலிருந்து எடுப்பதன் மூலம் தமிழகத்தின் உணவுஉற்பத்தி பாதிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.கருத்தரங்கில், சிபிஐ (எம்.எல்)மத்திய கமிட்டி உறுப்பினர் பாலசுந்தரம், விவசாயிகள் மகாசபை மாநில அமைப்பாளர் ஏ.சந்திரமோகன், பு.இ.மு வழக்கறிஞர் இரா.கல்வி செல்வன், சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் பி.டில்லிபாபு, முன்னாள் நீதிபதி கே.பி.சிவசுப்பிரமணியன், வழக்கறிஞர்கள் எஸ்.அபிராமன், பாசறைபாபு, கூட்டமைப்பு நிர்வாகி இல.அழகேசன், வி.ச மாவட்ட செயலாளர் வி.சுப்பிரமணி, முத்தையன்(சிபிஎம்) உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியை, தமுஎகச மா.து.பொது செயலாளர் எஸ்.கருணா தொகுத்து வழங்கினார்.

;