tamilnadu

img

திருப்பூர் தொகுதியில் திமுக கூட்டணி வெற்றி சர்வ நிச்சயம்

திருப்பூர், ஏப். 16 - திருப்பூர் தொகுதியில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர் என்ற முறையில் தனது வெற்றி சர்வ நிச்சயமானது, இந்த தொகுதி அதிமுகவின் கோட்டை என்பது தகர்க்கப்படும் என்று வேட்பாளர் கே.சுப்பராயன் கூறினார். திருப்பூர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளர் கே.சுப்பராயன் செவ்வாயன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:இந்திய அரசியல் சட்டம், இந்தியப் பண்பாடு, இந்து மதம் முன்வைக்கும் அடிப்படை கொள்கைகளை தடம் புரளச் செய்யும் பாஜக அரசியலை எதிர்த்து நடத்தும் அரசியல் போராட்டம் தான் இந்த தேர்தல். இந்து மதம், இந்திய பண்பாடு, அரசியல் சட்டம் ஆகியவற்றுக்கும் பாரதிய ஜனதாவுக்கும் எள்முனை அளவும் தொடர்பு கிடையாது. 300 ஆண்டு காலம் நடைபெற்ற தேசிய விடுதலை இயக்கத்துக்கும் பாஜகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இந்திய சமூக வாழ்வில் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் விழுந்த விஷ விதைதான் இந்துத்துவா. இது கேன்சர் கிருமி போன்றது. இந்த பின்னணியில் இருந்துதான் இப்போது நடைபெறும் தேர்தலைப் பார்க்க வேண்டும். இந்த ஐந்து வருட கால ஆட்சியில் இந்த விஷ விதைகள் எல்லா துறைகளிலும் விதைக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் பாஜகவும், அதன் கூட்டணியும் நிச்சயம் தோற்கடிக்கப்பட்டு விடுவார்கள். ஆனால் அவர்களால் விதைக்கப்பட்ட விஷமமும், அதன் விளைவுகளும் நீண்ட காலம் இந்த சமூகத்தைப் பாதிக்கும் என்ற உண்மையைப் புரிய வைப்பதுதான் இன்றைய தேசபக்த கடமை.


ஊழல் கூட்டணி

ஊழலற்ற வெளிப்படையான நிர்வாகம், இந்தியாவில் அந்நிய நேரடி முதலீடு தொழில் தொடங்க இசைவான சூழ்நிலையை உருவாக்குவது என்பதுதான் பாஜகவின் கொள்கை என்று நிதியமைச்சர் அருண் ஜெட்லி முதல் பட்ஜெட் கூட்டத்தில் தெளிவாக அறிவித்தார். ஊழலற்ற வெளிப்படைத் தன்மை இல்லை என்பதை இவர்களின் பல நிர்வாக நடவடிக்கைகள் அம்பலப்படுத்துகின்றன. குறிப்பாக ரபேல் ஒப்பந்தம் பாதுகாப்புத் துறையே பாதுகாப்பு இல்லாமல் இருக்கிறது என்பதை தெளிவாக அம்பலப்படுத்தி உள்ளது. இதில் எந்த ஊழலும் இல்லை என்றால் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு ஆஜராகி நிரூபிக்க முடியும். ஆனால் வர மறுக்கிறார்கள். எனவே பாஜக ஊழலை எதிர்க்கும்கட்சிஅல்ல. அதிமுகவும், ஊழலும் ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள். இரண்டையும் பிரிக்கவே முடியாது.


அவர்களுடன் பாஜக கூட்டணி சேர்ந்ததில் இருந்தே இவர்கள் ஊழல் எதிர்ப்பு உண்மையல்ல என்பது தெளிவாகும். தமிழக வரலாற்றில் இல்லாத அளவுக்கு தலைமைச் செயலாளர், அமைச்சர்களின் வீடுகளில், சசிகலா உறவினர் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை நடத்தினர். இதில் என்ன கைப்பற்றப்பட்டது, என்ன நடவடிக்கை எடுத்தார்கள் என்று பாஜக அரசு வெளிப்படைத்தன்மையுடன் தமிழக மக்களுக்குத் தெரிவித்திருக்க வேண்டும், ஆனால் அதை தெரிவிக்கவில்லை.சிபிஐ, அமலாக்கத்துறை, தேர்தல் ஆணையம் போன்ற தன்னாட்சி அமைப்புகள் எல்லாம் எதிர்க்கட்சிகளை ஒடுக்கும் கருவிகளாக பாஜக பயன்படுத்தி வருவது பட்டவர்த்தனமான உண்மை. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்திலும் மோசடி செய்து கடந்த காலத்தில் பாஜக வெற்றி பெற்றதாக தகவல் வருகிறது. பாஜக தன்னைக் காப்பாற்றிக் கொள்ள எந்த எல்லைக்கும் செல்வது அதன் எல்லை தாண்டிய குணம் ஆகும். நாடாளுமன்ற ஜனநாயகம் தற்போது ஆபத்தில் உள்ளது. பாரதியஜனதா மீண்டும் வந்தால் இது நீடிக்காது. இந்த தேர்தலில் இந்த அடிப்படை பிரச்சனைகள் முன்னிறுத்தப்பட வேண்டும். துரதிருஷ்டவசமாக இவை முன்னிறுத்தப்படவில்லை.


உள்நாட்டு தொழில் அழிப்பு

பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி காரணமாக பனியன் தொழில் 30 சதவிகிதம் உற்பத்தி வீழ்ச்சி அடைந்துவிட்டது. உள்நாட்டு விவசாய உற்பத்தி மூன்றில் ஒரு பங்காக வீழ்ச்சி அடைந்துவிட்டது. கிராமப்புறங்களில் வேலையின்றி குடும்பம், குடும்பமாக வெளியேறுகின்றனர். விவசாயம், சிறு, குறு தொழில்களை அழிப்பதுதான் பாஜகவின் கொள்கை. அந்நிய நேரடி முதலீட்டுக்கு உகந்த சந்தையாக இந்தியாவை மாற்றுவதே பாஜகவின் கொள்கை. பனியன் தொழில், கோவை மோட்டார் பம்ப், இன்ஜினியரிங், பவுண்டரி தொழில் காணாமல் போவதற்கு இதுதான் காரணம். 6 லட்சம் தொழிற்சாலைகள் மூடப்பட்டு 6 கோடிப் பேர் வேலைவாய்ப்பு இழந்துள்ளனர். வேலையின்மை 47 சதவிகிதம் அதிகரித்திருக்கிறது. முந்தைய எந்தவொரு ஆட்சிக் காலத்திலும் இவ்வாறு நடந்ததில்லை. இந்தியாவின் இறையாண்மை உள்ள நாடு என அரசியல் சட்டம் கூறுகிறது. ஆனால் இன்று நம்மை வழிநடத்துவது உலக வர்த்தக அமைப்புதான். அந்த அமைப்பின் ஆணைப்படிதான் விவசாய விளைபொருளுக்கு கட்டுப்படியான விலை நிர்ணயிப்பதை பாஜக அரசு மறுத்துவிட்டது.நேரு காலத்தில்தான் தொழில் வளர்ச்சி, சிறு,குறு தொழில்கள் வளர்ந்தது. பாதுகாப்புத் துறையில் தனியார்மயம் கிடையாது என்று 1956இல் நேரு உறுதி செய்தார். ஆனால் இப்போது பாதுகாப்புத் துறையில் 100 சதவிகிதம் தனியார் முதலீட்டை பாஜக திறந்துவிட்டது. இந்தியா பாதுகாப்பற்ற நாடாக மாற்றப்பட்டுள்ளது. இந்த பின்புலத்துடன் தேர்தலை நோக்க வேண்டும்.


தகுதியை இழந்த அதிமுக

அதிமுகவை நிறுவியவர் எம்ஜிஆர். அவர் வகுப்புவாத சக்திகளுடன் கூட்டு வைத்துக் கொண்டது கிடையாது. எம்ஜிஆர் மண்டைக்காடு கலவரத்தின்போது ஆர்எஸ்எஸ் அமைப்பை கடுமையாக எதிர்த்தார். ஜெயலலிதா 1998ஆம் ஆண்டு இனி எந்தக் காலத்திலும் பாஜகவுடன் கூட்டு சேர மாட்டேன் என்று வாக்குறுதி கொடுத்தார். அவர் மறையும் வரை அந்த வாக்குறுதியைக் காப்பாற்றினார். ஆனால் எம்ஜிஆர், ஜெயலலிதாவின் பெயரைச் சொல்லி ஆட்சி நடத்தும் அதிமுகவினர் எக்குத்தப்பாக சம்பாதித்ததால், தங்கள் சொந்த நலனைக் காப்பாற்றிக் கொள்ள, அவர்கள் காட்டிய வழியில் இருந்து தடம் புரண்டு விட்டார்கள். அதிமுக என சொல்லிக் கொள்ளும் தகுதி அவர்களுக்கு இல்லை.


வெற்றி வாய்ப்பு உறுதி

திருப்பூர் தொகுதியில் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அனைத்துக் கட்சிகளின் செயல்பாடுகளின் மூலம் சர்வநிச்சயமாக வெற்றி பெறுவோம். இதில் எவ்வித ஐயப்பாட்டுக்கும் இடமில்லை. வாக்காளர்கள் காட்டிய வரவேற்பில் இருந்து திமுக கூட்டணி வேட்பாளர் என்ற முறையில் நாங்கள் நல்ல மெஜாரிட்டியுடன் வெற்றி பெறுவோம். இம்முறை பணம் கொடுத்து மனதை திசை திருப்பி வெற்றி பெற முடியாது. காவல் துறை பாதுகாப்புடன் வாக்குக்கு ரூ.250 வீதம் பணம் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது.தலித் என சொல்லி ஒதுக்கப்பட்ட ஆதிதிராவிடர் காலனிகளில் மிகச்சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. வரலாற்றில் முதல் முறையாக அதிமுக கோட்டை என்பதை திமுக கூட்டணி தகர்க்கும். இதில் எந்த சந்தேகமும் இல்லை.இவ்வாறு கே.சுப்பராயன் கூறினார்.இந்த பேட்டியின்போது திமுக வடக்கு மாவட்டத் தலைவர் க.செல்வராஜ், மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜ், காங்கிரஸ் மாவட்டத் தலைவர் ஆர்.கிருஷ்ணன், மதிமுக மாநகரச் செயலாளர் சு.சிவபாலன், திமுக மாநகரச் செயலாளர் டி.கே.டி. மு.நாகராஜன், இந்திய கம்யூனிஸ்ட் தேர்தல் பணிக்குழுப் பொருளாளர் எம்.கே.எம்.பாலு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

;