tamilnadu

img

திருட்டு முதல் கொலை வரை 240 வழக்குகள்

பத்தனம்பதிட்டா, ஏப்.19-கேரள மாநிலம் பத்தனம்திட்டா நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் நாளிதழில் குற்றிப்பின்னணி குறித்து 4 பக்க விளம்பரம் செய்துள்ளார். இதில் திருட்டு முதல் கொலை வரை 240 வழக்குகளின் விவரங்கள் இடம்பெற்றுள்ளன.தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களது குற்றப்பின்னணி குறித்துவாக்காளர்கள் அறிந்து கொள்ளும் வகையில் நாளிதழில் விளம்பரப்படுத்த வேண்டும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி பத்தனம்திட்டா தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் அக்கட்சியின் மாநில பொதுச் செயலாளர் கே.சுரேந்திரன் சம்பந்தப்பட்ட வழக்கு விவரங்கள் 4 பக்க விளம்பரமாக வெளியிடப் பட்டுள்ளது. அதில் பல்வேறு காவல் நிலையங்களில் இவர் மீது திருட்டு முதல் கொலை வரை 240 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.


பொதுச்சொத்துகளை நாசமாக்கியது, கலவரங்கள் ஏற்படுத்தியது, வீடு தகர்ப்பு, தடை உத்தரவை மீறியது, தீவைப்பு, அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தது, அச்சுறுத்தல், வழிபாட்டுத் தலங்களை தகர்த்தது, பொதுப் போக்குவரத்தை சீர்குலைத்தது உள்ளிட்ட குற்றங்கள் கே.சுரேந்திதரன் வெளியிட்டுள்ள விளம்பரத்தில் இடம்பெற்றுள்ளன. பெரும்பாலான வழக்குகளின் விசாரணை நடைபெற்று வருவதாக கூறப்பட்டுள்ளது. சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் வழிபட உரிமை உள்ளதாக உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக நடந்த வன்முறைகளில் கே.சுரேந்திரன் நேரடியாக சம்பந்தப்பட்டவர். இந்த ஆண்டு ஜனவரி 2இல் பிந்துவும், கனகதுர்க்காவும் சபரிமலை சன்னிதானத்தில் தரிசனம் செய்ததற்கு எதிராக நடந்த வன்முறைகளில் நீதிமன்ற உத்தரவின்படி அதிக வழக்குகள் அவர் மீது பதிவு செய்யப்பட்டுள்ளன. அதன்படி மிக அதிகமாக கொல்லம் மாவட்டத்தில் 68 வழக்குகளும், ஆலப்புழாவில் 55, காசர்கோட்டில் 33, இடுக்கியில் 16, பத்தனம்திட்டாவில் 31 வழக்குகளும் உள்ளன.