தரங்கம்பாடி, மே 29-நாகப்பட்டினம் மாவட்டம் செம்பனார்கோவில் கலைமகள் பள்ளி மாணவி 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுமறுகூட்டலில் 600-க்கு 585 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.செம்பனார்கோவில் கலைமகள் பள்ளியில் படித்து வந்த அமீரா சப்ரீன் என்கிற மாணவி 12-ம் வகுப்புபொதுத்தேர்வு முடிவு வெளியானபோது 572 மதிப்பெண் பெற்றதாக வந்தது. தான் இன்னும் கூடுதலாக மதிப்பெண் பெற்றிருப்பேன் தவறுதலாக முடிவுவந்துள்ளதாக பள்ளி நிர்வாகத்திடம் மாணவி கூறியதையடுத்து நிர்வாகம் தேர்வுகள் துறையில் மறுகூட்டலுக்கு விண்ணப்பித்தது. தற்போது மதிப்பெண் மறுகூட்டலில் 13 மதிப்பெண் கூடுதலாக 585 மதிப்பெண் பெற்றுள்ளது உறுதியாகியுள்ளது. இதனிடையே புதனன்று பள்ளியில் நடைபெற்ற பாராட்டுநிகழ்ச்சியில் மாவட்ட அளவில் முதல் மதிப்பெண் பெற்றுள்ள மாணவியை கலைமகள் கல்வி நிறுவன இயக்குநர் என்.எஸ்.குடியரசு பாராட்டி பரிசுகளை வழங்கினார்.