பெண் வழக்கறிஞர் மீது கொலை வெறித்தாக்குதல் சாராய கடத்தல் கும்பலுக்கு ஆதரவாக பெரம்பூர் காவல்துறை
தரங்கம்பாடி, ஜூலை 10- நாகப்பட்டினம் மாவட்டம் தரங்கம்பாடி வட்டம் திருவிளையாட்டம் மேலத்தோப்பு சிவன்கோவில் தெருவில் வசிப்பவர் அந்தோணிதாஸ். இவரது மகள் நிர்மலா மயிலாடுதுறை ஒருங்கினைந்த நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். அதே பகுதியில் வசிக்கும் சாராய வியாபாரியான ஏசுராஜ் (50) மற்றும் விஜயராகவன் ஆகியோர் காவல்துறையிடம் சிக்கும் போதெல்லாம் நிர்மலாதான் தகவல் கூறினார் என பிரச்சனை செய்து வந்த நிலையில், கடந்த ஜூலை 3-ம் தேதி சாராய வியாபாரிகள் ஏசுராஜ், விஜயராகவனை காவல்துறையினர் பிடித்ததாக கூறப்படுகிறது. இதற்கு காரணம் நிர்மலாதான் எனக் கூறி, ஜூலை 4-ம் தேதியன்று இரவு நிர்மலா ராணி வீட்டிற்குள் புகுந்த ஏசுராஜ், விஜயராகவன் அவரது மகன்களான எழில், மணிகண்டன், வினோத், துளசி, ஆஷா ஆகியோர் நிர்மலாராணி, அவரது தந்தை அந்தோணிதாஸ், சகோதரர்கள், வின்சென்ட், மோஷிக்ராஜ், இந்து சர்மிளா, எலிசபெத் ஆகியோரை கொடூரமாக தாக்கியதில் படுகாயமடைந்த அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தாக்குதலில் ஈடுபட்ட சாராய வியாபாரிகள் பிரச்சனை செய்வதாக பெரம்பூர் காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தும், எந்தவித நடவடிக்கையும் இல்லாததால் பெண் வழக்கறிஞர் மற்றும் அவரது குடும்பமே தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டது. சாராயக் கும்பல் தாக்கியதில் மண்டை உடைந்து சிகிச்சைப் பெற்று வரும் வழக்கறிஞர் நிர்மலா மற்றும் அவரது குடும்பத்தினரை தாக்கியவர்கள் மீது உரிய வழக்கை பதிவு செய்து கைது செய்வதற்கு பதிலாக சாராயக் கும்பலுக்கு ஆதரவாக, பாதிக்கப்பட்ட வழக்கறிஞர் நிர்மலா மீதே பெரம்பூர் காவல்துறை வழக்கு பதிந்துள்ளது. இதனிடையே காவல்துறையின் அடாவடித்தனத்தை கண்டித்து புதனன்று மயிலாடுதுறை கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு 20-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள், மூத்த வழக்கறிஞர் ஜெகதராஜ் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு பின்னர் மனு அளித்தனர். கடந்த சில மாதங்களாக பெரம்பூர், மயிலாடுதுறை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சாராய விற்பனை அதிகரித்து வருவதோடு, காவல்துறையினர் சாராய வியாபாரிகளுக்கு ஆதரவாக இருப்பதால் குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நீதி கிடைப்பதற்கு பதிலாக பொய்வழக்கை பதிவு செய்வதிலேயே காவல்துறை முனைப்பாக உள்ளது என சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். பாதிக்கப்பட்ட பெண் வழக்கறிஞருக்கு உடனடியாக நீதி கிடைக்கவில்லையெனில் போராட்டங்களை நடத்துவோம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
பெரம்பலூரில் டாம்கோ லோன் மேளா
பெரம்பலூர், ஜூலை 10- தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் (டாம்கோ) சார்பில் செவ்வாயன்று பெரம்பலூர் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்க வளாகத்தில் லோன் மேளா நடைபெற்றது. கூட்டுறவு சங்க துணை பதிவாளர் பாண்டித்துரை முன்னிலை வகித்தார். மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அலுவலர் மஞ்சுளா தொடங்கி வைத்து கடனுதவிக்கான விண்ணப்பங்களை பெற்று பேசியதாவது: சிறுபான்மையினர் வகுப்பினைச் சேர்ந்த மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திடும் விதமாக தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் (டாம்கோ) மூலம் கடனுதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. இக்கழகத்தின் கீழ் தனிநபர் தொழில் தொடங்க கடனுதவி ரூ. 50 ஆயிரம் முதல் அதிகபட்சம் ரூ. 30 லட்சம் வரையிலும், சுய உதவிக்குழுக்களுக்கான சிறுகடன் திட்டத்தில் சுய உதவிக்குழு உறுப்பினர் ஒருவருக்கு அதிகபட்சமாக ரூபாய் ஒரு லட்சம் முதல் ரூ.6 லட்சம் வரையிலும், கல்வி கடன் திட்டத்தில் சிறுபான்மையினர் மாணவ, மாணவியர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் இளங்கலை,முதுகலை, தொழிற்கல்வி, தொழில்நுட்பக்கல்வி மற்றும் குறுகிய கால உயர்திறன் வளர்ச்சி படிப்பு பயில்பவர்களுக்கு அதிகபட்சம் ரூ.9 லட்சம் வரையிலும் கடனுதவி வழங்கப்படுகிறது. மேலும் ஆவின் நிறுவனத்தின் மூலமாக இரண்டு கறவைமாடுகள் வாங்கிட ரூ.70 ஆயிரம் வரையிலும், ஆட்டோ கடன் திட்டத்தின் கீழ் சுய தொழில் தொடங்கிட தொழில் கூட்டுறவு சங்கங்கள், தாய்கோ வங்கி மூலம் கடனுதவி வழங்கப்படுகிறது. மேற்படி கடன் திட்டங்கள் அனைத்தும் சிறுபான்மையினார் வகுப்பினை சார்ந்தவர்களுக்கு நிபந்தனைக்குட்பட்டு குறைந்த வட்டி விகிதத்தில் வழங்கப்பட்டு வருகிறது. இந்த கடன் மேளாவில் 51 பேர் கடனுதவி கேட்டு விண்ணப்பம் அளித்துள்ளனர். தொடர்ந்து ஜூலை 10 அன்று வேப்பந்தட்டை தாலுகா வி.களத்தூர், ஜூலை 11 அன்று தேவையூர், ஜூலை 12 ஆலத்தூர் தாலுகா இரூரிலும் அந்தந்த தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க அலுவலகத்தில் காலை 10.30 மணியளவில் நடைபெற உள்ளது என்றார். நிகழ்ச்சியில் வங்கி மேலாண்மை இயக்குநர் பாலமுருகன், திருச்சி மத்திய கூட்டுறவு வங்கி கள அலுவலர் மேலாளர் துரையரசன், கண்காணிப்பாளர் ராஜூ, செயலாளர் கவிதா, உதவி செயலாளர் பிரபு, சிறுபான்மையினர் கண்காணிப்பு குழு உறுப்பினர்கள் முபாரக் அலி, பீட்டர்ராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.