வீட்டில் நகை கொள்ளை
கும்பகோணம் ஜூலை 13- கும்பகோணம் அடுத்த பாபநாசம் அருகே பண்டாரவாடை பகுதியைச் சேர்ந்தவர் அப்துல் காதர். இவர் சிமெண்டு குடோனில் பணிபுரிகிறார். மேலும் சமையல் வேலையும் செய்து வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று இரவு அப்துல் காதருக்கும் நெஞ்சுவலி ஏற்பட்டதால் மனைவி மற்றும் பிள்ளைகளுடன் கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு சென்றனர். அப்போது கொள்ளையர்கள், வீட்டின் பின்பக்க கதவை உடைத்து பீரோவில் இருந்த 18 சவரன் நகை மற்றும் 8 ஆயிரம் ரூபாயை கொள்ளையிட்டு சென்றனர். இதுகுறித்து பாபநாசம் காவல்துறையினர் விசாரிக்கின்றனர்.
மடிக்கணினி வழங்கல்
கும்பகோணம் ஜூலை 13- கும்பகோணம் அன்னை அஞ்சுகம் நகரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 11, 12-ம் வகுப்பு பயிலும் 220 மாணவிகளுக்கு 27 லட்ச ரூபாய் மதிப்பில் இலவச மடிக்கணினியை நகரச் செயலாளர் ராம.ராமநாதன் ஒன்றிய செயலாளர் அறிவழகன் மற்றும் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் கவிதா ஸ்ரீதர் தலைமையாசிரியர் சாந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டு மடிக்கணினிகளை மாணவர்களுக்கு வழங்கினர்.
கூட்டுப் பண்ணையப் பயிற்சி
தஞ்சாவூர் ஜூலை.13- தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி வட்டம், செருவாவிடுதி கிராமத்தில் வெள்ளிக்கிழமை அட்மா திட்டத்தின் கீழ் கூட்டுப் பண்ணையம் பயிற்சி நடந்தது. பேராவூரணி வட்டார வேளாண் உதவி இயக்குநர் எஸ்.மாலதி தலைமை வகித்து பேசினார். வேளாண் அலுவலர் எஸ்.இராணி, வேளாண் வணிக அலுவலர் ஆர்.தாரா ஆகியோர் இத்திட்ட செயல்பாடு குறித்து எடுத்துரைத்தனர். பயிற்சி ஏற்பாடுகளை அட்மா திட்ட அலுவலர்கள் சுரேஷ், ஆ.தமிழழகன், த.சத்யா ஆகியோர் செய்திருந்தனர். பயிற்சியில் 40 விவசாயிகள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர்.
சரசுவதி மகால் நூலக பயிற்சி வகுப்பு
தஞ்சாவூர் ஜூலை.13- தஞ்சாவூர் சரசுவதி மகால் நூலகம் மற்றும் ஆய்வு மய்ய நூலகத்தில் தெலுங்கு மொழி சுவடிகளும், தெலுங்கு எழுத்தில் எழுதப்பட்ட மராட்டி மற்றும் சமஸ்கிருத சுவடிகளும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இதில் வரும் ஆகஸ்ட் 2 முதல் 22 வரை 3 வார கால தெலுங்கு மொழி பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது. கலை இயலில் இளங்கலை பட்டம் பெற்றவர்கள் கலந்து கொள்ளலாம். பயிற்சி பதிவு கட்டணமாக ரூ100 செலுத்த வேண்டும். நாள்தோறும் முற்பகல் 10 முதல் 1 மணி வரை பயிற்சி நடைபெறும். பயிற்சியில் சேர விரும்புவோர் தங்களது சுய விவரங்களுடன், இயக்குநர், சரசுவதி மகால் நூலகம், தஞ்சாவூர்- 9 என்ற முகவரிக்கு ஜூலை 25 ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். மேலும் விவரங்களுக்கு 99763-12896 தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.