இளைய தலைமுறைக்கான அரசுப் பணித் தேர்வில் முத்திரை பதிக்கும் தாராபுரம் அம்பேத்கர் பயிற்சி மையம்
தாராபுரம் தளவாய்பட்டணம் சாலையில், பெரியார் சிலை எதிரில், கம்பீரமாக எழுந்து நிற்கிறது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் தாலுகா அலுவலகம். வழக்க மாக கட்சி சார்ந்த பணிகளுக்காக தோழர்கள் இங்கு வருவார்கள். அத்து டன் தொழிலாளர்கள், விவசாயிகள், சமூக ரீதியாக ஒடுக்கப்பட்டவர்கள் என ஏழை, எளிய மக்கள் பலர் அங்கு வந்து செல்வார்கள். இந்த அலுவலகத்திற்குள் நுழைந் தால், அங்கிருக்கும் படிக்கட்டுகளில், ஓரத்தில் இருக்கும் இருக்கைகளில், அரங்கத்தில் என ஆங்காங்கே, கை களில் புத்தகங்களோடு மாணவ, மாண விகள் பலர் தலைகுனிந்து படித்துக் கொண்டிருப்பதைப் பார்க்கலாம். உழைக்கும் மக்களின் நலன் காக்கும் பாசறையான அந்த அலுவலகத்தில், அம்பேத்கர் கல்வி மற்றும் பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது.
இந்த பயிற்சி மையத்தில் படிக்க வரும் இளைஞர்கள் தான் அவர்கள். அண்மையில் நடந்து முடிந்த தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையம் தொகுதி 4 (குரூப் 4) தேர்வு முடிவுகளில் இங்கு பயின்ற வர்களில், 6 பேர் இளநிலை உதவி யாளர்கள் பணிக்கும், ஒருவர் காவலர் பணிக்கும் என மொத்தம் 7 பேர் அரசுப் பணிக்குத் தேர்வாகியுள்ளனர். இது போல் ஆண்டுதோறும் நடக்கும் அரசுப் பணி தேர்வுகளில் இங்கு படித்து தேர் வானவர்கள் ஏராளமானோர் உள்ளனர். இது பற்றி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்டக் குழு உறுப்பினர் என்.கனகராஜ் கூறிய தாவது: தாராபுரம் மார்க்சிஸ்ட் கட்சியின் அலுவலகத்தில் தரைத் தளம் உட்பட மேலும் இரண்டு தளங்கள் சேர்ந்துள் ளது. முதல் தளத்தில் கட்சி அலு வலகம் தொழிற்சங்க அலுவலகம் அதற்கு மேலே இரண்டாவது தளத்தில் கூட்ட அரங்கம் உள்ளது. இங்கு அவ்வப்போது பேரவைக் கூட்டங்கள் நடக்கும். மற்ற நாட்களில் காலியாக இருக்கும். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு கிராம நிர்வாக அலுவலர் பதவிக்கு மாநில அரசால் தேர்வு அறிவிக்கப் பட்டிருந்தது. அப்போது, நமது கட்சி அலுவலகக் கூட்ட அரங்கை, கல்வி கற்க பயன்படும் இடமாக மாற்ற வேண்டும் என்ற கட்சியின் யோசனைப் படி, கிராம நிர்வாக அலுவலர் பணியிடத் திற்கு இலவசப் பயிற்சி என்று அறி வித்து துண்டறிக்கை வெளியிட்டோம். பயிற்சி துவங்கும் நாளன்று நான்கு மாணவிகள் மட்டும் வந்தனர். அதில் ஒரு வழக்கறிஞர், தன் மகளுடன் வந்திருந்தார். அவர் எங்களோடு பேசியபோது, தாராபுரத்தில் இப்படி ஒரு ஏற்பாடு இல்லை, நீங்கள் நன்றாக நடத்துங்கள், என்னால் முடிந்த உதவிகளைச் செய்கிறேன் என்றார். சொன்னதோடு மட்டுமின்றி, கட்டுக் கட்டாக பிஸ்கட் பாக்கெட்டுகள் மற் றும் தேநீர் வாங்கிக் கொண்டு வந்து விட்டார். அன்று அதைச் சாப்பிட மாணவர்கள் இல்லை. எப்படியோ வகுப்பைத் தொடக்கி னோம். அன்று தமிழ்ப் பாடம் வகுப்பு எடுக்க ஓய்வு பெற்ற மாவட்ட வருவாய் அதிகாரி தோழர் ஆர்.சுகுமார் ஒப்புக் கொண்டார். அடுத்து மற்ற பாடப்பிரிவு களுக்கு ஓய்வு பெற்ற தலைமை ஆசிரி யர் தோழர் சீரங்கராயன், அவர் மூலம் ஆசிரியர் ஜி.பால்ராஜ் மற்றும் முது நிலை படிப்பு படித்துவிட்டு, வேலை தேடிக் கொண்டிருந்த மாணவர் இங்கு வந்து வகுப்பு எடுத்தனர். இப்படித் தான் இந்த பயிற்சி மையம் தொடங்கியது.
அதன் பின் தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் இதை நடத்தலாம் என கோவையிலிருந்து அம்பேத்கர் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தை சேர்ந்த தோழர் கே. கணேஷ் அவர்களை வரவழைத் தோம். அவரது வழிகாட்டலில் தொகுதி 4 தேர்வுக்கு தயார் செய்வ தென முடிவு செய்தோம். தாராபுரம் ஆசிரியர், மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் அர சின் சார்பில் இலவச பயிற்சியளித்துக் கொண்டிருந்த ராஜா அவர்களோடு பேசி, அவர் சம்மதம் பெற்று, வகுப்பை நமது அலுவலகத்தில் துவங்க முடிவு செய்தோம். அப்போது அலுவலகத்தை தொகுதி 4 தேர்வை நடத்த எங்களுக்கு வாடகைக்கு கொடுங்கள் என்று தொகுதி 2இல் வெற்றி பெற்று உள்ளாட்சித் துறையில் பணிக்கு சேர்ந்த ஒருவர்கேட்டார். நாங்களே இந்த பயிற்சி மையத்தை நடத்திக் கொள்கிறோம் என்று அவருக்கு தர மறுத்துவிட்டோம். முதன்முதலில் பாரஸ்ட் கார்ட் (வனக்காவலர்) பணிக்கு ரம்யா என்ற பெண் தேர்வானார். அதன்பின் நீதிமன்றப் பணிக்கு பாலு, திவ்யா என இருவர் தேர்வானார்கள். அதன் பின் பரத் காவலர் பயிற்சியில் சேர்ந்தார்.
இதைத் தொடர்ந்து நடை பெற்ற கிராம நிர்வாக அலுவலர் தேர்வில் ராஜேஷ், யுவராணி ஆகி யோர் வெற்றி பெற்றனர். அதன்பின் மதன்குமார் (கல்வித்துறை), கவியரசன் (கல்வித் துறை), திவ்யா மூர்த்தி (உள்ளாட்சித் துறை), இப்ராஹிம் (ஆய்வக உதவி யாளர்) என தேர்வானார்கள். சமீபத்தில் வெளிவந்த தேர்வு முடிவுகளில் தேர்ச்சி பெற்று என்.ரம்யா (வீட்டு வசதி வாரியம்), சிபிச் சக்கரவர்த்தி (ஆதிதிராவிடர் நலத்துறை), கவிமணி (உயர்கல்வித் துறை), மணிகண்டன் (கப்பல் போக்கு வரத்து துறை), ராம்தாஸ் (வணிக வரித் துறை) ஆகியோர் இளநிலை உத வியாளர் பணிக்கும், ஜெகதீசன் காவலர் பணிக்கும் நியமனம் பெற்றுள்ளனர் என்பது மிகவும் மகிழ்ச்சிக்குரியதாகும். தாராபுரம் மக்கள் பலர், இது மிகச் சிறப்பு வாய்ந்த பணி. தாராபுரத்தில் பணம் செலுத்தி பயிற்சி தரும் நிறு வனம் இருந்தாலும் அங்கிருந்து ஒரு வரும் அரசுப் பணிக்குத் தேர்வாக வில்லை, இந்த பயிற்சி மையம் முழு வதும் இலவசமாக நடத்தப்படுவது பெருமைக்குரிய விஷயம். 20 லட்சம் பேர் தேர்வு எழுதியதில் தாராபுரத்தில் இந்த பயிற்சி மையத்தில் படித்த ஆறு பேர் தேர்வாகி உள்ளனரா? என வியப்புடன் கேட்கின்றனர். மாற்று அர சியல் கட்சியினரும், இது ஒரு பெரிய சேவை என்று பாராட்டுகிறார்கள். ஆரம்பத்தில் இதற்கென்று நிதி வசூலித்து தான் வாரம் தோறும் நான்கு பாடப் பிரிவுகளில் வகுப்பு நடக்கும். நான்கு ஆசிரியர்களுக்கு குறைந்த ஊதியம் மற்றும் கேள்வித்தாள் அச்சிட ஆகும் செலவு ஆகியவை இதில் தான் செய்யப்பட்டது. கொரோனா காலத் தில் அனைத்தும் முடங்கியது, அப் போது நமது வகுப்பும் முடங்கியது. அதன் பின் மீண்டும் கூடிப் பேசி வகுப்பை துவக்குவது என்று முடி வெடுத்து சில நண்பர்களிடம் நிதி பெற்று துவங்கினோம். தற்சமயம் ஓராண்டாக சில ஆசிரியர், அரசு ஊழி யர்களைப் பட்டியல் எடுத்து, வாரந் தோறும் ரூ. 1500 செலவுத் தொகையை பெறுவது 52 நபர்களை தேர்வு செய்து நிதி வசூலித்தோம். அதன் அடிப்படையில் தற்சமயம் ஓராண்டு இரண்டு ஆண்டு மற்றும் மூன்றாண்டுக்கு என்று உதவிய தோழர்கள் இருக்கிறார்கள். ஊரக வளர்ச்சித் துறையில் இருந்து பணி ஓய்வு பெற்ற தோழர் மணியன் நிதி வசூலில் கூடுதல் கவனம் செலுத்து கிறார். வருவாய்த் துறையில் பணி யாற்றிய தோழர் மேகவர்ணன் இதன் பொறுப்பாளராக செயல்பட்டு வரு கிறார். கூடுதலாக தோழர் சீரங்கரா யன், ஆசிரியர் குப்புசாமி ஆகியோ ரும் உதவி செய்கிறார்கள். கல்லூரி யில் ஓய்வு பெற்ற தமிழாசிரியர் தமிழ் பாடம் இலவசமாக நடத்துகிறார். இந்த மையத்தை மேலும் செழு மைப்படுத்த வேண்டியுள்ளது. இன்ன மும் வங்கி, ரயில்வே பணிக்கு பயிற்சி அளிக்க வேண்டியுள்ளது. நூல கத்தைப் பராமரிக்க வேண்டியுள்ளது. கணிப்பொறி செயல்படுத்த வேண்டி யுள்ளது.
இணையதள வசதியும் தேவைப்படுகிறது. இந்த மையத்திலிருந்து ஆசிரியர் பணிக்கு வந்து தேர்வாகிப் போனவர் களும் உண்டு. பணிக்குச் சென்றவர் களுக்கு சென்ற ஆண்டு பாராட்டு விழா நடத்தப்பட்டது. கோவை தோழர் கணேஷ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பி னர் செ.முத்துக்கண்ணன் ஆகியோர் பங்கேற்றுப் பாராட்டினர். தினசரி அலுவலகம் வந்து காலை முதல் மாலை வரை போட்டித் தேர்வுக்கு தயார் செய்ய மாணவர்கள் வருவார்கள். அலுவலகத்தில் எப்போ தும் மாணவர்கள் நடமாட்டம் இருக்கும். ஒரு தேர்வான மாணவர் தீக்கதிர் நான்கு பேப்பர்களை தினசரி அவர் தெருவில் விநியோகம் செய் கிறார். இங்கு படித்து தேர்ச்சி பெற்றுச் சென்றவர்கள் தங்களுக்கு கிடைத்த அரசுப் பணியை சமூக மனப்பான்மை யுடன் மக்களுக்குச் சேவை செய்பவர் களாக பணியாற்ற வேண்டும் என சொல்கிறோம். அதன்படியே பலர் உள்ளனர். பெயர் வெளியே தெரியாமல் இந்த கல்வி, பயிற்சி மையத்திற்கு உதவி செய்வோர் பலர் உள்ளனர். அனை வரின் ஒத்துழைப்போடு தாராபுரம் அம்பேத்கர் கல்வி பயிற்சி மையம் மிகச் சிறப்பாக முத்திரை பதித்துள் ளது. தாராபுரத்தில் இளைய தலை முறையினருக்கு கல்விச் சேவை அளிப்பதில் இது மணிமகுடமாக திகழ்கிறது என்று சொன்னால் அது மிகையல்ல! -வே.தூயவன்