tamilnadu

img

குடிமராமத்து பணிகள் பயனளிக்குமா? விவசாயிகள் கவலை


“சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்  உழந்தும் உழவே தலை.”    என்பது அய்யன் திருவள்ளுவரின் வாக்கு. உலகம் முழுவதும் கோவிட்-19 என்ற கொரோனா வைரஸ் நோய்த் தொற்று அபாயம் காரணமாக முடங்கி இருக்கும் சூழலில் உழவுத் தொழில் மட்டுமே உயிர்ப்புடன் திகழ்கிறது.  தற்போது, மக்கள் வரிப்பணத்தில் குடிமராமத்து, தூர்வாரும் பணி களுக்காக சுமார் 500 கோடி ரூபாய் ஒதுக்கி இருப்பதாக கூறி குடிமராமத்து நாயகன் என்றும், காவிரி தலைவன் என்றும் ஆட்சியாளர்கள் போஸ்டர் அடித்து ஒட்டிக் கொள்கிறார்கள். திட்டம் நல்ல திட்டம் தான். ஆனால் அது முழுமை பெறாவிட்டால் எப்படி விவசாயிகளுக்கு பயனளிக்கும். இந்த கவ லையில் தான் டெல்டா மாவட்ட விவசாயிகள் உள்ளனர்.

கள ஆய்வு
இந்த பின்னணியில் திருவாரூர் மாவட்டத்தில் நடைபெறக்கூடிய குடி மராமத்து மற்றும் தூர்வாரும் பணி அரசு சொன்ன வகையில் சிறப்பாக வும், நேர்மையாகவும் நடைபெறுகிறதா என்பதை ஆய்வு செய்வதற்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தர மூர்த்தி தலைமையில் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஜி.பழனிவேல், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.தம்புசாமி, மாவட்டச் செயலாளர் வி.எஸ்.கலியபெருமாள், கட்சியின் ஒன்றியச் செயலாளர் என்.இடும்பையன், சோம.ராஜமாணிக்கம், விவசாய சங்க ஒன்றியச் செய லாளர் ஜி.பவுன்ராஜ் மற்றும் சி.டி.ஜோசப் போன்ற தலைவர்கள் கள ஆய்வில் ஈடுபட்டனர்.  திருவாரூர், கொரடாச்சேரி, நீடாமங்கலம் ஆகிய ஒன்றியங்களில் முதற்கட்ட ஆய்வில் ஈடுபட்டனர்.

புலிவலம் அருகேயுள்ள கூடூர் ஊராட்சி யைச் சேர்ந்த வெண்ணாறு, பாண்டவையாறு ஆகியவற்றின் நேரடி பாச னத்தை பெறக்கூடிய சுமார் 1,800 ஏக்கர் நஞ்சை நிலங்கள் புலிவலம், மொசக்குளம், கூடூர் பகுதியில் மட்டும் உள்ளது. இங்குள்ள விவசாயிகள் போதுமான தண்ணீர் வரத்து கிடைக்காது என்ற அச்சத்தால் குறுவை சாகு படியில் ஈடுபடுவதில்லை என்ற தகவல் அதிர்ச்சியளிக்கிறது.  அருமையான பாசன ஆறு, வாய்க்கால்கள் உள்ள பகுதியாகவும், வளமான பூமியாகவும் இருக்க கூடிய இந்த பகுதியில் இப்படிப்பட்ட சூழ்நிலை நிலவுவது டெல்டா மாவட்டம் முழுமையான பாசன வசதி பெறவில்லை என்பது உறுதிபடுத்துகிறது.

இந்த பகுதியைச் சேர்ந்த நாக ராஜன் கூறுகையில், இங்குள்ள காட்டாறு ஷட்டர்கள் பழுது பார்க்கப்பட வில்லை. இந்த ஆறும் முழுமையாக தூர்வாரப்படவில்லை. அதிகாரிகள் பார்வையிடும் பகுதிகள் மட்டும் சுத்தம் செய்யப்பட்டு ஏனைய குறிப்பிட்ட தூரம் வரை புதர்மண்டி கிடக்கிறது. இதில் எப்படி நீரோட்டம் சரியாக இருக்கும். இதன் துணை, கிளை வாய்க்கால்களும் தூர்ந்து போய் உள்ளன. 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் மனித உழைப்பை பயன்படுத்தி கிளை வாய்க்கால்களை சீர்செய்வதற்கான எந்த திட்டமும் அரசிடம் இல்லை. ஆனால் பெரிதாக பாசனமுறையை மேம்படுத்துவதாக அரசின் அறிவிப்பு கள் மட்டும் உள்ளது என்றார்.

நீடாமங்கலம் பகுதி
இந்த ஒரு பகுதியை பார்வையிட்ட போது கிடைத்த செய்திகள் “ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்” என்பதை போல, விவசாயிகளின் எதிர்பார்ப்பையும் அரசின் அறிவிப்புகள் விவசாயிகளுக்கு முழு பலனை அளிக்கவில்லை என்பதையும் உணர்த்தியது. நீடாமங்கலம் பகுதியில் கோரையாறு பாசனத்திற்கு உட்பட்ட முல்லைவாசல் வாய்க்கால், பெரம்பூர்  வாய்க்கால், நன்மங்கலம் வாய்க்கால் போன்ற பகுதிகளை பார்வை யிட்டதோடு ரிஷியூர் பகுதி பாசன நிலங்களையும் தலைவர்கள் பார்வை யிட்டனர். பொதுவாக மேட்டூரிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்படுகிற போது அது பல மைல் தூரம் கடந்து வந்து கல்லணையில் சேர்ந்து அங்கிருந்து பல பகுதிகளுக்கும் பிரிந்து சென்று பெருக்கெடுத்து ஓடி பாசனத்திற்கு பயன்படும்.  

பாய்ந்தோடி வரும் நீரைப் பொறுத்தவரை அனைத்து விவசாயி களுக்கும் பொதுவாக வஞ்சகமில்லாமல் தான் ஓடிவருகிறது. ஆனால் ஆங்காங்கே முளைக்கும் வர்க்க முரண்பாட்டால் தண்ணீரை பிரித்து வழங்குவதில் பொதுப்பணித்துறையும் நீர்வள ஆதாரத்துறையும் “உள் அரசியல்” எல்லா காலங்களிலும் நடைபெறுவதுண்டு. இதனால் கடை மடை விவசாயி கன்னத்தில் கைவைத்துக் கொண்டு அல்லது சாலையை மறைத்துக் கொண்டு “கருகும் பயிரை காப்பாற்று” என்று போராடிக் கொண்டிருப்பார். அதே போலத் தான் இந்த குடிமராமத்து மற்றும் தூர்வாரும் பணிகளும் நடைபெறுகிறது என்பதை கண்கூடாக காண முடிகிறது. இதன் ரகசியம் என்ன என்பது ஆட்சியாளர்களுக்கும், அதிகாரிகளுக்கும் தான் வெளிச்சம்.

அளவீடு சரியா ?
அரசு வழங்கியுள்ள திட்ட பணிகள் (எஸ்டிமேட்) அதிலுள்ளபடி நடை பெறுகிறதா என்பது டன் கணக்கிலான கேள்விகளை உள்ளடக்கியது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், ஏனைய இடதுசாரி கட்சிகள், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் “தூர்வாரும் பணி துட்டுவாரும் பணி”-யாக மாறி விடக் கூடாது என்றும், “குடிமராமத்து பணி விவசாய குடிகளை” பாதுகாக்கும் பணியாகவும் இருக்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை எழுப்பி வருகின்றனர். போராட்டங்களையும் முன்னெடுக்கின்றனர். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் இன்று (ஜூன் -1) பொதுப்பணித்துறை அலு வலகம் முன்பாக டெல்டா மாவட்டங்க ளில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுகின்ற னர்.  

இதனையொட்டி தமிழக உணவுத் துறை அமைச்சர் இரா.காமராஜ் செய்தி யாளர்களுக்கு அளித்த பேட்டியில் “தமி ழக முதலமைச்சர் எடப்பாடியார் ஆட்சி யில் குடிமராமத்து பணி என்பது எந்த முறைக்கேடும் இல்லாமல் சிறப்பாக நடைபெறுகிறது” என்கிறார். அவரது உளசாட்சிப்படி இது சரியா என்பதை அவர் தனக்குத்தானே கேட்டுப்பார்த் துக் கொள்ளட்டும். பல இடங்களில் பாசன தாரர்கள் சங்கம் மூலம் பணி நடைபெறு வதாக கூறி மாயாவி போல வலம்வரும் பினாமி ஒப்பந்ததாரர்கள் இந்த பணி களை எல்லாம் செய்யவில்லை என்று சொல்ல முடியுமா? இவை அனைத்தும் ஆங்காங்கே ஆய்வு மேற்கொண்ட தலைவர்களிடம் விவசாயிகள் கேட்டக் கேள்விதான்.

அதுமட்டுமல்லாமல் 100 நாள் வேலை செய்யக்கூடிய கிராமப்புற ஏழை, எளிய விவசாய தொழிலாளர்களி டம், வயதான முதியவர்களிடம் குறிப் பிட்ட அளவிற்கு வேலை செய்ய வேண் டுமென தாட்டியமாக வேலை வாங்கக் கூடியவர்கள் இதுபோன்ற பணிகளில் குறிப்பிட்ட இலக்குவரை பணிகள் நடை பெறுகிறதா, ஆறு மற்றும் பாசன வாய்க் கால்களின் நீள, அகல, ஆழம் வரை முறையாக தூர்வாரப்படுகிறதா என்று கண்காணிக்கப்படுகிறதா? பல இடங்க ளில் ஜேசிபி எந்திரம் தனியாக தலை யாட்டிக் கொண்டு இருப்பது தெரியவந் தது. எந்த இடத்திலும் பொதுப்பணித் துறை அதிகாரிகளை காணமுடியவில்லை.

கண்துடைப்பு கூட்டங்கள் - பணிகள்
அண்மையில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறும் என்று அறி வித்த நிலையில் கொரோனா அச்சு றுத்தல் காரணமாக சமூக இடைவெளி யை கடைபிடிக்க வேண்டும் என கூறி வட்டாட்சியர்கள் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. இதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர். கூட்டம் நடைபெற்ற இடங்களில் இடநெருக்கடி காரணமாக சமூக இடைவெளி தவிடு பொடியானது. கூட்டம் நடப்பதற்கான எந்த முறையான ஏற்பாடுகளும் இல்லா மல் வட்டாட்சியர்கள் தவிப்பதை காண முடிந்தது.  கோடிக்கணக்கில் பணம் ஒதுக்கி குடிமராமத்து மற்றும் தூர்வாரும் பணி கள் நடைபெறும் சூழலில் மாவட்ட ஆட்சி யரே தலைமையேற்று உரிய பாது காப்பு ஏற்பாட்டோடு கூட்டத்தை நடத்தி விவசாயிகளின் கருத்துக்களை கேட்டி ருக்க வேண்டும் என்பது அனைவரின் கருத்தாக இருந்தது. திட்டமிட்டே கூட் டத்தை இதுபோன்று திட்டமிடாத கூட்ட மாக நடத்தினார்களோ என்ற ஐயம் குடி மராமத்து மற்றும் தூர்வாரும் பணிகள் நடைபெறும் பகுதிகளை பார்வையிட்ட போது எழுந்தது.

பருவகால ‘வணிகம்’
ஒவ்வொரு பருவத்திற்கும் ஒரு தொழில் நடைபெறுவது உலக வழக்கம் ஆகும். ஆங்கிலத்தில் சீசனல் பிசினஸ் என்று அழைப்பார்கள். அதுபோல இந்த தூர்வாரும் பணியும் ஆட்சியாளர்களும் ஆளுங்கட்சியினரும் பணம் சம்பாதிப்ப தற்காகத் தான் என்ற கருத்து விவசாயி கள் மத்தியில் பலமாக உள்ளது. வேலை நடைபெறும் முறையும் அதைத் தான் உணர்த்துகிறது. பாசனத்திற்காக மேட்டூர் மற்றும் கல்லணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படும். அந்த பருவ காலங்களில் செய்யப்படும் வணிக மாகத் தான் குடிமராமத்து பணியை விவ சாய குடிகள் கருதுகிறார்கள். கிராமப் புறங்களில் வசிக்க கூடிய பாசன கட்ட மைப்புகள் குறித்து நன்கு அறிந்த நீர் மேலாண்மை குறித்து நன்கு அறிந்த கிரா மப்புற விஞ்ஞானிகளான “பாமர விவ சாயிகளையும்” பாசனதாரர்களையும் ஒருங்கிணைத்து உண்மையான அக்க றையோடு அரசுகள் இந்த பணியை செய்தால் தான் டெல்டா மாவட்டங்கள் வளம் பெறும்.

தலைவர்கள் கருத்து
மேற்கண்ட பணிகளை பார்வை யிட்ட சிபிஎம் மாவட்டச் செயலாளர் ஜி. சுந்தரமூர்த்தி கூறிய போது, திருவாரூர் மாவட்டத்திற்கு மட்டும் 88 பணிகள் 20 கோடியே 23 லட்சத்து 41 ஆயிரம் ரூபாய்க்கு திட்டமிடப்பட்டுள்ளதாக அரசால் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர்கள் விவசாயிகளின் கை யில் கொடுத்துள்ள விபரம் முரண் பாடாக உள்ளது. 75 பாசனதாரர் சங் கத்திற்கு ஒப்பந்த பணிகள் தரப்பட் டுள்ளதாக கூறிய பொழுதிலும் அது உண்மையில்லை என்பது விவசாயிகள் மூலம் தெரிய வருகிறது. ஆளுங்கட்சிக் காரர்கள் மூலம் நடைபெறும் காண்ட் ராக்ட் பணியாகவே நடைபெறுகிறது. ஷட்டர்களை சுத்தம் செய்வது அத னையொட்டிய கட்டுமான மராமத்து பணிகள் நடைபெறுவது என அனைத் தும் ஆளுங்கட்சிக்காரர்கள் வசமே உள்ளது.  

உயர் அதிகாரிகள் பார்வையிட வந்த இடங்களில் மட்டுமே ஓரளவு பணி கள் நடைபெற்றுள்ளதுடன் பணிகள் குறித்த தகவல் பலகை வைக்கப்பட்டுள் ளது. மற்ற இடங்களில் அறவே காண முடியவில்லை. ஜூன் 12 ஆம் தேதி தண்ணீர் திறக்கப்படவுள்ள நிலையில் அவசர கதியிலும், அறைகுறையாகவும் பணிகள் நடைபெறுவது விவசாயி களுக்கு பெரும் வேதனையையும், கவ லையையும் தருகிறது. பிரதான ஆறு கள், கால்வாய்கள் ஆகியவற்றிலிருந்து விளைநிலங்களுக்கு தண்ணீர் செல்வ தற்கு கிளை வாய்க்கால்களை தூர்வாரி னால் மட்டுமே பயன் கிடைக்கும்.  இதனை 100 நாள் வேலைத் திட்டத் தின் மூலம் 430 ஊராட்சிகளிலும் மனித உழைப்பின் மூலம் செய்ய வேண்டும். இதன் மூலம் கிராமப்புற மக்கள் ஓர ளவு வருமானம் ஈட்டுவதோடு, உரிய அக் கறையோடு பணி செய்து கிராமப்புற சொத்துக்களை பாதுகாப்பதற்கும் துணை நிற்பார்கள். ஆனால் நமது கோரி க்கை எதையும் அரசும், மாவட்ட நிர்வாக மும் கண்டுகொள்ளவில்லை என்று தெரி வித்தார்.

பலன் இருக்காது
தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட் டத் தலைவர் எஸ்.தம்புசாமி கூறுகை யில், அரசு சொல்லியிருக்கும் திட்ட பணி களுக்கும், ஒதுக்கியிருக்கும் நிதிக்கும் பெருத்த வேறுபாடு நிலவுகிறது. போது மான நிதி இல்லாததால் இலாப நோக்கம் கருதி வேலையின் தரம் குறைக்கப்படு கிறது. 30 அல்லது 40 சதவீத பணிகள் மட்டுமே நிறைவடையும் சூழ்நிலையில் பாசனத்திற்கு நீர் வந்து சேர்ந்து விடும் என்பதால் அரசின் நல்ல நோக்கம் முழு மையடையாமல் போய்விடும். விவசாயி களுக்கும் பலன் இருக்காது என்றார். மாவட்டச் செயலாளர் வி.எஸ்.கலி யபெருமாள் கூறுகையில், குடிமரா மத்து மற்றும் தூர்வாரும் பணி என்கிற கண்துடைப்பு அறிவிப்பாகும். இதனை சீர்செய்வதற்கு ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதத்திலேயே பணிகளை தொடங்கி மே மாதம் வரை கட்டம் கட்ட மாக இப்பணியை மேற்கொள்ள வேண் டும். இப்படி செய்தால் தான் தற்போது ள்ள குளறுபடிகளை சீர்செய்ய முடி யும் என்றார். சோழர் காலத்து பாசன கட்ட மைப்பை மீண்டும் கொண்டு வருவதற்கு விவசாயிகள் எதிர்பார்ப்பது போல பாசன பகுதிகளை வகைப்படுத்தி விவசாயமே மக்கள் வாழ்வதற்கான முக்கியமான தொழில் என்பதை உண ர்ந்து அரசின் வரவு செலவு திட்டங்களில் கூடுதலாக நிதி ஒதுக்கி பாசன கட்ட மைப்பை மேம்படுத்த வேண்டும் என் றார்.

- எஸ்.நவமணி