tamilnadu

img

மாநகர் சென்னையை காப்பாற்றுங்கள், மாநில அரசே!

ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி (21.06.2020) தமிழ்நாட்டில் கொரோனா தொற்று எண்ணிக்கை 59,377. சென்னை மாநகரில் மட்டும் 22.06.2020 காலைநிலவரப்படி, 40570 தொற்றுகள். இது ஏறத்தாழ மூன்றில் இரண்டு பங்கு. பாதிக்கப்பட்டவர்கள் மூன்று பேர் என்றால், அவர்களில் இரண்டு பேர் சென்னையைச் சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். மாநிலத்துக்குத் தலைநகரமாக இருக்கும் சென்னை, கொரோனாவுக்கும் தலைநகரமாக இருக்க வேண்டாமே! 

கொரோனா தொற்று அனைவரையும் பாதிக்கும். எந்த வேறுபாடும் பார்க்காது. என்றாலும்,காற்றோட்டமில்லாத, தனிமனித விலகலுக்கே வாய்ப்பில்லாத நெருக்கமான , சுகாதாரமற்ற குடியிருப்புகளில் வசிக்கும் எழை எளிய மக்கள்கூடுதலாக கொரோனா தொற்றால் பாதிக்கப்படு கிறார்கள். சென்னை மாநகரம், இந்தியாவில் ஆங்கிலேயர் காலத்தில் கல்கத்தா, மும்பைக்குஅடுத்தபடியாக முக்கியமான நகரமாக உருவானது. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 30 சதவிகிதத்தினர் குடிசைப்பகுதியில் வசிக்கிறார்கள். அடுக்குமாடி குடியிருப்புகளாக இருந்தாலும், தனி வீடுகளாக இருந்தாலும், நெருக்கடி மிகுந்த, சுகாதார வசதிகள் இல்லாத, கழிவுநீர் ஓடும் ஆற்றங்கரைகளில்தான் சென்னையின் குடிசைப்பகுதி மக்கள் கணிச
மானோர் வசிக்கிறார்கள். இந்தக் கொரோனாவால் சென்னையில் அதிகம் பாதிப்புக்குள்ளா வது இவர்களாகத் தான் இருக்கிறார்கள். 

ஏழைகள்தான் அதிகமாக பாதிக்கப்பட்டனர்
1918 ஆம் ஆண்டில் ஏற்பட்ட ஸ்பானிஷ் ஃப்ளூ தொற்றால் இந்தியாவில் ஒரு கோடியே 70 லட்சம்பேர் இறந்தார்கள். அவர்களில் சாதிய ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களே அதிகமாக இருந்தனர் என்பதை அன்றைய புள்ளிவிவரங்கள் மூலம் அறிந்துகொள்ள முடிகிறது. ஸ்பானிஷ் ஃப்ளூவால் இறந்த 1000 பேரில் சதவீதத்தில் 8.3 வெள்ளையர்கள், 61 ஏழை ஒடுக்கப்பட்ட மக்கள், மற்றவர்கள் 18.9 பேர். இந்தத் தரவு, பெருந்தொற்றுகள் ஏழைகளைத் தான் அதிகம் பாதிக்கிறது என்பதைக் காட்டுகின்றன.
கடந்த காலமும், நிகழ்காலமும் நிறைய படிப்பினையை வழங்கியுள்ளன. இந்தச் சூழலில்மாநில அரசு சென்னையில் மருத்துவம் மற்றும்சுகாதார ரீதியான நடவடிக்கைகளை செம்மைப்படுத்துவது, கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்துள்ள மக்களின் வாழ்வை உரியநிவாரணங்கள் மூலம் பாதுகாப்பது ஆகிய இரண்டிலும் சிறப்பாகச் செயல்பட வேண்டும்.  

தாராவியின் அனுபவம்
இதற்கு கேரள அனுபவத்தைத்தான் மாநிலஅரசு எடுத்துக்கொள்ளவில்லை; குறைந்த பட்சம் மும்பையின் தாராவி அனுபவத்தைப் பார்த்தாவது தன்னுடைய அணுகுமுறையில் மாற்றத்தை மேற்கொள்ள வேண்டும். ஆசியாவிலேயே மிகப் பெரிய குடிசைப்பகுதியான, 10 லட்சம் பேர் வசிக்கக்கூடிய தாராவியில் தொற்று ஏற்பட்ட போது, இந்தப் பகுதி மக்களும், இவர்களால் பிறரும் என்ன ஆவார்களோ என மிகப் பெரிய அச்சம் ஏற்பட்டது. இன்றைக்கு மகாராஷ்டிரா மாநில அளவில், தொற்று அதிகரித்துக்கொண்டே இருந்தாலும், தாராவியில் தொற்றைக் கட்டுப்படுத்தி புதிய தொற்றுகளின் எண்ணிக்கையைக் குறைக்க முடிந்திருக்கிறது. அதற்கு முக்கியமான காரணம், அங்கு வசிக்கும் 7 லட்சம் பேருக்கும் அறிகுறிகள் பரிசோதனையை முறையாக மேற்கொண்டு, அறிகுறிகள் இருப்பவர்களுக்கு மொபைல் கிளினிக்குகளிலேயே பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதும், தொற்று ஏற்பட்டவர்களின் தொடர்புகளைக் கண்டறிவது, சிகிச்சை அளிப்பது என அனைத்து அம்சங்களிலும் சிறப்பாகச் செயல்படுவதும், சுகாதாரத் தில் அக்கறை செலுத்துவதும்தான். இந்தஅணுகுமுறையைச் சென்னையில் பாதிப்புஅதிகமாக இருக்கும் இடங்களில் கடைப்பிடிக்க வேண்டும். 

மத்திய அரசின் கொரோனா தடுப்பு உயர்மட்ட ஆலோசனைக் குழுவின் வல்லுனர்கள்டிசிஎஸ் ரெட்டி, சசிகாந்த் ஆகியோர், “இன்றைக்கு இருக்கும் இதே பாணியில் ஊரடங்கைத் தொடர வேண்டிய அவசியம் இல்லை. பாதிப்பு உள்ள இடத்தை மட்டும், உள்ளே, வெளியே போகாத வகையில் மூட வேண்டும்” எனக்கூறியுள்ளனர். உதாரணமாக சென்னை ராயபுரத்தில் அதிக பாதிப்பு இருக்கின்ற தென்றால், அந்தப் பகுதி முழுவதும் முழுமையாக மூட வேண்டியதில்லை. பாதிக்கப்பட்ட தெருக்களை முழுமையாக மூட வேண்டும். அப்படிச் செய்யும் போது, அந்தப் பகுதி மக்களின் தேவைகள் அனைத்தையும் அரசாங்கம் பொறுப்பில் எடுத்துக்கொண்டு நிறைவேற்ற வேண்டும். 

அரசு உதவி இல்லாமல் நடக்காது
கொரோனா தொற்று தொடர்வதற்கும், மக்களுடைய பொருளாதாரத் தேவைக்கும் இடையேநெருங்கிய தொடர்பு உண்டு. அரசு உதவி கிட்டாத நிலையில், மக்கள் தங்களுடைய பொருளாதாரத் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக வெளியே வந்துதான் ஆவார்கள். அல்லது, பொருட்களை வாங்குவதற்காக கடைக்கோ சந்தைக்கோ போவார்கள். எனவே, வருமானம் இல்லாத சூழலில் மூடப்பட்ட பகுதியைச் ர்ந்த மக்களுக்கு நிவாரண உதவிகளை வீடு தேடிப்போய்க் கொடுப்பதிலும், உணவுப் பொருட்களையும், அத்தியாவசியப் பொருட்களையும் வீடுவரைக் கொண்டு சேர்ப்பதிலும் வெற்றி கண்டால்தான், கொரோனா தொற்றைக் குறைப்பதிலும் அரசால் வெற்றி பெற முடியும். தொற்று தொடர்வதற்கும், பொருளாதாரத் தேவைக்கும் இடையில் இருக்கக்கூடிய சங்கிலிப் பிணைப்பை உடைத்தாக வேண்டும். இதை உடைக்காமல் சென்னையைக் காப்பது கடினம்.

கேரளமும் தமிழகமும்
மேலும், இன்னமும் சமூகப் பரவல் இல்லை என அரசு மறைக்காமல்,  உண்மையைச் சொல்ல  வேண்டும். கேரளாவைப் போல், தனிமைப்படுத்தப்படும் முதியவர்களுக்கு மொபைல் மூலம் கவுன்சிலிங் வழங்க வேண்டும்.  மார்ச் 31ல் கேரளாவில் தொற்று 241. அதே தேதியில் தமிழ்நாட்டில் 124. தற்போதுகேரளாவில் 3039. இறப்பு 21. தமிழ்நாட்டில் 59,377,இறப்பு 757. கேரளா இந்தளவுக்குக் கட்டுப்படுத்தியதற்குக் காரணம் ஆரம்ப காலத்திலேயே அவர்கள் அதிகளவில் பரிசோதனைகள் மேற்கொண்டதே. 
இந்தியாவில் மார்ச் மாதம் ஊரடங்கு 24 ஆம்தேதி பிரதமர்  முதல் ஊரடங்கை  அறிவித்தநாளில் தொற்று 544, இறப்பு 10. தற்போது ஜூன்21ல் தொற்று 4 லட்சத்துக்குமேல். இறப்பு13 ஆயிரத்துக்கு  மேல். மாநில அரசும், மத்தியஅரசும் தும்பை விட்டு விட்டு  வாலைப் பிடித்துக்கொண்டிருக்கின்றன. வாலைப்பிடித்து  ஓடு வதைவிட்டு, மூக்கணாங்கயிற்றைப்பிடித்தால் தான் தொற்றைக்கட்டுப்படுத்தமுடியும். இப்போதும், பாதிக்கப்பட்ட  பகுதிகளில்தொற்று தொடர்வதற்கும், பொருளாதாரத் தேவைக்கும் இடையில் இருக்கக்கூடிய சங்கிலிப் பிணைப்பை உடைப்பதன் மூலமும்,

பரிசோதனைகள் மேற்கொள்வது, தொடர்புகளைக் கண்டறிவது, சிகிச்சை,  தனிமைப்படுத்தல் என அனைத்து மட்டங்களிலும் சுழன்று பணியாற்றினால் வெற்றி கிட்டும்.சென்னையையும், தமிழகத்தையும் காப்பாற்ற லாம். மாநில அரசு அதைச் செய்ய வேண்டும். 

===ஜி.ராமகிருஷ்ணன்===

அரசியல் தலைமைக்குழு உறுப்பினர், சிபிஐ(எம்)

;