செம்மொழித் தமிழை செம்மொழியாக ஏற்று அறிவிக்க மத்திய அரசை வலியுறுத்தி தமிழகம் தொடர்ந்து எழுப்பிய உரத்தக் குரலுக்கும், நடத்திய தொடர் போராட்டங்களுக்கும் கிடைத்த வெற்றித் திருநாள் அக்டோபர் 12. 2004-ஆம் ஆண்டு இதே நாளில் இடதுசாரிகளின் ஆதரவு பெற்ற ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு தமிழுக்குச் செம்மொழி அங்கீகாரம் வழங்கி அறிவித்தது. மத்தியில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு பதவியேற்ற போது அது வெளியிட்ட குறைந்தபட்சப் பொதுச் செயல் திட்டத்தில் in addition tamil will be declared as a classical language என்கிற உறுதிமொழியையும் சேர்த்தே அறி வித்தது. மகாகவி பாரதியின் வார்த்தைகளில் சொல்வதென் றால், “வாராது போல வந்த மாமணி” யாகத் தமிழகம் இதை வரவேற்று மகிழ்ந்தது. இன்றும் அந்த அறிவிப்பு எண்ணி மகிழத்தக்கது.
கால்டுவெல் துவங்கி...
அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த அறிஞர் டாக்டர் கால்டு வெல் எழுதிய 1856-ஆம் ஆண்டு வெளிவந்த, ‘திராவிட மொழி களின் ஒப்பிலக்கணம்’ என்ற ஆய்வு நூல் தமிழ்மொழி செம்மொழிக்கான அனைத்துத் தகுதிகளையும் பெற்றுள் ளது என உலகிற்குப் பறைசாற்றியது. “தமிழ் இலக்கிய வளர்ச்சி யின் தொன்மை பற்றிய ஆராய்ச்சி, அது திராவிட ஒப்பி லக்கண ஆராய்ச்சியோடு கொண்டிருக்கும் தொடர்பு யாதேயா யினும், தன்னளவிலேயே மதிக்கத்தக்கச் சிறப்புடையது. ஆத லின் அச்சிறப்பிற்காம் காரணங்கள் சிலவற்றை ஈண்டு தரு கின்றேன். தமிழ் பெற்றிருக்கும் உயர்தனிச் செம்மொழியாம் தகுதிப்பாட்டினைத் தானும் பெற்றிருப்பதேடு...” என்ற வரிகளில் தமிழை உயர்தனிச் செம்மொழியாக அவர் மதிப்பிட்டிருப்பதைக் காணலாம். சூரிய நாராயண சாஸ்திரி என்கிற தம் பெயரைத் தமி ழுக்கு மாற்றி பரிதிமாற்கலைஞர் என்று அமைத்துக்கொண்ட பன்மொழிப் புலமை பெற்ற அந்தத் தமிழ்ப் பேரறிஞர், 1902-ஆம் ஆண்டிலேயே “திருந்திய பண்புஞ் சீர்த்த நாகரி கமும் பொருந்திய தூய்மொழி புகல்செம் மொழியாம்” என்று இன்றைக்கு 117 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழைச் ‘செம்மொழி’ எனப் போற்றிப் புகழ்ந்துரைத்தார். அவர் காலத்தில் வெளிவந்த மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் வெளி யீடாகிய ‘செந்தமிழ்’ எனும் இதழில், “வடநாட்டுயர்தனிச் செம் மொழி சமஸ்கிருதமெனக் கொண்டாற்போலத் தென்னாட்டு யர்தனிச் செம்மொழி தமிழெனக் கொண்டு விதிகள் வகுத்தலே ஏற்புடைத்தாம்”என்று தமிழுக்குரிய சமநீதியை எடுத்துரைத்தார். அடுத்து 1903-ஆம் ஆண்டு வெளிவந்த ‘தமிழ்மொழி வரலாறு’ எனும் நூலிலும் தமிழ்மொழியின் தனிச்சிறப்புகளை எடுத்துரைத்து செம்மொழித் தகுதிக்கு வலுச்சேர்த்தார் பரிதிமாற்கலைஞர்.
1918-ஆம் ஆண்டு மார்ச் மாதம் சென்னை பச்சை யப்பன் கல்லூரியின் அரங்கத்தில் அறிஞர்களும், பட்டம் பெற்ற கல்வியாளர்களுமாக சுமார் 400 பேர் கூடிய கூட்டம் தமிழைச் செம்மொழியாக ஏற்று அறிவிக்க வேண்டுமெனத் தீர்மானம் நிறைவேற்றியது. 2500 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட தொல்காப்பியம் வடமொழியில் உள்ள பாணினீ யம் எனும் இலக்கண நூலைவிடவும் பழைமையானது என்றும், தமிழ்மொழியின் திருந்திய பண்பினைத் தொல் காப்பியத்தில் அறியலாம் என்றும், இதைச் செம்மொழிக ளின் பட்டியலில் இணைத்துப் போற்ற வேண்டுமென்றும் அந்தத் தமிழ் அறிஞர்களின், கல்வியாளர்களின் கூட்டத் தீர்மானம் வலியுறுத்தியது.
1919-ஆம் ஆண்டு தஞ்சையில் உள்ள கரந்தைத் தமிழ்ச் சங்கம் புகழ்பெற்ற தமிழறிஞர்கள் பங்கேற்ற தனது ஆண்டு விழாவில் தமிழ்மொழியைச் செம்மொழியாக அறி வித்துத் தீர்மானம் நிறைவேற்றியது.
1951-ஆம் ஆண்டு மார்ச் மாதம் தில்லியில் சாகித்ய அகாடமி அமைப்பு மாநாட்டில் பேசிய இந்தியாவின் முதலா வது கல்வி அமைச்சர் மவுலானா அபுல்கலாம் ஆசாத்,“தமிழ் ஒரு செம்மொழியாக ஏற்பதற்குத் தேவையான எல்லா தகுதி களையும் பழங்காலத்திலேயே பெற்றிருக்கிறது” என்றார்.
1955-ஆம் ஆண்டு சிதம்பரம் அண்ணாமலைப் பல் கலைக் கழகத்தில் தமிழறிஞர் தெ.பொ.மீனாட்சிசுந்தரனார் தலைமையில் நடைபெற்ற அகில இந்திய கீழ்த்திசை மாநாட்டி லும், 1981-இல் மதுரையில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாட்டி லும், அடுத்து 1995-இல் தஞ்சையில் நடைபெற்ற எட்டாவது உலகத் தமிழ் மாநாட்டிலும், மத்திய அரசு தமிழ்மொழியைச் செம்மொழியாக அங்கீகரித்து அறிவிக்க வேண்டுமெனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கோவை மாநாடு
கோவையில் 2010-ஆம் ஆண்டு ஜூன் 23 முதல் 27 வரை ஐந்து நாட்கள் அப்போதைய முதல்வர் கலைஞர் கருணாநிதி தலைமையில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடை பெற்றது. இது, தமிழ் செம்மொழியாக ஏற்று அறிவிக்கப்பட்ட பிறகு நடைபெற்ற முதலாவது செம்மொழி மாநாடாகும். இந்த மாநாட்டில் பங்கேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இன்றைய பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி பேசுகை யில், “லத்தீன் போன்ற உலகின் ஏனைய செம்மொழிகளைப் போல் அல்லாமல் தமிழ்ச் செம்மொழி தழைத்தோங்கி வளர்ந்துகொண்டே இருக்கிறதென்றால் அதற்குக் காரணம், அது மக்கள் மத்தியில் - குறிப்பாக, ஏழையெளிய மக்கள் மத்தி யில் உயிரோட்டமான தொடர்பை இடையறாது வைத்துக் கொண்டிருப்பதேயாகும். தமிழுக்கு மிகப் பழைமையான மரபு உண்டு என்பதோடு, இன்றைக்கும் பொருந்தக்கூடிய பெருமைமிகு இலக்கியங்களைத் தன்னகத்தே கொண்டுள் ளது. இது தவிர, ஏட்டில் எழுதப்படாத வாய்மொழி வரலாற்றுச் செல்வங்களையும் ஏராளமாகக் கொண்டுள்ள மொழி தமிழ்” என்று புகழாரம் சூட்டினார். தமிழ் ஒரு செம்மொழி என்பதோடு ‘உயர்தனிச் செம் மொழி’ என்கிற உயர்சிறப்பும் கொண்டது என்பதற்கு வேறென்ன சொல்ல வேண்டும்..?
செம்மொழி ஏற்புக் குழுவில்...
பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் கல்கத்தா பல்கலைக் கழ கத்தை மையமாகக் கொண்டு செம்மொழி ஏற்புக்குழு ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. சமஸ்கிருதம், பாரசீகம், உருது ஆகிய மொழிகளை மட்டுமே அக்குழு செம்மொழிகளாக ஏற்புசெய்து அறிவித்தது. அது தமிழைச் செம்மொழியாக ஏற்காததற்குக் காரணம், தமிழின் செம்மொழிச் சிறப்பை எடுத்துரைக்க அக்குழுவில் எவரும் இல்லை. இந்தியாவைப் பொறுத்த மட்டில் அன்று சமஸ்கிருதம் மட்டுமே செம்மொழி. பன்மொழி களைக் கொண்ட இந்தியப் பெருந்தேசத்தில் ஒற்றை மொழிக்கு மட்டுமே செம்மொழி அங்கீகாரம்! தாங்கவில்லை தமிழ் மனம்! தமிழ்நாட்டில் அனைத்து அரசியல் கட்சிகள், தமிழறிஞர்கள், கலை இலக்கிய அமைப்பு கள், பத்திரிகைகள், மாணவர்கள் அனைவரும் செம்மொழி அங்கீகாரத்திற்காகக் களமிறங்கினர்.
தமுஎகசவின் உரத்தக்குரல்
சென்னை மாகாணத்திற்குத் தமிழ்நாடு எனப் பெயர் சூட்டவேண்டுமென வலியுறுத்தி உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாகி விருதுநகர் சங்கரலிங்கனாரின் பெயர் சூட்டப்பட்ட அரங்கில் சென்னையில் 1994 ஏப்ரல் 24 அன்று தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் - கலைஞர்கள் சங்கம் நடத்திய தமிழ் வளர்ச்சி - பண்பாட்டுப் பாதுகாப்பு மாநாடு முதல் 2000-மாவது ஆண்டு ஆகஸ்ட் 22 அன்று தில்லியில் செம்மொழி ஏற்புக்காக ஆர்ப்பாட்டம் நடத்தியது வரையும் அதற்குப் பின்னரும் தமிழுக்காக இச்சங்கம் நடத்திய இயக்கங்களும் எழுப்பிய குரல்களும் எழுதிய எழுத்துக்க ளும் ஏராளம் ஏராளம்...
சங்கத்தின் அப்போதைய மாநிலப் பொதுச்செயலாளர் பேரா. அருணன், என்.நன்மாறன் எம்.எல்.ஏ., எழுத்தாளர் காஸ்யபன் முதலான தலைவர்கள், எழுத்தாளர்கள், கலை ஞர்கள், கவிஞர்கள், கலை இலக்கிய ஆர்வலர்கள் என 220-க்கு மேற்பட்டோர் தில்லிக்குச் சென்று, அங்கு செம்மொ ழிக் கோரிக்கைக்காக ஆர்ப்பாட்டம் நடத்தி, பிரதமர் வாஜ்பா யையும், மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் முரளி மனோகர் ஜோஷியையும் நேரில் சந்தித்துக் கோரிக்கை விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டது. மதிமுக பொதுச் செயலா ளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளு மன்ற உறுப்பினர் பொ.மோகன், காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சுதர்சன நாச்சியப்பன் ஆகியோர் இந்தச் சந்திப்புக்கு அனுமதிபெற உதவியதுடன், கோரிக்கை விண் ணப்பம் சமர்ப்பிப்பதற்கும் உடன்வந்து உதவினர் என்பதை இந்தச் செம்மொழி ஏற்புநாளில் நன்றியுடன் நினைத்துப் பார்க்கிறோம். திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ், மதிமுக, பாமக ஆகிய கட்சி களின் தமிழகத்தைச் சேர்ந்த எட்டு நாடாளுமன்ற உறுப்பி னர்களின் ஆதரவு தெரிவிக்கும் கடிதத்துடன் கோரிக்கை விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டது. தில்லிப் பயணத்தைத் தொடர்ந்து, பிரதமரிடமும், மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சரிடமும் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பத்தின் நகல் தமிழகம், புதுச்சேரியைச் சேர்ந்த 40 மக்களவை உறுப்பினர்களுக்கும் அனுப்பிவைக்கப்பட்டது. அடுத்து நடைபெறவிருக்கும் மக்களவை குளிர்காலக் கூட்டத் தொடரில் தமிழின் உரிமைகள் குறித்துக் குரல் எழுப்புமாறு எம்.பி.க்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது. தமிழை உட னடியாகச் செம்மொழியாக ஏற்று அறிவிக்க வலியுறுத்தி பிரத மருக்குத் தந்திகள் அனுப்பும் இயக்கமும் நடத்தப்பட்டது. “Recognice Tamil as classical language immediately” என்ற வலியுறுத்தல் வரியுடன் தந்திகள் அனுப்பப்பட்டன.
பாஜக அரசின் ஓரவஞ்சனை
முன்னதாக,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மக்களவை உறுப்பினராக தோழர் பொ.மோகன் நாடாளு மன்றத்தில் தனது முதல் பேச்சிலேயே, தமிழ் உயர்தனிச் செம்மொழியாக அறிவிக்கப்பட வேண்டும் என்று முழங்கியது குறிப்பிடத்தக்கது. பல கோடிகள் நிதி ஒதுக்கி 1999-2000 ஆண்டை சமஸ்கிருத ஆண்டாக அறிவித்துக் கொண்டாடிய அன்றைய பாஜக அரசு உயர்தனிச் செம்மொழியாம் தமிழுக்கு 2000-2001 ஆண்டை அவ்வாறு அறிவித்துக் கொண்டாட மறுத்து விட்டது. இந்த ஓரவஞ்சனையை மக்களுக்கு எடுத்துரைத்தது தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் - கலைஞர்கள் சங்கம். ஆண்டுதோறும் 15 சமஸ்கிருத அறிஞர்களுக்கு விருதும், புலமைத் தொகையும் வழங்கப்பட்டு வருவதுபோல் 15 தமிழறி ஞர்களுக்கும் வழங்க வேண்டும் எனவும், சமஸ்கிருத மொழிக் கல்விக்கும் ஆய்வுக்கும் ஆண்டுதோறும் மத்திய அரசு ஏறத்தாழ பத்துக் கோடி ரூபாய் ஒதுக்குவதுபோல் தமிழுக்கும் ஒதுக்கப்படவேண்டும் எனவும் தமுஎகச வலியுறுத்தியது. மத்திய பாஜக அரசு தமிழகத்தின் தமிழ் தொடர்பான- செம்மொழி ஏற்பு தொடர்பான எந்தக் கோரிக்கையையும் ஏற்காமலே இழுத்தடிப்பு செய்து கொண்டிருந்த சூழலில் தான், மத்தியில் அடுத்து வந்த இடதுசாரிகளின் ஆதரவு பெற்ற ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு தமிழ் மொழியைச் செம்மொழியாக ஏற்புசெய்து 2004 அக்டோபர் 12 அன்று நல் அறிவிப்பு வெளியிட்டது.
22 தேசிய மொழிகளில் சமஸ்கிருதம் எனும் ஒற்றை மொழிக்கு மட்டுமே நூறாண்டுகளுக்கு மேலாகச் செம்மொழி அந்தஸ்து இருந்துவரும் நிலையில் அடுத்து தமிழ்மொ ழிக்கும் நியாயமான செம்மொழி நீதி கிடைத்தது. வாராது போல் வந்த மாமணியாகத் தமிழகம் வெற்றியில் திளைத்து மகிழ்ந்தது. 2006-ஆம் ஆண்டு பொங்கல் திருவிழாவை தமிழ்ச் செம்மொழி வெற்றிவிழாவாக தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் - கலைஞர்கள் சங்கம் மாநிலம் முழுவதும் கொண்டாடியது. “தமிழர்களின் உணர்வை தில்லிக்குக் கொண்டுசென்ற முதல் அமைப்பு எம்முடையது எனும் செய்தி தமிழகத்தில் நன்கு பரவியது” என்று ‘கனவுகளின் மிச்சம்’ என்ற தமது நூலில் பேராசிரியர் அருணன் பெருமையுடன் சொல்லியி ருப்பது எவ்வளவு சரியானது! ஆம்; அந்தச் செம்மொழிப் பணி யில் தமுஎகச ‘முதல் அமைப்பு’ எனும் பெருமையுடைத்துதான்!
கட்டுரையாளர் : மூத்த பத்திரிகையாளர், செம்மலர் மூத்த துணையாசிரியர், தமுஎகச முன்னாள் பொருளாளர்