tamilnadu

img

ஆளுங்கட்சி என்ற மமதையில் விவசாயிகளை ஒடுக்க முயற்சிப்பதா? எடப்பாடி அரசுக்கு தஞ்சாவூர் பொதுக்கூட்டத்தில் கடும் எச்சரிக்கை

தஞ்சாவூர்,

தில்லியில் நடைபெறும் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக்குழுவின் அறைகூவலை ஏற்று தஞ்சாவூரில் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் பங்கேற்ற எழுச்சிமிகு போராட்டப் பொதுக்கூட்டம் செவ்வாயன்று மாலை நடைபெற்றது. இப்பொதுக்கூட்டத்தில் பங்கேற்று விவசாயிகள் சங்கங்களின் தலைவர்கள் ஆற்றிய உரைகளின் முக்கிய அம்சங்கள் வருமாறு:

அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு தமிழ் மாநில ஒருங்கிணைப் பாளர் கே.பாலகிருஷ்ணன்: 

நாட்டில் நடக்கும் விவசாயப் போராட்டங்களை பிரதமர் கண்டுகொள்ளவில்லை. குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராடிய சிறுபான்மையினர் இன்று வேட்டையாடப்படுகின்றனர். புலம்பெயர் தொழிலாளர்கள்,கொரோனாவால் வேலை இழந்து  வீடு திரும்பிக் கொண்டி ருந்த போது தெருக்களிலே விழுந்து மடிந்தார்கள். ஆனால் பிரதமர் கண்ணில் ஒரு சொட்டு கண்ணீர் வரவில்லை. போராடிப் பெற்ற உரிமையான தொழிலாளர்களின் 8 மணி நேர வேலை என்பது 12 மணி நேரமாக மாற்ற முயற்சி நடக்கிறது. மோடி ஆட்சியில் போராடிப் பெற்ற உரிமைகள் ஜனநாயக உரிமைகள் சிதைக்கப்படு கின்றன. இந்நிலையில் விவசாயிகளின் போராட்டம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. 

விவசாயிகளின் போராட்டத்தால், யாராலும் வெல்ல முடியாது என்ற மோடியின் பிம்பம் சிதைந்துள்ளது. விவசாயிகள் இதற்காக பெருமைப்பட வேண்டும். கடந்த 20 ஆண்டுகளில் 4 லட்சம் விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். இனி ஒரு உயிர் கூட பறிபோகக்கூடாது. பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் விவசாயிகளின் இந்தப் போராட்டம் தேசத்தையே உலுக்கி உள்ளது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை விவசாயிகள் ஒன்று  திரண்டுள்ளனர்.  250 விவசாய அமைப்புகள் ஒருங்கிணைந்து உள்ளனர். இதனால் மோடி நடுநடுங்கிப் போய் உள்ளார்.தமிழக முதலமைச்சர் சொல்கிறார், ‘விவசாயிகளின் போராட்டம், இடைத்தரகர்களின் போராட்டம்’ என்று. எது இடைத்தரகர்களின் போராட்டம்? இதுவா.. நீங்கள் விவசாயி என சொல்கிறீர்கள், நீங்கள் எந்த விவசாயி, நீங்கள் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலத்தை வைத்துள்ள கார்ப்பரேட் விவசாயி... நாங்கள் ஏழை விவசாயிகள்... உங்கள் நிலைப்பாடு வேறு; எங்கள் நிலைப்பாடு வேறு. அம்பானிக்கும் அதானிக்கும் இடைத்தரகராக இருந்துகொண்டு அவர்கள் சொல்வதை நிறைவேற்றும் உங்களது செயல்பாடுகள், தமிழக விவசாயிகளுக்கு எதிராக இருக்கிறது. அதனால் உங்களை விவசாயிகள் எங்கு சந்திக்க வேண்டுமோ அங்கு சந்திப்பார்கள். 

                                                                  ***********************

மனசாட்சியோடு சொல்லுங்கள்

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச்செய லாளர் டாக்டர் வே.துரைமாணிக்கம்: 

காவல்துறை மட்டும் தடுக்காமல் இருந்திருந்தால், இங்கு இதைவிட பத்து மடங்கு கூட்டம் கூடியிருக்கும். காவல்துறை மூலம் எடப்பாடி அரசு பல தடைகளை ஏற்படுத்தியது. இந்தச் சட்டம் விவசாயிகளை மட்டுமல்ல அனைத்து தரப்பு மக்களையும் பாதிக்கக்கூடிய சட்டமாகும். கிழித்து  குப்பையில் வீசி எறிய வேண்டிய  சட்டமாகும். அதிமுக - பாஜகவில் உள்ள சிறு-குறு விவசாயிகளை கேட்கிறேன். இந்த சட்டத்தால் உங்களுக்கு பாதிப்பு உண்டா, இல்லையா? மனசாட்சியோடு சொல்லுங்கள்...இந்த அபாயகரமான சட்டம் அமலுக்கு வந்தால் விவசாயிகள் அழிந்து போவார்கள். விவசாய நிலம் பறி போகும். கார்ப்பரேட் நிறுவனங்கள் வளரும். இந்திய அரசியல் சட்டத்தை மோடி அரசு துச்சமாக மதித்து தூக்கி எறிகிறது. கோடீஸ்வரன் வீட்டுப் பிள்ளையைத் தூக்கிக் கொஞ்சுவதற்கு நேரம் இருக்கும் நரேந்திர மோடிக்கு, விவசாயிகளை அழைத்துப் பேச நேரமில்லை. இந்த சட்டம் அமலுக்கு வந்தால் விவசாய நிலம் மூன்று பெரிய கம்பெனிகளுக்கு போய்ச்சேரும். விவசாயிகளை அழித்துவிட்டு ஏகபோக கம்பெனிக்கு விவசாய நிலங்களை அளிக்க எடப்பாடி அரசும் மோடி அரசும் திட்டமிடுகிறது. இந்த சட்டங்களை நிராகரித்து, சட்டங்களை திரும்பப் பெறும் வகையில் தமிழக விவசாயிகள் - பொதுமக்கள் ஒருங்கிணைந்து போராட வேண்டும். 

                                                                  ***********************
‘மினி எமர்ஜென்ஸி’

தமிழ்நாடு விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் பெ.சண்முகம், 

தஞ்சையில் மாநிலம் தழுவிய பேரணி பொதுக் கூட்டத்தை நடத்துவது என விவசாயிகள் போராட்டக்குழு முடிவு செய்தோம். தில்லியில் மோசமான பருவ நிலையிலும், குளிரையும் பொருட்படுத்தாமல் போராடிக் கொண்டிருக்கிற விவசாயிகளுக்கு ஆதரவாக இந்தப் போராட்டத்தை நடத்த முடிவு செய்தோம். விவசாயிகளுடைய போராட்டத்தை அலட்சியமாக பார்த்துக் கொண்டிருக்கிற, பேச்சுவார்த்தை என்ற பெயரில் இழுத்தடித்துக் கொண்டிருக்கின்ற மோடி அரசை கண்டிக்கிறோம்.இந்த சட்டத்தை ஆதரித்து,  விவசாயிகளுக்கு மாபெரும் துரோகத்தை செய்திருக்கிறது அதிமுக அரசு. ஆதரவைத் திரும்பப் பெற வேண்டும் என பிரம்மாண்டமான பேரணி-பொதுக்கூட்டம் நடத்த திட்டமிட்டிருந்தோம். கடந்த இரண்டு, மூன்று நாட்களாக இந்த பொதுக்கூட்டத்தை, பேரணியை சீர்குலைப்பதற்காக, தமிழ்நாடு அரசு காவல்துறையை ஏவி, தமிழ்நாடு முழுவதும் ஒரு மினி எமர்ஜென்சி என்கின்ற வகையில் கடுமையான அடக்குமுறையை ஏற்படுத்தியுள்ளனர். வாகன உரிமையாளர்களை மிரட்டுவது, முன்னணி நிர்வாகிகளை கைது செய்வது, ஊர் ஊராகச் சென்று நீங்கள் தஞ்சைக்கு செல்லக்கூடாது என்று மிரட்டுவது என காவல்துறையினர், அனைத்து அத்துமீறல்களையும் செய்தனர்.கடந்த 2 நாட்களுக்கு முன்பாக அதிமுகவின் தேர்தல் பிரச்சாரத்தை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் தொடங்கினர். தமிழகம் முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான அதிமுகவினர் அங்கு கூடினர். கொரோனா விதிமுறைகளுக்கு உட்பட்டுத்தான் அனுமதி தர முடியும் என காவல்துறையினர் கூறுகின்றனர். அதற்கு உட்பட்டுத்தான் கூட்டத்தை நடத்த வேண்டும் என எங்களிடம் எழுத்துப்பூர்வமாக கேட்கின்றனர். கொரோனா விதிமுறை எடப்பாடிக்கு பொருந்தாதா... ஓபிஎஸ்-க்கு பொருந்தாதா... அதிமுகவினருக்கு பொருந்தாதா? சட்டம் அனைவருக்கும் பொதுவானது தானே. அதிமுகவினருக்கு ஒரு சட்டம்; வேளாண் சட்டத்தை எதிர்த்துப் போராடும் எங்களுக்கு ஒரு சட்டமா? 

இந்தியாவிலேயே வேளாண் சட்டத்தை ஆதரிக்கும் ஒரு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மட்டுமே, வேறு எந்த முதலமைச்சரும் இப்படி தினந்தோறும் 4 பக்க அறிக்கை விட்டு ஆதரிக்கவில்லை. உங்களுக்கு அந்தச் சட்டத்தை ஆதரித்துப் பேச எவ்வாறு உரிமை உள்ளதோ, அதேபோல் அந்த சட்டத்தை எதிர்த்து பேச எங்களுக்கும் உரிமை உள்ளது. ஆளுங்கட்சி என்ற மமதையில் விவசாயிகள் போராட்டத்தை ஒடுக்க நினைத்தால் அதற்கான விலையை அதிமுக அரசு கொடுத்தே ஆக வேண்டும். 
பிரதம மந்திரி விவசாயிகளிடம் பேசாமல் டிவி, ரேடியோ, தனக்குத் தானே தனியாக பேசிக் கொண்டிருக்கிறார். உலகிலேயே அதிக பொய் பேசக் கூடியவர் என கின்னஸ் விருது வழங்க வேண்டுமானால் நமது இந்தியப் பிரதமர் மோடிக்கு தான் வழங்க வேண்டும். அந்த அளவுக்கு தினசரி பொய்களையே பேசிக்கொண்டிருக்கிறார்.  ஊடக முதலாளிகளை கையில் வைத்துக்கொண்டு தொடர்ந்து பொய் பேசி வருகிறார். இதனை முறியடிக்க நாம் வீடு வீடாகச் சென்று பிரச்சாரம் செய்ய வேண்டும். இந்த வேளாண் சட்டம் கொண்டு வரப்பட்டால் நாம் உணவுக்காக கையேந்த வேண்டி வரும் என்பதை மக்களிடம் சொல்ல வேண்டும். 

மின்சார திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்டால் இலவச மின்சாரம் ரத்து செய்யப்படும். 22 லட்சம் விவசாய மின் இணைப்புகளுக்கான சலுகை துண்டிக்கப்படும். இலவச மின்சாரத்திற்கு பணம் கேட்டால், தமிழக அரசு பணம் கட்ட தயாராக இருக்கிறதா? 3 வேளாண் சட்டங்களையும் மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும். போராட்டத்தை முடித்து வைக்க வேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கு உள்ளது. டிசம்பர் 30 புதன்கிழமை நடைபெறும் பேச்சுவார்த்தையில் அரசு போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரவில்லை என்றால், போராட்டம் தொடரும் நிலை தவிர வேறு வழி இல்லை. இந்த போராட்டம் வெற்றி பெறவில்லை என்றால், வேறு எந்தப் போராட்டமும், எப்பொழுதும் வெற்றி பெற முடியாது. 

                                                                  ***********************
தமிழகமும் பஞ்சாப்பும்

தஞ்சாவூர் எம்.பி. எஸ்.எஸ்.பழனிமாணிக்கம்: 

வேளாண் விரோத சட்டங்கள் அவசர அவசரமாக நாடாளுமன்றத்திலும் விவாதம் இன்றி கொண்டு வரப்பட்டு ஞாயிற்றுக்கிழமை ஜனாதிபதியின் கையெழுத்து பெற்று கொண்டுவரப்பட்டன. நாட்டில் எந்த ஒரு அரசாவது இரவில் நமக்கு சாதகமான ஒரு சட்டத்தை கொண்டு வந்திருக்கிறதா? இது நமக்கு ஒரு பாதகமான ஒரு சட்டம் என்பதற்கு வேறு என்ன உதாரணம் வேண்டும்? நாட்டில் 70 சதவீதத்திற்கு மேல் உள்ள விவசாயிகளுக்கு ஆதரவான சட்டத்தை நிறைவேற்றி உள்ளதாக மத்திய அரசு பொய் கூறி வருகிறது. இந்தச் சட்டத்தை விவசாயிகளுக்கு விளக்க முடியவில்லை என்றால், இது ஒரு சட்டமா? 

இந்தியாவில் உள்ள 10 சதம் முதலாளிகளிடம் 90 சதம் சொத்துக்களும், வளங்களும் உள்ளன. இந்தப் பணமும் சொத்தும் உள்ள பெரும் முதலாளிகளிடம் நாம் நிலத்தை ஒப்படைத்தால், நம்மை ஆங்கிலேயர் காலத்தைப் போல் அடிமையாக்கி விடுவார்கள். ஒரு காலத்தில் அமெரிக்காவில் இருந்து வந்த புளுத்துப்போன கோதுமையை பயன்படுத்தி வந்த காலத்தில், தமிழகமும் பஞ்சாப்பும் தான் பசுமைப் புரட்சி மூலம் நாட்டிற்கு தேவையான நெல்லை உற்பத்தி செய்து வழங்கின. 
தமிழ்நாட்டில் மட்டும்தான் உணவு கொள்முதலும், பொது விநியோகமும் உள்ளது. இந்த சட்டம் அமலுக்கு வந்தால் நேரடி நெல் கொள்முதல் அடியோடு அழிந்துவிடும். பொதுவிநியோக முறை ஒழிந்துவிடும். விவசாயிகள் மட்டுமல்ல, பொதுமக்களும் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். மேலும், நிலத்திலிருந்து குத்தகைதாரர்கள் அனைவரும் ஒரே இரவில் வெளியேற்றப்படுவார்கள். கோவில் நிலங்கள் அதிகம் இருக்கின்ற மாவட்டங்களில் அவர்கள் எளிதாக ஒப்பந்தம் போட்டுவிடுவார்கள். இந்த சட்டத்தை எந்த ஒரு தனிமனிதனும் ஆதரிக்க முடியாது. பஞ்சாப்பில் விவசாயத்தை ஒரு கௌரவமான தொழிலாக அனைவரும் கருதுகின்றனர். அதனால்தான் அவர்கள் வேளாண் சட்டத்திற்கு எதிராக கொதித்தெழுந்து உள்ளனர். 

                                                                  ***********************

இப்பொழுது நாம் சுதாரிக்கவில்லை என்றால்...

சிபிஐ முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.குணசேகரன்: 

விவசாயிகள் தொடர் போராட்டத்தின் எதிரொலியாக ரயில்வே துறைக்கு ரூ. 1800 கோடி இழப்பு ஏற்படுகின்ற வகையில், இரண்டு மாநிலங்களிலே வீரம் செறிந்த போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இந்த விவசாயச் சட்டங்களால் நமக்கு பாதிப்பு ஏற்படும் என அனைவரும் உணர்ந்துள்ளனர். ஆனால் மோடி, விவசாயிகளுக்கு 2 மடங்கு லாபம் கிடைக்கும்; விவசாயிகள் வளர்ச்சி பெறுவார்கள் என்று மட்டும் திரும்பத் திரும்ப சொல்லிக்கொண்டு இருக்கிறார். ஆனால் எப்படி என்று அதற்கான வழிவகையை அவர் சொல்லவில்லை.  தொழிலாளர் நலச்சட்டங்களாக இருந்தாலும் சரி, அனைத்து பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்குவதாக இருந்தாலும் சரி, அனைத்துமே கார்ப்பரேட் முதலாளிகளுக்கு ஆதரவான ஒன்றாகவே உள்ளது.  இப்பொழுது நாம் சுதாரிக்கவில்லை என்றால் ஆட்டை கடித்து, மாட்டை கடித்து மனிதனை கடிக்கும் நிலையாக ஒட்டுமொத்த அரசுத்துறை நிறுவனத்தையும் தனியாருக்கு விற்று விடுவார்.

                                                                  ***********************

இன்னும் 120நாள் தான்...

தி.மு.க தஞ்சை மத்திய மாவட்டச் செயலாளரும், திருவையாறு சட்டமன்ற உறுப்பினருமான துரை.சந்திரசேகரன்:

எடப்பாடி பழனிசாமி எதுவும் புரியாமல் கோபப்படுகிறார். வேளாண் சட்டங்கள் அமலானால் இலவச மின்சாரம் தொடரும் என உத்தரவாதம் தர முடியுமா? இன்னும் 120 நாள், மூன்று அமாவாசை, மூன்று பௌர்ணமி தான் உள்ளன. அதோடு உங்கள் பதவி முடியப்போகிறது. மாநில அரசு 3 மாதத்திலும், மத்திய அரசு 3 ஆண்டிலும் தூக்கி எறியப்படவேண்டும்.தேர்தல் கமிஷன் அலுவலர்களும் பாஜகவை சேர்ந்தவர்கள். அவர்கள் பாஜகவின் கைப்பாவையாக செயல்படுகின்றனர். அதேபோல் அமலாக்கத்துறை, சிபிஐ அவை மத்திய அரசுக்கு ஆதரவாக உள்ளன. 

                                                                  ***********************

பந்தை அடித்தால்

நாகை எம்.பி. செல்வராசு:

‘அம்பானி, அதானி குடும்பங்கள் விளைநிலங்களை ஆக்கிரமிக்கும் வகையில் தான் வேளாண் சட்டங்கள் கொண்டு வரப்படுகின்றன. விவசாயம் நமது ஊற்றுக்கண். பல கோடி செலவில் புதிய நாடாளுமன்றம், ராம ஜென்மபூமிக்கு பல கோடி ரூபாய் செலவில் அடிக்கல் நாட்டு விழா என விவசாயிகள் போராட்டத்தை திசை திருப்புகின்றனர். நடிகர் திலகம் சிவாஜி  கணேசனின் நடிப்பை மிஞ்சிய வகையில் பிரதமர் மோடி நடித்து வருகிறார்.காவல்துறையை வைத்து விவசாயிகள் போராட்டத்தை அடக்க வேண்டும் என்று நினைக்காதீர்கள். பந்தை அடித்தால் மீண்டும் எழும்பும் என்பது போல போராட்டம் மீண்டும் தொடரும்.


படக்குறிப்பு...  

தஞ்சாவூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக்குழுவின் தமிழ் மாநிலத் தலைவர் கே.பாலகிருஷ்ணன் உரையாற்றினார். மேடையில் பெ.சண்முகம், டாக்டர் வே.துரைமாணிக்கம் உள்ளிட்ட விவசாயிகள் தலைவர்கள்.

;