தஞ்சாவூர்: இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ.நம்மாழ்வார் 6 ஆம் ஆண்டு நினைவு நாளில், கோவை வேளாண் பல்கலைக்கழகத்திற்கு நம்மாழ்வார் பெயர் சூட்ட கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தஞ்சையில் அனைத்து கட்சி மற்றும் இயக்கங்கள் சார்பில் வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் 6 ஆம்ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சி தஞ்சை கீழராஜவீதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் முன்பு திங்கள்கிழமை காலை 10 மணிக்கு தமிழர் தேசிய முன்னணி பொதுச்செயலாளர் அய்னாவரம் சி.முருகேசன் தலைமையில் நடைபெற்றது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஆர்.முத்தரசன் அஞ்சலி செலுத்தி, நிகழ்ச்சியை துவக்கி வைத்து பேசுகையில், “மக்களிடம் இயற்கை வேளாண்மை மீதும், ரசாயன உரமற்ற நஞ்சில்லா இயற்கை உணவு நோக்கியும் மிகுந்த விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. திருமணங்களில் மரக்கன்றுகள் வழங்குவது. மக்கள் தாமாக முன்வந்து கூட்டாக மரக்கன்றுகள் நடுவது என்பது அதிகரித்து வருவது மகிழ்ச்சிக்குரியது. இதற்கு அடித்தளமிட்ட பெருமை நம்மாழ்வாரைச் சேரும்” என்று குறிப்பிட்டு புகழஞ்சலி செலுத்தினார். நிகழ்சியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகர செயலாளர் பி.கிருஷ்ணமூர்த்தி மற்றும் ஜி.கிருஷ்ணன், தமிழ் தேசிய பேரியக்கத்தின் தலைமைக் குழு உறுப்பினர் பழ.ராஜேந்திரன், மக்கள் அதிகாரம் மாநில பொருளாளர் காளியப்பன், தமிழ்தேச மக்கள் முன்னணி மாவட்ட செயலாளர் ப.அருண்சோரி, ஏஐடியூசி மாநிலச் செயலாளர் சி.சந்திரகுமார், மாவட்ட செயலாளர் ஆர்.தில்லைவனம், வெ.சேவையா, தி.கோவிந்தராஜன், ஆர்.பி.முத்துகுமரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் கோவை வேளாண் பல்கலைக்கழகத்திற்கு வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் பெயர் வைக்க வேண்டும், இயற்கை வழி மற்றும் மரபு சார்ந்த விவசாயம், சுற்று சூழல் பாதுகாப்பு உள்ளிட்ட நம்மாழ்வாரின வழிகாட்டுதல்களை தொகுத்து மாணவர்களுக்கு பாடத் திட்டத்தில் கொண்டு வர வேண்டும். காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. நிகழ்ச்சியின் நிறைவில் ஒருங்கிணைப்பாளர் துரை.மதிவாணன் நன்றி கூறினார்.